Published : 13 Aug 2015 11:57 AM
Last Updated : 13 Aug 2015 11:57 AM
“தன்னை அறிந்திடும் தத்துவ ஞானிகள்
முன்னை வினையின் முடிச்சை அவிழ்ப்பார்கள்
பின்னை வினையைப் பிடித்துப் பிசைவார்கள்
சென்னியில் வைத்த சிவன்அரு ளாலே”.
தன்னை அறிந்துகொண்டவர்கள் தான் மெய்ஞானிகள். அவர்கள் தன்னை அறிந்து தாமே சிவமாகிவிட்டதால் முற்பிறவியில் செய்த பாவ, புண்ணிய முடிச்சுகளை இப்பிறவியில் இல்லையென்று ஆக்கிவிடுவார்கள். அடுத்த பிறவியென்ற ஒன்றே அவர்களுக்கில்லை. இப்பிறவியிலும் வரக்கூடிய வினைகளையும் தடுத்துவிடுவார்கள். ஏனென்றால் அவர்கள் தமது தலையில் சிவனுடைய அருளை வைத்திருப்பதால். அதாவது, அவர்கள் ஞானயோகப் பயிற்சிகளின் மூலம் குண்டலினி சக்தியைத் தங்களது சகஸ்ராரத்திலே நிலை நிறுத்தியவர்கள் என்று திருமூலர் கூறுகிறார்.
நமது வினைகளும் அறுபடும்
முன்னை வினை, பின்னை வினை என்பது அவர்களுக்கு மட்டும் பொருந்துவதன்று. சிவனுக்கொப்பான அந்த ஞானிகளால் நமது வினைகளையும் அறுக்க முடியும் என்றே பொருள் கொள்ளவேண்டும். அதனால் தான் ஜீவசாமதியில் சமாதி நிலையில் வீற்றிருக்கும் சித்தர்களைத் தரிசித்தால் நமது வினைகள் அறுக்கப்படுவதோடு, பின்னை வினைகளை அறுக்கும் ஞானமும் நமக்குக் கிடைக்கும்.
ஓரு சித்தரின் ஜீவசமாதியைத் தரிசித்தாலே நமக்கு இத்தனை பயன்கள் கிடைக்குமென்றால், பல கோடிச் சித்தர்கள் கூடியிருக்கும் திருவண்ணாமலைத் திருத்தலத்தில் நம் காலடிகள் பட்டால் என்னவெல்லாம் சித்திக்கும்? இதனைத்தான்
“அண்ணாமலை தொழுவார் வினை
வழா வணம் அறுமே”
என்று திருஞான சம்பந்தர் பாடியுள்ளார்.
அதனால் தான் அண்ணாமலை என்ற பெயரைக் கொண்ட இந்தச் சித்தரும் தம் தலையில் அண்ணாமலையாரை நிறுத்திக் கொண்டார் போலும்.
பற்றற்றிருந்த பொற்கொல்லர்
விருதுநகரைப் பூர்வீகமாகக் கொண்ட அண்ணாமலை சுவாமிகள், பொற்கொல்லர் சமூகத்தில் பிறந்தவர். இளம் வயதில் இல்லறத்தில் ஈடுபட்டுப் பொன் ஆபரணங்கள் செய்யும் தொழிலை மேற்கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் அனைத்தையும் துறந்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறினார்.
திருச்சுழிக்கு அருகே உள்ள பெ.புதுப்பட்டி என்ற ஊரில் வட ஆறும், தென் ஆறும் (குண்டாறு) சந்திக்கும் இடத்தில் ஒரு சோலையைத் தமது நிரந்தர இருப்பிடமாக ஆக்கிக்கொண்டு யோகப் பயிற்சிகளைச் செய்துவந்தார்.
தினமும் காலை வேளையில் சுற்று வட்டாரத்தில் உள்ள பறவையினங்கள் அனைத்தும் இவரைத் தேடி வந்துவிடுமாம். அவற்றுக்கு உணவு அளித்த பின்னரே தாம் உண்பாராம்.
இப்படிப் பல உயிர்களுக்கு உணவு படைத்த அண்ணாமலை சுவாமிகள், பல சித்துக்களைச் செய்துள்ளார். ஒருமுறை தமது பேரக் குழந்தைகளை பாயின் மீது அமரச் செய்து கண்களை மூடிக்கொள்ளச் செய்திருக்கிறார். அவர்கள் கண் விழித்தபோது திருவண்ணாமலை தரிசனத்தைக் காட்டினாராம்.
அவர் தாம் தங்கியிருக்கும் இடத்தில் ஓரு சிவாலயம் கட்ட வேண்டுமென்று ஓரு சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்துள்ளார். ஆனால் அவருக்கு ஆலயம் கட்டும் வாய்ப்புக் கிட்டவில்லை. அதற்குள் தாம் சமாதியாகும் நாள் வந்துவிட்டதென்று கூறி, எவரும் அழக் கூடாது என்று அன்புக் கட்டளையிட்டுவிட்டுச் சமாதியானார்.
அவரது சந்ததியினர், சுவாமிகள் பிரதிஷ்டை செய்த சிவலிங்கத்தின் மீது, அவரது விருப்பப்படி சிவாலயம் ஒன்றை எழுப்பியுள்ளனர். அந்தச் சிவலிங்கத்தில் அதிர்வலைகள் எப்போதும் இருப்பதாகக் கூறப்படுகிறது. அத்துடன் அண்ணாமலைச் சித்தரின் ஜீவசமாதியில் அமர்ந்து தியானம் செய்பவர்களுடன் எண்ண அலைகளின் மூலம் அவர் பேசுவதாகக் கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT