Published : 16 Jun 2020 12:31 PM
Last Updated : 16 Jun 2020 12:31 PM
- அரவிந்த் சுப்ரமண்யம்
அன்னையின் ஸஹஸ்ரநாமத்தின் முதல் பெயர் ஸ்ரீ மாதா என்பதும், இறுதி நாமாவாகிய லலிதாம்பிகா என்பதும் சேர்ந்து, "ஸ்ரீ மாதா லலிதாம்பிகா" என்றாகி, அகில உலகத்துக்கும், நமக்கும் அவள் அன்னை என்பதே இந்த ஆயிரம் நாமங்கள் கூறும் கருப்பொருள் என்று உணர்த்துகிறது.
உறவுகள் அனைத்திலும் அன்னையே உத்தமமானவள். ஏதும் கேட்கத் தெரியாத குழந்தையாக நாம் இருந்தாலும், அந்தக் குழந்தையின் தேவைகளை தானே அறிந்து பரிந்து வந்து செய்பவள் தேவி.
மனிதப்பிறவிகள் எண்ணிலடங்காதவை. ஒவ்வொரு பிறவிக்கும் ஓர் அன்னையாயின், அன்னைகள் எத்தனை? ஒரு பிறவியின் அன்னைக்கே இத்தனை உயர்வு என்றால், பிறவிகள் அனைத்திலும் தாயாக பரிந்து காக்கும் தயாபரியை விட வேறு யாருக்கு உயர்வு இருக்க முடியும்?
"மாத்ரு தேவோ பவ " என்கிறது வேதம்.
தாயை தெய்வமாக போற்றுதல் உயர்வென்றால், தெய்வத்தை தாயாகவே போற்றுவது அதனினும் உயர்வு.
"ஆதிப்பரம் பொருளின் ஊக்கம்-அதை
அன்னையெனப் பணிதல் ஆக்கம்" என்றானே பாரதி.
சீர்காழி குளக்கரையினிலே மூன்று வயது பச்சிளம் பிள்ளையொன்று பெற்றொரைக் காணாமல் "அம்மா.." என்று அழைத்து ஏங்கி அழுதது. அந்த அழுகைக் குரல் அக்குழந்தையின் சொந்த தாய்க்கு எட்டவில்லை. அங்கிருந்த எந்தத் தாயும் அதைக் கேட்டு வரவில்லை; அங்கிருந்த யாருமே வரவில்லை. உண்மையான "அம்மா" என்றால் யாரோ... அவள் வந்தாள். அம்பிகை வந்தாள். அழுத பிள்ளைக்கு ஞானப்பாலூட்டினாள்; அக்குழந்தையை ஞானசம்பந்தனாக்கினாள்.
அந்த அன்னையே உலகத்தனையும் ஆளும் மஹாராணி. ராணி என்பவள் ஓர் குறிப்பிட்ட எல்லைக்கு தலைவியாக விளங்குபவள். ஆயின் அனைத்து உலகுக்கும், அண்டங்கள் பலவற்றுக்கும் தேவர்க்கும் மூவர்க்கும் அம்பிகையே தலைவி. அவளே ஸ்ரீ மஹாராணி. தன் ஆட்சிக்குட்பட்ட மக்களின் குறையறிந்து, அவற்றை உடன் போக்கி நிறை அருளும் பேரரசி.
அன்னையாகி அமுதூட்டி தாலாட்டுபவள் அரசியாகி குறைகேட்டு இடர்நீக்கி அருள் பொழிகிறாள். அந்த அரசியே ஸ்ரீமத் ஸிம்ஹாஸனேஸ்வரி .
சிறந்த ஸிம்மாசனத்தில் வீற்றிருப்பவள். மஹாராணிக்கு உரிய ஆஸனமே ஸிம்மாஸனம். அதில் வீற்றிருப்பவளே இந்த அரசி. கட்டுக்கடங்காத அதிகாரமும் தலைமையும் அரசுக்கு உண்டு என்பதை உணர்த்துவதே ஸிம்மாசனம். அத்துடன் தர்மத்தின் வடிவமான சிங்கமே அம்பிகை அமர்ந்து பவனி வரும் உகந்த வாகனமாகவும் ஆகிறது.
இந்த ப்ரபஞ்சத்தின் இயக்கம் அனைத்துமே படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் எனும் ஐந்து செயல்களுக்கு உட்பட்டவை. இந்த ஐந்தொழிலும் புரியும் அம்பிகையை இந்த நாமங்கள் உணர்த்துகின்றன.
ஸ்ரீ மாதா - ஸ்ரீ மஹாராஞ்ஞி - ஸ்ரீ மத் ஸிம்மாஸனேச்வரீ எனும் மூன்று நாமங்களும் முறையே ஸ்ருஷ்டி- ஸ்திதி - ஸம்ஹாரம் எனும் அம்பிகையின் மூன்று செயல்களை உணர்த்துகின்றன. லலிதா ஸஹஸ்ரநாமத்தின் மற்ற 997 நாமங்களும் அவளது திரோதான அனுக்ரஹங்களை உணர்த்துகின்றன.
அவளே தேவகார்ய ஸமுத்யதா என்கிறது ஸஹஸ்ரநாமம்.
