Published : 23 Jun 2020 02:56 PM
Last Updated : 23 Jun 2020 02:56 PM
தஞ்சையில் உள்ள பங்காரு காமாட்சி அன்னையை மனதார வேண்டிக்கொண்டு விளக்கேற்றினால், மங்கல காரியங்களையெல்லாம் நடத்தித் தருவாள். கடன் தொல்லையில் இருந்து மீட்டெடுப்பாள். வீட்டில் சுபிட்சமும் ஒற்றுமையும் குடிகொள்ளும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
காமாட்சி என்றதும் நம் நினைவுக்கு வருவது காஞ்சியம்பதியில் கோயில்கொண்டிருக்கும் காமாட்சி அன்னைதான். மேலும் மாங்காடு காமாட்சியும் நம் நினைவில் வந்து கொலுவிருப்பாள். காஞ்சிபுரத்தைப் போல், மாங்காடு போல் தஞ்சை நகரிலும் ஆட்சி செய்துகொண்டிருக்கிறாள் பங்காரு காமாட்சி. பங்காரு என்றால் சொர்ணம். தங்கம். அப்படித்தான் தகதகத்துக் காட்சி தருகிறாள் அம்பிகை.
தஞ்சாவூர் மேலவீதியில் அமைந்துள்ளது ஸ்ரீபங்காரு காமாட்சி அன்னை திருக்கோயில். சிறிய கோபுரம், சிறிய கோயில் என அழகுற அமைந்திருக்கிறது ஆலயம். உள்ளே கருவறையில், கருணையே உருவெனக் கொண்டு காட்சி தரும் பங்காரு காமாட்சி அன்னையைத் தரிசித்துக் கொண்டே இருக்கலாம். காஞ்சி சங்கரமடம் மற்றும் இந்து சமய அறநிலையத்துறைக் கட்டுப்பாட்டில் உள்ள ஆலயம் இது.
திருக்கரத்தில் கிளியைத் தாங்கியபடி இடுப்பு வளைந்து நளினத்துடன் காட்சி தருகிறாள். பங்காரு காமாட்சியை எங்கு இருக்கிறோமோ அங்கேயே இருந்தபடி மனதால் நினைத்தாலே போதும்... நமக்கு அருளுவதற்காக ஓடோடி வந்துவிடுவாள் அம்பாள்.
வீட்டிலோ வெளியிலோ எந்தக் கஷ்டமாக இருந்தாலும் அதை அம்மாவிடம் சொல்லி முறையிட்டால், நம் மனம் ஆறுதல் அடையும் அல்லவா. ஏதோ ஒரு நிம்மதி பரவுமில்லையா? எல்லாப் பிரச்சினைகளும் காணாமல் போனது போல் உணர்வு ஏற்படும்தானே. பங்காரு காமாட்சியை செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில், வீட்டில் விளக்கேற்றி வேண்டிக்கொண்டால் போதும், நம் கண்ணீரைத் துடைக்க ஓடோடி வருவாள் பங்காரு காமாட்சி.
பூஜையறையில், 11 ஒரு ரூபாய் காசுகளை எடுத்து அதற்கு மஞ்சள் அட்சத்தையும் குங்குமமும் இட்டு, விளக்கேற்றி பங்காரு காமாட்சியைப் பிரார்த்தித்துக் கொண்டால், கடன் தொல்லையில் இருந்து விடுபடலாம். வீட்டில் உள்ள தரித்திர நிலை மாறும். சுபிட்சம் குடிகொள்ளும். குடும்பத்தில் ஒற்றுமை மோலோங்கும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT