Last Updated : 25 Jun, 2020 11:03 AM

 

Published : 25 Jun 2020 11:03 AM
Last Updated : 25 Jun 2020 11:03 AM

கிரக தோஷம் விலகும்; தொலைந்த பொருள் கிடைக்கும்!  திருவாதவூர் சனி, பைரவரை வழிபடுவோம்

மதுரையில் இருந்து 24 கி.மீ. தொலைவில் உள்ளது திருவாதவூர். மதுரை ஒத்தக்கடையில் இருந்து கிளை பிரிந்து செல்லும் சாலையில், சுமார் 20 கி.மீ. தொலைவு பயணித்தால், திருவாதவூர் திருத்தலத்தை அடையலாம்.
மாணிக்கவாசகர் அவதரித்த புண்ணியத் திருத்தலம் இது. இங்கே உள்ள ஆலயத்தில் குடிகொண்டிருக்கும் இறைவனின் திருநாமம் திருமறைநாதர். வேதநாயகன். அம்பாளின் திருநாமம் வேதவல்லி.
அருமையான கோயில். அமைதியே உருவெனக் கொண்ட ஆலயம். கோயிலில் நடக்கத் தொடங்கும்போதே, நல்ல நல்ல அதிர்வுகளை உணரலாம். அத்தனை சக்திமிக்க கோயில் என்று சொல்லிச் சிலிர்க்கிறார்கள் சிவனடியார்கள்.
சனி பகவான் இந்தத் தலத்துக்கு வந்து, சிவபெருமானை தவமிருந்து வழிபட்டார். இதனால் வாத நோய் நீங்கப் பெற்றார் சனி பகவான். எனவே, இந்தத் தலத்து இறைவனை வழிபட்டால், கைகால் குடைச்சல், செயல் இழப்பு, பக்கவாதம் முதலான வாத நோய்ப் பிரச்சினைகள் விரைவில் குணமாகும் என்பது ஐதீகம்.
மேலும் இங்கே சனி பகவான் தனிச்சந்நிதியில் கோயில் கொண்டிருக்கிறார். எனவே இங்கு வந்து வாத நோயில் இருந்து விடுபட்ட சனீஸ்வரரையும் வேண்டிக்கொண்டால், சனி கிரக தோஷங்களும் நிவர்த்தியாகும் என்பது நம்பிக்கை.
திருவாதவூரில் மாணிக்கவாசகர் அவதரித்தது விசேஷம். சனி பகவான் நோய் நீங்கப் பெற்றது சிறப்பு. அதேபோல் பைரவரும் இங்கு மகத்துவம் வாய்ந்தராகப் போற்றப்படுகிறார்.

திருக்கயிலையில் பைரவரின் வாகனமான சுவானத்தை (நாய்) மறைக்கச் செய்தார் சிவபெருமான். இதனால் பைரவர், ஈசனிடம் தனது நாய் வாகனம் வேண்டினார். 'திருவாதவூர் சென்று வழிபட தொலைந்த வாகனம் கிடைக்கும்' என அருளினார். கயிலாய மலையில் இருந்து திருவாதவூர் வந்த பைரவர் இங்கே சிவவழிபாட்டுக்காக, தீர்த்தக் குளம் ஒன்றை உருவாக்கினார். அது பைரவர் தீர்த்தம் என்று இன்றைக்கும் அழைக்கப்படுகிறது.

அந்தத் தீர்த்தத்தில் நீராடி திருமறை நாதரை நோக்கி கடும் தவம் மேற்கொண்டார். இதனால் மகிழ்ந்த சிவனார், நாய் வாகனத்தை பைரவருக்கு அருளினார் என்கிறது புராணம். எனவே இங்கு உள்ள பைரவர் மிகுந்த மகிழ்ச்சியுடனும் கனிவுடனும் காட்சி தருகிறார்.
திருவாதவூரில் சந்நிதி கொண்டிருக்கும் பைரவரை எட்டு அஷ்டமியில் வழிபட்டு வந்தால், தொலைந்து போன வாகனங்கள், பொருட்கள் திரும்பவும் கிடைக்கும் என்கிறார்கள் பக்தர்கள்.
அதேபோல், திருமறைநாதர், சனிபகவான், பைரவர் முதலானோரை சந்தர்ப்பம் கிடைக்கும் போது இந்தத் தலத்துக்கு வந்து தரிசித்து, ஐந்து நல்லெண்னெய் தீபம் ஏற்றி வழிபட்டால், சகல தோஷங்களும் நீங்கும் என்பது உறுதி.
வீட்டில் திருவாதவூர் தெய்வங்களை மனதில் நினைத்து விளக்கேற்றி வழிபட்டு வந்தால், தொலைந்து போன பொருட்கள், வாகனங்கள் கிடைக்கும்.
மிகத் தொன்மையான திருவாதவூர் சிவனை வேண்டுங்கள். எல்லா தொல்லைகளில் இருந்தும் விடுபடுவீர்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x