Published : 24 Apr 2020 10:41 AM
Last Updated : 24 Apr 2020 10:41 AM
அட்சய திருதியை என்றால் தங்கம் வாங்கவேண்டும் என்றுதான் நினைத்துக் கொண்டிருக்கிறோம். உண்மையில், அட்சய திருதியை நாளில், தானங்கள் செய்யவேண்டும். இதைத்தான் சாஸ்திரங்கள் வலியுறுத்துகின்றன. வரும் 26.4.2020 அட்சய திருதியை. அந்தநாளில், இல்லாதோருக்கு உங்களால் முடிந்த தானம் செய்யுங்கள். தங்கம் வாங்காத, தங்கம் வாங்க முடியாத, மிக உன்னதமான நாளில், தானம் செய்வோம். நாமும் நம் சந்ததியும் குறைவின்றி வாழ்வோம்!
சித்திரை மாதம் அமாவாசையை அடுத்த மூன்றாம் நாள் வரும் திதி அட்சய திருதியை! 26.4.2020 ஞாயிற்றுக்கிழமை அட்சய திருதியை நன்னாள். மகத்துவம் வாய்ந்த இந்தத் திருநாளன்று எந்த செயலைத் துவங்கினாலும் அது முழுமையாக வெற்றி பெறும் என்பது ஐதீகம்.
அட்சயம் என்றால் பூரணமானது, நிறைவு மிகுந்தது என்று அர்த்தம். குறையவே குறையாதது என்று பொருள். அதாவது, அழியாத பலன் தரக்கூடியது என்பார்கள். ‘வளருதல்’ என்றும் அர்த்தம் உண்டு. இந்தத் திருநாளில் துவங்கும் நற்காரியங்கள், பன்மடங்கு பலனைப் பெற்றுத் தரும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்!
பகவான் கிருஷ்ண பரமாத்மாவின் பேரருளால் குசேலன் குபேரயோகம் பெற்றதும் இந்த நாளில்தான்!
ஆதிசங்கரர் திருமகளைத் துதித்து, கனகதாரா ஸ்தோத்திரம் பாடி, ஏழை அந்தணப் பெண்ணுக்கு செல்வ மழையைப் பொழியச் செய்ததும் இந்த நன்னாளில்தான்!
கிருத யுகத்தில், ஓர் அட்சய திருதியை தினத்தன்றுதான் பிரம்மா உலகைப் படைத்தார் என்கிறது பிரம்மபுராணம்.
செல்வத்துக்கு அதிபதியான குபேரன், சங்கநிதி- பதுமநிதி எனும் ஐஸ்வரியக் கலசங்களைப் பெற்ற நாள் அட்சய திருதியை!
திருமகளின் எட்டு அவதாரங்களுள் ஐஸ்வர்ய லட்சுமி மற்றும் தான்யலட்சுமி தோன்றியது இந்தத் திருநாளில்தான் என்கிறது புராணம்!
வனவாசத்தின்போது தவம் மேற்கொண்ட தர்மருக்கு திருக்காட்சி தந்த சூரிய பகவான், அன்ன வளம் குன்றாத, பெருகிக் கொண்டே இருக்கிற அட்சயப் பாத்திரத்தை அவருக்கு அளித்தார். அதுவும் இப்படியொரு அட்சய திருதியை நாளில்தான்!
இந்தப் புண்ணிய நாளில்தான் பரசுராம அவதாரம் நிகழ்ந்தது என்கிறது புராணம். இதைத்தான் ஸ்ரீபரசுராம ஜயந்தி என்று கேரளாவில் வெகு விமரிசையாகக் கொண்டாடுகிறார்கள்.
அன்னபூரணியான அம்பிகையிடம், பிட்சாடனர் திருக்கோலத்தில் வந்த சிவபெருமான், பிட்சை பெற்ற திருநாளும் இதுதான். இப்படி ஈஸ்வரனுக்கே அமுதளித்த அன்னபூரணிக்கும் மகத்தான அட்சய சக்திகள் கூடின என்கிறது சிவபுராணம். .
சரி... அட்சய திருதியை நாளில், என்ன செய்யவேண்டும்?
தங்கம் வாங்குங்கள் என்று எதிலும் குறிப்பிடவே இல்லை. மாறாக, ஒரு குந்துமணி அளவேனும் தங்கத்தை தானம் வழங்குவது மிகுந்த புண்ணியம் என்கிறது தர்மசாஸ்திரம். அதேபோல், புண்ணியம் நிறைந்த நன்னாளில், முடிந்த வரை தானம் செய்யுங்கள். ஆடை வழங்குங்கள். இயலாதவர்களுக்கு போர்வை வழங்குங்கள். அன்னதானம் செய்யுங்கள். ஒரு ஐந்து பேருக்கேனும் உணவுப் பொட்டலம் வழங்குங்கள். உங்கள் வீட்டுக்கு ஐஸ்வர்ய லட்சுமி வருவாள்; ஐஸ்வர்யம் உங்கள் இல்லத்தில் என்றைக்கும் குடியிருக்கும்.
முக்கியமாக, உப்பு, சர்க்கரை என வெள்ளை நிற பொருட்கள் வாங்குவதும் தானமாகக் கொடுப்பதும் தரித்திரங்களையெல்லாம் போக்கும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT