Last Updated : 25 Jun, 2020 09:37 AM

 

Published : 25 Jun 2020 09:37 AM
Last Updated : 25 Jun 2020 09:37 AM

குடும்பமாக ‘சாயிராம்’ சொல்லுங்கள்; கஷ்டங்களைப் போக்குவார் சாயிபாபா! 

இந்தப் பூவுலகின் கண்கண்ட தெய்வம்... சாயிபாபா. குழந்தையின் தேவையறிந்து செய்கிற தாயின் கருணைக்கு நிகரானவர் சாயிபாபா என்று போற்றுகிறார்கள் பக்தர்கள். தன்னை நம்பி வந்து, தன்னிடம் முறையிடும் பக்தர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவார் சாயிபாபா என்று கொண்டாடுகிறார்கள்.
நம் பிரச்சினைகள் எதுவாக இருந்தாலும், கஷ்டங்கள் எப்படிப்பட்டதாக இருந்தாலும் தேவைகள் எனும் எதிர்பார்ப்பு எப்பேர்ப்பட்டதாக இருந்தாலும் குருவுக்கு உகந்த வியாழக்கிழமைகளில், ஞானகுரு சாயிபாபாவை வேண்டிக்கொண்டால் போதும்... மனதாரப் பிரார்த்தனை செய்தால் போதும்... சாயிபாபாவின் அன்பைப் பெறலாம்; அருளைப் பெறலாம்; ஆனந்தமாக வாழலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
உரிய முறையில் வியாழக்கிழமைகளில் விரதம் இருந்து பாபாவைத் துதித்தால் நினைத்து நடக்கும். ஆபத்திலிருந்து நம்மை சாயிபாபா காத்தருள்வார்.
சாயிபாபா விரதத்தை, யார் வேண்டுமானாலும் மேற்கொள்ளலாம். குழந்தைகள், பெரியவர்கள், ஆண்கள், பெண்கள் என எவர் வேண்டுமானாலும் விரதம் இருக்கலாம். மதங்களுக்கு அப்பாற்பட்டவர் சாயிபாபா. இது விரதத்துக்கும் பொருந்தும்.
தொடர்ந்து ஒன்பது வாரங்கள், அதாவது ஒன்பது வியாழக்கிழமைகள், சாயிபாபாவை நினைத்து விரதம் மேற்கொள்ளவேண்டும். இந்த விரதம், சக்தி மிக்க விரதம் என்று சொல்லிச் சிலாகிக்கிறார்கள் பக்தர்கள். தூய்மையான அன்பும் பக்தியும் மட்டுமே விரதத்துக்குத் தேவை. வேறு எந்த படாடோபத்தையும் ஒருபோதும் பாபா விரும்புவதில்லை.
முதலில், வியாழக்கிழமை அன்று குளித்துவிட்டு, பூஜையறையில் சாயிபாபா படத்துக்கு முன்னே அமர்ந்துகொண்டு, சாயிபகவானின் திருநாமத்தைச் சொல்லுங்கள். எந்தக் காரியத்துக்காக, எது தேவை என்று இந்த விரதத்தை மேற்கொள்கிறோமோ அதை மூன்று முறை சொல்லி, பாபாவுக்கு மலர்களைச் சூட்டுங்கள்.
பாபாவின் படத்தை எடுத்து, ஒரு மணைப்பலகையில் கோலமிட்டு வைத்து பூஜிக்கலாம். கோலத்தின் மீது மஞ்சள் துணியை விரித்து, அதன் மேலே சாயிபாபாவின் படத்தை வைத்துக் கொண்டு பூஜிக்கவேண்டும். வீட்டில் பாபாவின் சிலை இருக்கிறதா? அப்படி இருந்தால், அந்த சிலையை நன்றாக நீராட்டவேண்டும். பிறகு பாபாவின் சிலைக்கு சந்தனம் குங்குமம் இட்டு அலங்கரிக்கவும்.
பாபாவுக்கு உகந்த நிறம், மஞ்சள். குருவுக்கு உகந்த நிறம் மஞ்சள்தானே. எனவே சாயிபாபாவின் ஆசனத்தில் மஞ்சள் நிற ஆடை விரிப்பதும் பாபாவுக்கு மஞ்சள் நிற மலர்கள் சூட்டுவதும் விசேஷம்.
வீட்டில் ஒற்றுமை இல்லை, கடன் தொல்லை, குழந்தைகளின் கல்வி, பெரியவர்களுக்கு ஆரோக்கியக் குறைபாடு, நீண்டுகொண்டே இருக்கும் வழக்கு, பிரிந்துவிட்ட தம்பதி என்று என்னென்ன பிரச்சினைகளோ, அந்தக் கவலைகளையெல்லாம் பாபாவிடம் சொல்லி, ஒவ்வொருமுறையும் பூக்களைக் கொண்டு பாபாவை அர்ச்சனை செய்யவேண்டும்.
காலையும் மாலையும் வீட்டில் விளக்கேற்றி, பாபாவின் படத்துக்கு மஞ்சள் பூக்களால் அர்ச்சனை செய்து, உங்கள் பிரார்த்தனைகளைச் சொல்லி, ‘சாயிராம் சாயிராம்’ என்று சொல்லிக் கொண்டே இருங்கள். பாபாவுக்கு சர்க்கரைப் பொங்கல், பால் பாயசம், கேசரி என ஏதேனும் ஒன்று நைவேத்தியம் செய்து, அந்தப் பிரசாதத்தை அக்கம்பக்கத்தாருக்கு வழங்குங்கள்.
ஒவ்வொரு வியாழக்கிழமையும் காலையும் மாலையும் இப்படி சொல்லி பிரார்த்தனை செய்துகொண்டே இருங்கள். பாபாவின் அருளைப் பெறுவீர்கள். உங்கள் இல்லமே, பாபாவின் பேரருளைப் பெறும். பட்ட கஷ்டங்கள் அனைத்தும் பஞ்செனப் பறக்கச் செய்வார் சாயிபாபா.
கூட்டுப் பிரார்த்தனை என்கிற விஷயத்தை சாயிபாபா ரொம்பவே விரும்புவார். எனவே, குடும்பத்தில் உள்ள அனைவரும் அமர்ந்து பாபாவை வழிபடுவது ரொம்பவே சிறப்பானது. குடும்பமாக அமர்ந்து சாயிராம் சொல்லி பாபாவை வணங்குங்கள்; வழிபடுங்கள்; வளம் பெறுங்கள்.


FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x