தர்ம சக்தியான தேவர்களுக்கு அதர்மத்தின் வடிவான அரக்கரால் துன்பம் உண்டாகும் போதெல்லாம் தர்மத்தை நிலைநிறுத்த தேவர்க்கு உதவிடும் மார்க்கமாய் தேவி தோன்றுகிறாள்.
உலகெங்கும் இன்று தர்மம் குறைந்து அதர்மம் தலைதூக்கிய காரணத்தினாலேயே புதுப்புது பிரச்சினைகள் தலைதூக்கி இருக்கின்றன.
நோயின் கொடுமை ஒரு புறம், அறமற்ற செயல்கள் ஒரு புறம், வன்கொலை, களவு, சூது என மனிதாபிமானமற்ற செயல்கள். இத்தனைக்கும் நடுவே நாம் பயந்து வாழும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு விட்டோம். மொத்த உலகமும் இன்று பயத்தோடே ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்கிறது. இனி பயமே வாழ்க்கையாகி விடுமோ என்றொரு பயம் தோன்றி கவலை தருகிறது.
பயாபஹா என்கிறது ஸஹஸ்ரநாமம். பயத்தைப் போக்குபவள் என்று அர்த்தம்.
ஒரு துன்பத்தை விட - அந்தத் துன்பத்தை எண்ணி ஏற்படும் பயம் இன்னும் கொடுமையானது. மரணத்தை விட மரணபயம் கொடுமையானது. அந்த பயத்தால் வருவதே கவலை. கவலை தரும் நினைவே சிந்தை.
சிதா தஹதி நிர்ஜீவம் சிந்தா தஹதி ஜீவிதம் எனும்படி, உயிரற்ற உடலை எரிப்பது நெருப்பு. ஆனால் உயிருடன் எரிப்பது கவலை.
அம்பிகையானவள், பக்தரின் கவலையையும் அழிப்பவள். எங்கு எப்போது மனத்தின் சஞ்சலம் ஏற்பட்டு பயம் ஏற்பட்டாலும், அன்னையை நினைத்த மாத்திரத்தில் சகல விதமான பயங்களையும் போக்கி மனத்தெளிவை அருளுவாள்.
"துர்க்கே ஸ்ம்ருதா ஹரஸீ பீதிம் அஸேஷ ஜந்தோ :" (சப்தசதி)
அம்புக்கும் தீக்கும் விடத்துக்கும் நோவுக்கும்
அச்சமில்லாதபடி
உம்பர்க்கு மிம்பர்க்கும் வாழ்வு தரும் பதம்
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் என்கிறார் பாரதியார்.
துன்பத்தை அழிப்பதோடு நிற்காமல் இன்பத்தை அள்ளித் தருபவளும் அவளே! அவளை வழிபட ஒவ்வொரு நாளும் சிறப்பானது. அதிலும் சில நாட்கள் விசேஷமான பலனைத் தருவது.
இன்று பௌமாஸ்வினி = பௌமனான செவ்வாய் கிழமையும், அசுவதி நட்சத்திரமும் கூடும் நாள். அம்பாளின் வழிபாட்டுக்கு மிகவும் உகந்த நாள்.
அம்பிகையின் முன் விளக்கேற்றி தேவி அதர்வசீர்ஷத்தை ஓதினால் மஹா ம்ருத்யுவைக் கூட ஓடச்செய்திடும்.
இன்று நம்மால் இயன்ற வகையில் அவளை வழிபடுவோம். துதிகளைச் சொல்லுவோம். போற்றி வணங்குவோம்.
நமக்கெல்லாம் அன்னை அவள். எதைக் கேட்டாலும் நாம் கேட்பதற்கும் மேலே கொடுத்து விடுபவள் அன்னை. ஆயின் அவளிடம் கேட்க நமக்குத்தான் அறிவோ தகுதியோ இல்லை. நாம் கேட்டாலும் கேளாது போனாலும் நமக்கு எது நன்மையோ அதை வாரிக் கொடுக்கும் கருணைக்கடல் அவள்.
இன்றிருக்கும் சூழ்நிலையில் அவளிடம் என்ன கேட்கவேண்டுமென்று கூட நமக்குத் தெரியாது. ஆனால் அவளை சரணடைந்து விட்டால் போதும். நமக்கு என்ன கொடுக்க வேண்டுமென்று அவளுக்குத் தெரியும்.
மந்திரமோ, தந்திரமோ, ஸ்தோத்திரமோ அறிய வேண்டாம். பூஜையோ, தியானமோ, பஜனையோ தெரிய வேண்டாம். முத்திரையோ, அர்ச்சனையோ, அபிஷேகமோ செய்ய வேண்டாம். அழக்கூடத் தெரியாமல் போனாலும் பரவாயில்லை. ஆனால் அவள் பார்த்துக் கொள்வாள் என்ற நம்பிக்கையும் சரணாகதியும் இருந்தால் போதும். அது துன்பத்தையெல்லாம் போக்கும் என்ற உண்மை புரிந்துகொண்டால் போதும்.
ஏதும் அறியாத குழந்தை அழுதால், அது பசிக்கு அழுகிறதா, பூச்சி கடித்து அழுகிறதா, வயிற்று வலியால் அழுகிறதா, தன்னை பார்க்க வேண்டி அழுகிறதா என்று அன்னைக்கு தெரியாதா என்ன?
நம்பினார் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு.
அம்பிகையை சரண்புகுந்தால் அதிக வரம் பெறலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT