Published : 05 Jun 2020 12:32 PM
Last Updated : 05 Jun 2020 12:32 PM
திக்குதிசை தெரியாமல் தத்தளிக்கும் வாழ்க்கை என்று சொல்லாதவர்களே இல்லை. இந்தக் காலகட்டம், எல்லோரையும் அப்படித்தான் சொல்ல வைத்திருக்கிறது. அப்படி திக்கு எது, திசை எங்கே தெரியாமல் தவித்துக்கொண்டிருக்கும் சூழலில், நமக்கு வழிகாட்டியா இருக்கிறான் வடிவேலன். வழிக்குத் துணையாக இருக்கிறான். வழியாகவே இருந்து அருள்பாலிக்கிறான்.
திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்துக்கு அருகில் உள்ள ரவுண்டானா பகுதியில், சாலைக்கு அருகில் இருந்துகொண்டு, அருள்பாலிக்கிறான் வெற்றிவேலன். இதனால்தான் இந்தக் கோயிலின் முருகப்பெருமானுக்கு, வழிவிடு முருகன் என்றே திருநாமம் அமைந்தது.
கீர்த்தி பெரிது என நாம் உணரும் வகையிலான ஆலயம். மிகச்சிறிய கோயில். அழகே உருவெனக் கொண்டு, அற்புதமாகக் காட்சி தருகிறான் வடிவேலன். செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழிவிடு முருகனை வேண்டிக்கொண்டால், நினைத்தது நடக்கும் என்பது ஐதீகம்.
அதேபோல், கார்த்திகை நட்சத்திரம், விசாகம் நட்த்திரம் முதலான நாட்களில், முருகனை வேண்டிக்கொள்கின்றனர் பக்தர்கள்.
அருகில் உள்ள கடைக்காரர்கள் சாவியை வைத்து வேண்டிக்கொண்டு கடையைத் திறக்கிறார்கள். வியாபாரம் சிறக்கும் என்கிறார்கள். அதேபோல், மருத்துவமனையில் உறவினர்களை சேர்த்திருப்பவர்கள், இங்கு வந்து முருகனுக்கு சிதறுகாய் சமர்ப்பித்து வேண்டிக்கொண்டால், நோயாளிகள் விரைவில் குணமடைவார்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
பொருட்கள் திருட்டு போனாலோ, புதிதாக வண்டி வாகனம் வாங்கினாலோ முருகனிடம் வேண்டிக்கொண்டு, பிரார்த்திக்கின்றனர். விரைவில் இழந்த பொருளோ பதவியோ கெளரவமோ கிடைக்கும் என்பது உறுதி.
வழிவிடு முருகனை வேண்டிக்கொண்டு, வீட்டில் எலுமிச்சை சாதத்தை முருகனுக்கு நைவேத்தியம் செய்து, நான்குபேருக்கேனும் எலுமிச்சை சாதம் வழங்கினால், குடும்பத்தில் ஆரோக்கியம் பெருகும். தம்பதி ஒற்றுமை மேலோங்கும். குழந்தைகளின் கல்வி சிறக்கும். நல்ல உத்தியோகம் கிடைத்து, இனிதே வாழலாம் என்கின்றனர் முருக பக்தர்கள்.
எவ்வளவு பிரச்சினையாக இருந்தாலும் வழிவிடும் முருகன் சந்நிதியில் வந்து, இரண்டு நிமிடம் கண்மூடி வேண்டிக் கொள்ளுங்கள். வீட்டில் முருகனுக்கு விளக்கேற்றி, மனதார வேண்டிக்கொள்ளுங்கள். மஞ்சள் துணியில் ஒருரூபாய் முடிந்து வைத்து, பிரார்த்தனை செய்யுங்கள். வேதனைகளையும் துக்கங்களையும் போக்கி அருள்வான் வழிவிடும் முருகன்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT