Published : 21 May 2020 03:11 PM
Last Updated : 21 May 2020 03:11 PM
ஷீர்டியில், பிரார்த்தனைச் சீட்டு வெகு பிரசித்தம். பிரார்த்தனைச் சீட்டு என்பது கார் வேண்டும், பங்களா வேண்டும் என்பதல்ல. என் பிள்ளை திருந்த வேண்டும், எனக்குப் பிள்ளை பிறக்கவேண்டும், எங்கள் சொத்தை அபகரிக்கப் பார்க்கிறார்கள். அந்தச் சொத்தை மீட்கவேண்டும், என் கணவர் மனம் மாற வேண்டும் என்று எத்தனையோ கண்ணீரையும் கவலையும், துக்கத்தையும் வேதனையையும் கலந்த சீட்டுக்கள் அவை!
இன்றைக்கு ஷீர்டி பாபாவுக்கு எங்கெல்லாமோ கோயில்கள் இருக்கின்றன. அங்கெல்லாம் பக்தர்கள், தங்கள் குறைகளை, சோகங்களை, வருத்தங்களை சொல்லி வேண்டிக்கொள்கின்றனர்.
திருமணமாகி ஒன்பது வருடங்களாகியும் குழந்தை பாக்கியம் இல்லை அந்தத் தம்பதிக்கு. இதனால்தான் குடும்பத்தில் சண்டை, குழப்பம், பிரிவுகள். கணவனும் மனைவியும் ஒருகட்டத்தில் பிரிந்து போனார்கள். மனைவியைத் துரத்தினான்.
அந்தப் பெண், அம்மா வீட்டுக்கு வந்துவிட்டாள். அங்கே... அம்மாவின் வீட்டுக்கருகே ஒரு சாயிபாபா கோயில். சிறிய கோயில். அந்தக் கோயிலில், வியாழக்கிழமை தோறும் சென்று, பாபாவை தரிசனம் செய்து வந்தாள். நான்காவது வாரத்தில், கோரிக்கைகள் அடங்கிய பிரார்த்தனைச் சீட்டு எழுதி யார் யாரோ அங்கிருக்கும் பெட்டியில் போடுவதை அப்போதுதான் பார்த்தாள்.
பேப்பரையும் பேனாவையும் எடுத்துக் கொண்டாள். ’கணவருடன் சேர வேண்டும், சேர்ந்து வாழவேண்டும்’ என்று மனதுக்குள் வேண்டிக்கொண்டு, வேண்டிக் கொண்டதை, சீட்டில் எழுதி, பெட்டியில் போட்டுவிட்டு, பாபாவை நமஸ்கரித்தாள். கண்ணீர்மல்க வேண்டிக்கொண்டாள். . ஐந்தாவது வியாழக்கிழமை பாபா கோயிலுக்குச் சென்றுவிட்டு, வீட்டுக்கு வந்தவள், அதிர்ந்து போனாள். ஆச்சரியத்தில் அப்படியே நின்றாள். கணவனும் மாமியாரும் வந்திருந்தார்கள்.
பிறகு, அவளின் கணவன், எல்லோரிடமும் மன்னிப்புக் கேட்டான். முக்கியமாக மனைவியிடம் மன்னிப்பு வேண்டினான். பிறகு அவளை அழைத்துக் கொண்டு, ஊருக்குச் சென்றான். அதையடுத்த நான்காவது மாதம், அவள் கருவுற்றாள். டாக்டர்கள் கரு உண்டாகியிருப்பதை உறுதி செய்தார்கள்.
அந்தக் குடும்பம் அவளைக் கொண்டாடியது. அவள், சாயிபாபாவைக் கொண்டாடத் தொடங்கினாள். பாபாவின் சிலை ஒன்றை வாங்கி, பூஜையறையில் வைத்து, தினமும் வணங்கி வந்தாள். கணவர் மனம் திருந்தி திரும்பி வந்ததற்கும் கரு வளர்வதற்கும் சாயிபாபாவின் பேரருளே காரணம் என உணர்ந்தாள். பூரித்தாள். புளகாங்கிதம் அடைந்தாள். அவளுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அதுவும்... ஓர் வியாழக்கிழமையன்று பிறந்தது.
இப்போது மொத்த வீடும் சாயிபாபாவின் அருளை உணர்ந்து சிலிர்த்தது. குழந்தைக்கு ‘சாய்ராம்’ என்றே பெயர் சூட்டியது. இன்றைக்கு லட்சக்கணக்கான சாயி குடும்பங்களில், இவர்களும் இருக்கிறார்கள்.
நம் கண்ணீரைப் பார்த்துக்கொண்டிருக்கமாட்டார் சாயிபாபா. அவர் நம் தாய். எதுவேண்டுமானாலும் கேட்கலாம். கருணையுடன் தருவார். சாயிபாபா நம் தந்தை. எதை வேண்டுமானாலும் வழங்குவார். சாயிபாபா நமக்கெல்லாம் ஞானகுரு. நமக்கு என்ன வேண்டும் என்பதை நாம் கேட்காமலேயே தந்து அருள்வார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT