Published : 05 Jun 2020 11:54 AM
Last Updated : 05 Jun 2020 11:54 AM
ஆரோக்கியம் தான் அத்தியாவசியம் என்பதை நமக்கு உணர்த்தியிருக்கிறது காலம். பொன்னும் பொருளும் பொருளும் காசும் பணமும் தேடி ஓடிக்கொண்டிருந்தோம். இப்போது ஆரோக்கியமும் ஆயுளும் அவசியம் என்பதைப் புரிந்து உணர்ந்துகொண்டிருக்கிறோம்.
திக்கற்றவர்க்கு தெய்வமே துணை என்பார்கள். வீட்டில் இருந்துகொண்டே வழிபடுவோம். நாம் அன்றாடம் வீட்டில் பூஜை செய்யும்போது, இந்த தெய்வங்களையும் மனதார நினைத்து, ஆத்மார்த்தமாக வேண்டிக்கொள்வோம்.
மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள திருக்கடையூர் திருத்தலம் பிரசித்தி பெற்ற புண்ணிய க்ஷேத்திரம். சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம் முதலான வைபவங்கள் நிகழும் அற்புதத் திருத்தலம். இங்கே உள்ள அபிராமி அம்மனையும் அமிர்தகடேஸ்வரரையும் மனதார வேண்டிக்கொள்ளுங்கள். அபிராமி அந்தாதி பாராயணம் செய்யுங்கள்.
நீண்ட ஆயுளைப் பெற்று இனிதே வாழலாம். ஆயுள் பலம் நீடிக்கும். மாங்கல்ய பலம் பெருகும்.
அதேபோல், ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடிக்கு அருகில் உள்ளது எமனேஸ்வரம். இங்கே உள்ள எமனேஸ்வரமுடையார், நமக்கெல்லாம் ஆயுள் பலம் நீடிக்க அருள்பாலித்து வருகிறார். சந்தர்ப்பம் கிடைக்கும்போது சந்நிதிக்கு வருவதாக எமனேஸ்வரரை திங்கட்கிழமை, அமாவாசை, பிரதோஷம், பெளர்ணமி முதலான நாட்களில், வீட்டில் விளக்கேற்றி வழிபடுங்கள்.
நகரேஷு காஞ்சி என்று போற்றப்படும் காஞ்சிபுரத்தில் உள்ளது சித்திரகுப்த சுவாமி திருக்கோயில். எமனின் உதவியாளர், அஸிஸ்டெண்ட், கணக்காளர் சித்திரகுப்தன் தான். நம் பாவ புண்ணியங்களைக் கணக்கிட்டு, துல்லியமாகச் சொல்பவர் இவர்தான். எனவே இவரை வணங்குங்கள். ஆத்மார்த்தமாக இவரிடம், ‘இனி பாவமேதும் செய்யமாட்டேன். செய்த பாவங்களையெல்லாம் பொறுத்துக்கொள்ளவும்’ என முறையிட்டுப் பிரார்த்தனை செய்யுங்கள். ஆயுளை நீட்டித்து அருளுவார் சித்திரகுப்தன்.
சென்னை வேளச்சேரியில் உள்ள தண்டீஸ்வரர், சாந்நித்தியம் நிறைந்தவர். அற்புதமான திருக்கோயில். நோய் தீர்க்கும் திருத்தலம். ஆயுள் பெருக்கும் ஆலயம். தண்டீஸ்வரரை மனதாரப் பிரார்த்தனை செய்யுங்கள். நீண்ட ஆயுளைத் தந்தருள்வார் சிவனார்.
நோயுற்றவர்களுக்காக இவரிடம் வீட்டில் இருந்துகொண்டே பிரார்த்தனை செய்யுங்கள். அடுத்தவருக்காக, நாம் செய்யும் பிரார்த்தனையை உடனே செவிமடுத்துக் கேட்டு அருள் செய்வார் தண்டீஸ்வரர்.
திருச்சி அருகில் உள்ளது திருப்பைஞ்ஞீலி. இங்கே உள்ள ஞீலிவனேஸ்வரர் வரப்பிரசாதி. எமனுக்கு இங்கே சந்நிதி உள்ளது. கல்யாண வரம் தரும் கல்வாழை திருத்தலமும் கூட!
திருக்கடையூரைப் போலவே, இங்கேயும் சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம் செய்துகொள்கிறார்கள் பக்தர்கள். ஞீலிவனநாதரை மனதார வேண்டிக்கொள்ளுங்கள். தாலி பாக்கியம் நிலைக்கச் செய்வார். நீண்ட ஆயுளைத் தருவார்.
கும்பகோணத்துக்கு அருகில் உள்ளது ஸ்ரீவாஞ்சியம். இது ஆயுள் பலம் தந்தருளும் அற்புத க்ஷேத்திரம். இங்கே உள்ள சிவனாரின் திருநாமம் ஸ்ரீவாஞ்சிநாத சுவாமி. பிரதோஷம், மாத சிவராத்திரி, திங்கட்கிழமை, பெளர்ணமி, அமாவாசை முதலான நாட்களில், ஸ்ரீவாஞ்சி நாதரை, வீட்டில் விளக்கேற்றி தயிர்சாதம் நைவேத்தியம் செய்து வேண்டிக்கொள்ளுங்கள். ஆரோக்கியமும் ஆயுளுமாக நம்மை வாழச் செய்வார் ஈசன்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT