Published : 12 Jun 2020 09:20 AM
Last Updated : 12 Jun 2020 09:20 AM
வைகாசி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையான இன்று, மகாலட்சுமியை, அம்பிகையை வழிபடுவோம். மங்காத செல்வங்களைத் தந்திடுவாள் தேவி.
வைகாசி மாதம் என்பது அற்புதமான மாதம். அம்பாளுக்கும் முருகப்பெருமானுக்கும் உகந்த வைபவங்கள் கொண்ட மாதம். இந்த மாதத்தின் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் வெள்ளிக்கிழமையும் அம்பாளை உபாஸித்து அருளைப் பெறலாம் என்று சக்தி உபாஸகர்கள் தெரிவிக்கிறார்கள்.
வைகாசி விசாகம் உள்ளிட்ட செவ்வாய், வெள்ளி, ஞாயிறு முதலான நாட்களில், தேவியை மனதாரத் தொழுவது அம்பாளின் அருளைப் பெறலாம். அவளின் சாந்நித்தியத்தை உணரலாம்.
அதேபோல், சக்தியின் மற்றொரு வடிவமான துர்கையை, ராகுகாலவேளையில் எலுமிச்சை தீபமேற்றி வழிபடுவதும் மிகுந்த பலன்களைத் தந்தருளக் கூடியது.
இந்தநாட்களில், அம்பாளுக்கு சர்க்கரைப் பொங்கல், பால் பாயசம் நைவேத்தியம் செய்து வழிபடுவது மகத்தான பலன்களைத் தரும்.
அம்பாளுக்கு உகந்த அரளி மாலையைச் சூட்டி வழிபடுங்கள், அல்லது செந்நிற மலர்களைக் கொண்டு தேவியை அழகுப்படுத்துங்கள். வைகாசி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை இன்று. இந்த நன்னாளில், காலையும் மாலையும் விளக்கேற்றுங்கள். லலிதா சகஸ்ரநாமம் பாராயணம் செய்யுங்கள். அபிராமி அந்தாதியைப் படியுங்கள்.
சில்லறைக் காசுகளை ஒரு தட்டில் வைத்துக் கொள்ளுங்கள். முன்னதாக அந்தத் தட்டில் கோலமிடுங்கள். அதில் சில்லறைக் காசுகளை வைத்துவிடுங்கள். காசுகளுக்கு சந்தனம் குங்குமமிடுங்கள். மஞ்சளும் அரிசியும் கலந்த அட்சதைகளை அதில் இடுங்கள்.
மகாலட்சுமி ஸ்தோத்திரம் சொல்லுங்கள். அம்பிகையின் திருநாமங்களைச் சொல்லுங்கள். அம்பாள் படங்களுக்கும் சில்லறைக் காசுகளுக்கும் தீப தூப ஆராதனைகளைச் செய்யுங்கள். மனமார வேண்டிக்கொண்டு, நமஸ்கரியுங்கள்.
அம்பாளுக்கு சர்க்கரைப் பொங்கல் விசேஷம். பால் பாயசம் அல்லது அவல் பாயசம் ரொம்பவே விருப்பமானது. இதில் ஏதேனு ஒரு இனிப்பை நைவேத்தியமாகப் படைத்து, அக்கம்பக்கத்தாருக்கு குறிப்பாக, குழந்தைகளுக்கு வழங்குங்கள்.
மங்காத செல்வத்தைத் தந்திடுவாள் தேவி. மங்கல காரியங்கள் அனைத்தையும் நடத்தித் தருவாள் அம்பிகை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT