Published : 10 Jun 2020 04:06 PM
Last Updated : 10 Jun 2020 04:06 PM
கும்பகோணம் அருகில் உள்ளது நாச்சியார்கோவில். இந்த ஊருக்கு அருகில் உள்ள சின்னஞ்சிறிய கிராமம் திருச்சேறை. சைவமும் வைணவமும் கோகோத்த புண்ணியத் திருத்தலம் இது. இங்கே, சாரபரமேஸ்வரர் கோயிலும் உள்ளது. சாரநாத பெருமாள் கோயிலும் உள்ளது.
மூலவரின் திருநாமம் சாரநாத பெருமாள். தாயாரின் திருநாமம் சாரநாயகித் தாயார், பஞ்சலக்ஷ்மித் தாயார். திருச்சாரம் என புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள திருச்சேறையில், திருமங்கை ஆழ்வார் மங்களாசாசனம் பாடிய திருத்தலமாகத் திகழ்கிறது சாரநாதப் பெருமாள் கோயில்.
இங்கே, இந்தத் தலத்தில் ஐந்து தேவியருடன் சேவை சாதிக்கிறார் பெருமாள். அதாவது, ஸ்ரீதேவி, பூதேவி, ஸ்ரீமகாலட்சுமி, சாரநாயகி, ஸ்ரீநீலாதேவி என்று இங்கு அருள்பாலிக்கின்றனர். நின்ற திருக்கோலத்தில், கிழக்குப் பார்த்தபடி காட்சி தரும் பெருமாளின் அழகைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.
இங்கே உள்ள தீர்த்தமும் விசேஷம். சார புஷ்கரணி எனப்படுகிறது. இந்தப் புஷ்கரணியின் மேற்குக் கரையில், காவிரித்தாய், ஸ்ரீபிரம்மா, அகத்தியமுனி ஆகியோருக்கு சந்நிதிகள் அமைந்துள்ளன. கோயிலின் உள் பிராகாரத்தில், பால சாரநாதன், நரசிம்மர், ருக்மிணி, சத்யபாமா, ஆண்டாள், ஸ்ரீராஜகோபாலன், ஸ்ரீஆஞ்சநேயர், ஸ்ரீராமன், கூரத்தாழ்வார், உடையவர், நம்மாழ்வார், சீனிவாசப் பெருமாள், ஆழ்வார்கள் முதலானோருக்கு சந்நிதிகள் அமைந்துள்ளன.
மூலவர் பெருமாளின் வலப்பக்கமாக மார்க்கண்டேயர் இருக்கிறார். அவரது முக்தி ஸ்தலம் இது. உப்பிலியப்பன் மார்க்கண்டேயரின் மகளான பூதேவியை திருமணம் செய்து கொண்டார்.
மன்னார்குடியில் உள்ள ராஜகோபாலசுவாமி கோயிலின் திருப்பணிக்காக நாயக்க மன்னர் வண்டிகள் நிறைய பொருட்களை அனுப்பி வைத்தார். அந்த வண்டிகள் இந்தத் தலத்தின் வழியாக சென்றன. அவற்றை அழைத்துச் சென்ற நரசபூபாலன் என்பவர் ஒவ்வொரு வண்டியில் இருந்தும் ஒரு கல்லை மன்னருக்குத் தெரியாமல் இந்தத் தலத்தின் திருப்பணிக்காக இறக்கிவைத்தார்.
மன்னருக்கு விஷயம் தெரிந்தது. அதனால் நரசபூபாலன் நடுநடுங்கிப் போனான். பெருமாளை சரணடைந்தான். மணவாள நாயக்கர் மன்னன் இத்தலத்திற்கு வந்து கோயிலைக் கண்டார். அப்போது, அங்கே, திருச்சேறையில், மன்னனுக்கு மன்னார்குடி ராஜகோபாலனாக காட்சி கொடுத்தார் பெருமாள். இதில் நெக்குருகிப் போன மன்னன் இந்தக் கோயிலுக்கும் திருப்பணிகள் மேற்கொண்டான் என்கிறது ஸ்தல வரலாறு.
உலகம் அழியும் பிரளய காலத்தில் பிரம்மா திருச்சேறை திருத்தலத்தில் இருந்து மண்ணை எடுத்து அதனுள் வேதங்களை வைத்து காப்பாற்றினார் என்கிறது புராணம். இந்தத் தலத்தின் மண்ணானது, மிகுந்த சாரம் மிகுந்தது. ஆகவே பெருமாள் சாரநாத பெருமாள் என அழைக்கப்பட்டார். இதுவே பின்னாளில், திருச்சேறை என்றும் சாரநாத பெருமாள் என்றும் மருவியதாகச் சொல்கிறது ஸ்தல வரலாறு.
“ அனைவரின் பாவங்களையும் போக்குவதால் கங்கையையே உயர்வாகச் சொல்லுகிறார்கள். இப்படியான பெருமை எனக்கும் வேண்டும்’ என காவிரித்தாய், இங்கே உள்ள மேற்குக்கரையில், தவமிருந்தாள். இதனால் ஒரு குழந்தையின் வடிவில் காவிரித்தாயிடம் வந்து, அவளின் மடியில் அமர்ந்தார் பெருமாள். பின்னர், ஐந்து தேவியருடன் கருட சேவையாற்றி அருளினார். அன்று முதல், கங்கைக்கு நிகராக காவிரியும் போற்றப்படலானாள்.
எந்த வைஷ்ணக் கோயிலிலும் இல்லாத ஒன்றாக, தைப்பூச திருவிழா இங்கே விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. மேலும் அப்போது, காவிரித்தாய்க்கு பிரமாண்டமான விழாவும் பூஜைகளும் நடைபெறுகின்றன என்பதும் சிறப்பு வாய்ந்தது.
திருச்சேறை பெருமாளை ஒருமுறையேனும் வழிபட்டால், காவிரியில் 108 முறை நீராடிய பலன் கிடைக்கும் என்றும் நம் பாவங்களெல்லாம் தொலையும் என்றும் ஆச்சார்யர்கள் சொல்கிறார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT