Published : 10 Jun 2020 02:55 PM
Last Updated : 10 Jun 2020 02:55 PM
’கடன்பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்’ என்கிறது கம்ப ராமாயணம். கடன்பட்டவர் போல் பதைபதைப்புக்கு ஆளாபவர்கள் இல்லை. அவர்களைப் போல தவித்துக் கலங்குபவர்கள் இல்லை. அப்பேர்ப்பட்ட கடன் பிரச்சினையில் இருந்து மீள்வதற்குத்தான் மைத்ர முகூர்த்தம் இருக்கின்றன என்கிறது ஜோதிட சாஸ்திரம்.
கடன் என்பது கர்மவினைகளால் ஏற்படுவது என்று அதே சொல்லும் ஜோதிட சாஸ்திரம், அதற்குப் பரிகாரமாக உள்ள மைத்ர முகூர்த்தத்தையும் விவரித்துள்ளது. கடன், நோய், எதிரி, துன்பங்கள், மன உளைச்சல் என வாழ்வில் ஒவ்வொரு விதமாக எதையோ அனுபவித்து உழன்றுகொண்டுதான் இருக்கிறோம்.
இது கலிகாலம். இ எம் ஐ காலம். இருபது வருடங்களுக்கு முன்பு, நூற்றுக்கு பத்துபேர் கடன் வாங்கினார்கள். ஆனால் இன்றைக்கு நூற்றுக்கு பத்துபேர்தான் கடன் வாங்காமல் இருக்கிறார்கள். இப்போது ஏதேனும் ஒன்றுக்காக, வீடு, இருசக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம், தொழில், வியாபாரம் என ஏதேனும் ஒன்றுக்காகக் கடன் வாங்கிக் கொண்டிருக்கிறோம்.
ஒருகட்டத்தில், இந்தக் கடனே நம் நிம்மதியைக் குலைத்துப் போடுகிறது. சந்தோஷமாக இருப்பதற்காக வாங்குகிற கடனே, நம் சந்தோஷங்களைக் கபளீகரம் செய்துவிடுகிறது. நிம்மதியில்லாமலும் தூக்கமில்லாமலும் எத்தனையோ பேர், கடனால் மருகிக் கலங்கிக் கொண்டிருக்கின்றனர்.
‘மாடா உழைக்கிறேன். குருவி சேக்கறா மாதிரி சேக்கறேன். சேர்த்து சேர்த்து கடனை அடைக்கிறேன். ஆனா தீர்ந்தபாட்டைக் காணோம்’ என்று புலம்பாதவர்களே இல்லை. ‘ஜாண் ஏறினா முழம் சறுக்குதுப்பா’ என்று கண்ணீர் விடும் குடும்பங்களே இங்கு அதிகம்.
இவர்கள், கடனை அடைப்பதற்காகவும் கடனில் இருந்து மீள்வதற்காகவும் அமைந்ததுதான் மைத்ர முகூர்த்தம். ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் மூன்று நாட்கள் மைத்ர முகூர்த்தம் வரும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள். அந்த மூன்று நாளில், இரண்டிரண்டு மணி நேரங்கள், மைத்ர முகூர்த்தம். அந்த நேரத்தில், கடன் தொகையில் சிறுதொகையைக் கொடுத்து வந்தால்... விரைவிலேயே முழுக் கடனையும் அடைக்கலாம். மகிழ்ச்சியுடன் கடனின்றி வாழலாம்!
இந்தச் சிறு தொகையை நேரடியாகச் சென்றுதான் கொடுக்கவேண்டும் என்றில்லை. அவர்களின் வங்கிக் கணக்கில் சேர்க்கலாம். ஆன்லைன் மூலம் சேர்க்கலாம். அந்த வசதிகள் இல்லை, நேரில்தான் கொடுக்கவேண்டும் எனும் நிலையில், அவர்களுக்கு கொடுக்க நினைக்கும் சிறுதொகையை, பூஜையறையில் வைத்துவிட்டு, பிறகு கொடுக்கலாம்.
செவ்வாய்க்கிழமையும் அஸ்வினி நட்சத்திரமும் சேர்ந்து வரும் நாள், மேஷ லக்னம் அமைந்துள்ளதே மைத்ர முகூர்த்தம் எனப்படுகிறது.
செவ்வாய்க்கிழமையும் அனுஷ நட்சத்திரமும் சேர்ந்து வரும் நாள், விருச்சிக லக்னம் அமைந்துள்ளதே மைத்ர முகூர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. ஒருவேளை, லக்கினமும் நட்சத்திரமும் இணைந்து, செவ்வாய்க்கிழமை அமையாது போனாலும் 75 சதவிகிதப் பலன்கள் நிச்சயம் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
வரக்கூடிய மைத்ர முகூர்த்த நாட்களைக் குறித்துச் சொல்லியிருக்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
மைத்ர முகூர்த்த நேரங்கள் :
ஜூன் மாதம் 16ம் தேதி செவ்வாய்க்கிழமை அதிகாலை 2 முதல் 4 மணி வரை.
ஜூலை மாதம் 7ம் தேதி வியாழக்கிழமை, மாலை 3.05 முதல் 5.05 மணி வரை.
ஜூலை மாதம் 13ம் தேதி திங்கட்கிழமை, மாலை 3.05 முதல் 5.05 மணி வரை.
ஜூலை மாதம் 18ம் தேதி சனிக்கிழமை காலை 6.08 முதல் 8.08 மணி வரை.
மதியம் 12.08 முதல் 2.08 மணி வரை.
அதேநாளில், மாலை 6.08 முதல் இரவு 8.08 மணி வரை.
ஜூலை 29ம் தேதி, புதன்கிழமை மதியம் 1.52 முதல் 3.52 மணி வரை.
இந்தநாட்களில், இந்த நேரத்தில், யாருக்கு நீங்கள் கடன் கொடுக்கவேண்டுமோ, அந்தக் கடன் தொகையில் உங்களால் முடிந்த தொகையை அன்றைய நாளில், அந்த நேரத்தில் செலுத்துங்கள். விரைவில் கடன் தொல்லையில் இருந்தும் பிரச்சினையில் இருந்தும் சிக்கலில் இருந்தும் விடுபடுவீர்கள் என்கிறது ஜோதிட சாஸ்திரம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT