Published : 11 Jun 2020 12:24 PM
Last Updated : 11 Jun 2020 12:24 PM
காலண்டரில், பஞ்சாங்கத்தில் ஹோரை என்றிருக்கும். நிறையபேருக்கு ஹோரை என்பதை அறிவதே இல்லை. ஹோரை அறிந்து செயல்படுபவன், பக்தியிலும் ஒழுக்கத்திலும் கல்வியிலும் தொழிலிலும் சிறந்துவிளங்குவான் என்கிறார்கள் சித்தர் பெருமக்கள். ஆச்சார்யர்களும் இதையே வலியுறுத்துகின்றனர்.
நம் வீட்டில் எந்தவொரு சுபநிகழ்ச்சி நடத்துவதாக இருந்தாலும், அதில் சுபஹோரை பார்த்தே நடத்தப்படுகிறது. கல்யாணம், காதுகுத்து, கிரகப்பிரவேசம், புதிதாக குடித்தனம், வளைகாப்பு, பெண்பார்க்கும் படலம், புதிதாக தொழில் தொடங்குவது, முதன்முதலாக முடி இறக்குவது, வீட்டில் நடைபெறும் அனைத்து சுபகாரியங்கள் உள்ளிட்டவை சுப ஹோரை பார்த்துதான் நடத்தப்படுகின்றன என்கிறார் மணிகண்ட சாஸ்திரிகள்.
ஜாதகரின் லக்னத்திற்கு, ராசிக்கு அடுத்து சுபஹோரை என்கிற ஒருமணி நேரம் உள்ளது. இது மிக மிக முக்கியம் . குரு, சுக்கிரன், சந்திரன், புதன் நல்ல ஹோரைகள். மற்றபடி சூரியன், செவ்வாய், சனி நல்ல ஹோரைகள் அல்ல என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
சூரிய ஹோரையிலும் சந்திர ஹோரையிலும் என்னென்ன செய்யலாம், என்னென்ன செய்யக்கூடாது என்று ஜோதிட சாஸ்திரம் சொல்லியிருக்கிறது.
முதலில் சூரிய ஹோரையைப் பார்ப்போம்.
சூரிய ஹோரையில், சுபகாரியங்கள் செய்யவும் புதிதாக எந்த அலுவல் பணி புதிய தொழில் தொடங்குவதற்கு ஏற்றதல்ல.
ஆனால் இந்த ஹோரையில் உயில் எழுதலாம். சொத்து விருத்தியாகும். நம் வீட்டில் உள்ள பெரியோர்கள், ஊரில் உள்ள வயதானவர்கள் ஆகியோரை வணங்கி ஆசீர்வாதம் பெறலாம். மற்றவரின் சிபாரிசு பெறலாம். நம்பிக்கையானவர்களிடம் ஆலோசனைகளைப் பெறலாம்.
இதேபோல, அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள் சாதகாமாவதற்கும் சூரிய ஹோரை உகந்தது. வழக்கு தொடர்பான விஷயங்களை மேற்கொள்ளலாம்.
இன்னொரு விஷயம்... சூரிய ஹோரை நடக்கும் நேரத்தில் பொருள் ஏதேனும் காணாமல் போனால் கிடைப்பது மிகவும் அரிது. அப்படி ஒருவேளை கிடைத்தால், தாமதமாகக் கிடைக்கும் என்றும் கிழக்கு திசையில் கிடைக்கும் என்றும் சொல்லியுள்ளது ஜோதிட சாஸ்திரம்.
சந்திர ஹோரையில் என்னென்ன செய்யலாம்?
சந்திர ஹோரை காலத்தில், எல்லா சுபகாரியங்களையும் செய்யலாம் என்கிறார்கள் ஆச்சார்யர்கள். குறிப்பாகப் பெண்கள் தொடர்புகொண்ட சுப விசேஷங்களுக்கு மிகவும் உன்னதமான காலம்.
சந்திர ஹோரைகளில் புதிய தொழில் தொடங்கலாம். லாபம் பெருகும். தொழில் விருத்தியாகும். வர்த்தகம் தொடங்கவும் உகந்த நாள். அதேபோல, வியாபார விஷயமான பயணங்கள் மேற்கொண்டால், அவை வெற்றியாகத்தான் முடியும்.
சந்திர ஹோரையில், ஆன்மிகப் பயணம் மேற்கொள்ளலாம். பெண்பார்க்கும் வைபவம் நடத்தலாம். நல்ல வாழ்க்கைத் துணையாக அமைய இதுவே காரணமாக அமையும். திருமணம் முதலான சடங்குகள் செய்யலாம். இல்லறம் சிறக்கும். வளைகாப்பு நடத்தலாம். நல்ல சத்தான வித்தாக குழந்தை பிறக்கும். சேமிக்கத் தொடங்குவதை சந்திர ஹோரையில் செய்வது ரொம்பவே சிறப்பு வாய்ந்தது. சேமிப்பு விருத்தியாகிக்கொண்டே இருக்கும்.
வேலைக்கு விண்ணப்பிக்கலாம். நல்ல உத்தியோகமும் கைநிறைய சம்பளமும் கிடைக்கப் பெறலாம்.
குறிப்பாக, வளர்பிறை காலத்தில் சந்திரன் ஹோரையில் செய்யப்படும் காரியங்கள் அனைத்துமே மிகச்சிறப்பான வெற்றியைத் தரக்கூடியவை. சந்திரபலம் என்பது இந்த சந்திர ஹோரைக்கும் பொருந்தக் கூடியது என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT