Published : 18 Jun 2020 01:10 PM
Last Updated : 18 Jun 2020 01:10 PM
அப்பனுக்கு பிரதோஷம்; மைந்தனுக்கு கிருத்திகை. சிவனாருக்கு இன்று பிரதோஷம். அதேபோல் முருகப்பெருமானுக்கு கிருத்திகை. எனவே, மாலையில் ;
விளக்கேற்றி வழிபட்டால் விடியல் நிச்சயம். கவலைகள் காணாமல் போகும்.
ஆனிக்கிருத்திகையில் முருகப்பெருமானை நினைத்து விளக்கேற்றுவோம். இன்னல்களில் இருந்து காத்தருள்வான் வெற்றிவேலன்.
செவ்வாயும் வெள்ளியும் முருகப்பெருமானை வணங்கி வழிபடுவது விசேஷம் என்பார்கள். அதேபோல், ஒவ்வொரு மாதமும் வருகிற சஷ்டி திதியில் கந்தவேலனை வணங்கி வந்தால், கஷ்டங்களெல்லாம் தீரும். கவலைகளெல்லாம் பறந்தோடும் என்பது ஐதீகம்.
பொதுவாகவே, சஷ்டியில் விரதம் மேற்கொள்வார்கள் பக்தர்கள். அப்போது விரதமிருந்து முருகப்பெருமானைப் போற்றித் துதிக்கும் நாமங்களைச் சொல்லி பாராயணம் செய்து வேண்டிக்கொள்வார்கள்.
வீட்டில் உள்ள முருகக்கடவுளின் திருவுருவப் படங்களுக்கு செந்நிற மலர்கள் சூட்டி வழிபடுவது விசேஷம். அதேபோல் முருகப்பெருமானுக்கு உகந்த எலுமிச்சை சாதம் நைவேத்தியம் செய்து தங்கள் குறைகளைச் சொல்லி பிரார்த்தனையாக வைப்பார்கள்.
சஷ்டி திதிக்கு நிகரானது கிருத்திகை நட்சத்திரம். மாதந்தோறும் வருகிற கிருத்திகை நட்சத்திரத்தில், முருகப்பெருமானுக்கு விரதம் மேற்கொள்வார்கள். அன்றைய நாளில், இதேபோல் வீட்டில் விளக்கேற்றி, கந்தசஷ்டி கவசம் உள்ளிட்டவற்றை பாராயணம் செய்து வேண்டிக்கொள்வார்கள்.
இன்று வியாழக்கிழமை (18.6.2020) கிருத்திகை. அப்பன் சிவனாருக்கு இன்று பிரதோஷ வழிபாடு. மைந்தன் கந்தனுக்கு இன்று கிருத்திகை வழிபாடு.
சிவபெருமானையும் குரு அம்சமாகச் சொல்கிறது புராணம். மைந்தன் முருகப்பெருமானும் குரு அம்சமாக, அப்பனுக்கே பாடம் சொன்னவனாக, ஞானகுருவாகத் திகழ்கிறான் என்கிறது கந்தபுராணம். எனவே, குருவாரம் என்று சொல்லப்படும் வியாழக்கிழமையில், பிரதோஷம் என்பதால் சிவபெருமானையும் கிருத்திகை என்பதால், முருகக் கடவுளையும் வழிபடுவோம்.
மாலையில், வாசலில் கோலமிடுவோம். பூஜையறையில் விளக்கேற்றுவோம். அரளி முதலான செந்நிற மலர்கள் சூட்டுவோம். முடிந்தால், எலுமிச்சை சாதம் நைவேத்தியம் செய்வது நல்லது. அக்கம்பக்கத்தாருக்கு வழங்கி மகிழ்வோம்.
வேல் கொண்டு நிற்கும் முருகன், வேதனைகளையெல்லாம் தீர்ப்பான். இன்னல்களையெல்லாம் களைவான். கஷ்டங்களையெல்லாம் போக்கி அருளுவான்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT