Published : 20 Jun 2020 05:24 PM
Last Updated : 20 Jun 2020 05:24 PM

சனிக்கிழமையில் அமாவாசை; வாசலில் விளக்கேற்றுவோம்! 


சனிக்கிழமையும் அமாவாசையும் இணைந்த நாளில், மாலையில் விளக்கேற்றுவோம். தோஷங்கள் விலகி, சந்தோஷம் பெருகும். வீட்டு திருஷ்டி அனைத்தும் விலகும்.
அமாவாசை தினத்தன்று கடைகளிலும் வீட்டிலும் திருஷ்டி சுற்றிப் போடுவார்கள். மாலை வேளையில், கடைகளில் விளக்கேற்றி, வாசலில் திருஷ்டி கழிக்கும் வகையில், பூசணிக்காயை உடைப்பார்கள்.


இதேபோல், செவ்வாய், வெள்ளிக்கிழமை முதலான சமயங்களில், வீட்டில் விளக்கு வைத்த பின்னர், குடும்பத்தாரை நடு ஹாலில் அமரவைத்து, திருஷ்டி சுற்றிப் போடுவார்கள்.


இதேபோல், நல்லநாள் பெரியநாள் முதலான நாட்களிலும் வீட்டில் திருஷ்டி சுற்றிப் போடுவார்கள்.


அமாவாசை என்பது முன்னோருக்கு உரிய நாள். சனிக்கிழமை சனி பகவானுக்கு உரிய அற்புதமான நாள். அமாவாசையும் சனிக்கிழமையும் இணைந்த இந்த நாளில், வீட்டில் விளக்கேற்றி வழிபடுங்கள். குடும்பமாக அமர்ந்து பிரார்த்தனை செய்யுங்கள்.


மாலையில் வீட்டுப் பூஜையறையில் விளக்கேற்றுங்கள் அதேபோல், வீட்டு வாசலில் விளக்கேற்றுங்கள். வீட்டில் பூஜையறையில் பழமோ கல்கண்டோ சர்க்கரைப் பொங்கலோ வைத்து நைவேத்தியம் செய்து வேண்டிக்கொள்ளுங்கள். குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒன்றாக அமர்ந்து பிரார்த்தனை செய்யுங்கள்.

உங்கள் குலதெய்வப் படங்கள், இஷ்ட தெய்வப் படங்கள் என்றிருந்தால், சுவாமிப் படங்களுக்கு பூக்களால் அலங்கரித்து வழிபடுங்கள். குடும்பத்தாரை ஹாலில் அமரச் சொல்லி, திருஷ்டி சுற்றிப் போடுங்கள். எலுமிச்சையால் சுற்றிப் போடுவதும் அந்த எலுமிச்சையைக் கிள்ளி, நாலாதிசையிலும் எலுமிச்சையை வீசுங்கள். அதேபோல், தேங்காய் கொண்டு சுற்றிப் போடுவதும் மிகுந்த பலனைத் தரும். பின்னர், வீட்டு முச்சந்தியில், தேங்காயை சிதறுகாய் அடித்துவிடவேண்டும்.


வீட்டின் மீது உள்ள தரித்திரம் அனைத்தும் விலகும். சனி மற்றும் கிரக தோஷங்கள் அனைத்தும் நீங்கும். சந்தோஷம் பெருகும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.


FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x