Last Updated : 06 Aug, 2015 12:39 PM

 

Published : 06 Aug 2015 12:39 PM
Last Updated : 06 Aug 2015 12:39 PM

சேவலைப் பிடித்திருக்கும் செங்கோட்டு வேலன்

அருணகிரிநாதரின் நினைவைப் போற்றும் பக்திபூர்வமான நிகழ்ச்சியை சித்ரா மூர்த்தி கடந்த வாரம் நாரத கான சபா சிற்றரங்கத்தில் நடத்தினார். திருப்புகழ் பாடல்களை சிலர் பாடுவார்கள். சிலர் அந்தப் பாடல்களில் இருக்கும் கருத்துகளைப் பற்றிப் பேசுவார்கள். ஆனால் சித்ரா மூர்த்தியின் நிகழ்ச்சியில் இசையுடன் கூடிய பாடலும் அதற்கான உரையும் சேர்ந்தே வெளிப்பட்டன. இதற்குக் காரணம் இவர், திருப்புகழ் அன்பர்கள் அமைப்பை டெல்லியில் நிறுவிய ஏ.எஸ். ராகவனிடம் இசையுடனும் சந்தத்துடனும் திருப்புகழ் பாடக் கற்றதும், பாடல்களுக்கான அர்த்தத்தை திருப்புகழ் அடிமை நடராஜரிடம் கற்றதும்தான்.

செங்கோட்டு வேலவனின் சிறப்புகள்

`கொடிமாடச் செங்குன்றூர்’ என பாடல்பெற்ற தலமே இன்று திருச்செங்கோடு எனும் பெயரால் அறியப்படுகிறது. தேவாரப் பாடலுக்கு உரியவராக அர்த்தநாரிஸ்வரர் இருக்கிறார். ஆனால் அவருக்குப் பின்வந்த அருணகிரியார் இத்தலத்தில் இருக்கும் வேலவனைக் குறிக்கும் 21 பாடல்களைப் பாடியுள்ளார்.

பொதுவாக எல்லா ஆலயங்களிலும் முருகனின் கையிலிருக்கும் வேல் தனியாக செய்யப்பட்டு பக்கத்தில் வைக்கப்பட்டிருக்கும். ஆனால் செங்கோட்டில் வலது கையில் வேலைப் பிடித்தபடியே சிலாரூபம் வடிக்கப்பட்டிருப்பது சிறப்பு. இன்னொரு குறிப்பிடத்தக்க அம்சம், சேவற்கொடியைப் பிடித்தபடிதான் சிற்பங்கள் இருக்கும். இங்கோ வேலவன் தன்னுடைய இடது கையில் சேவலையே பிடித்திருப்பார். அபிஷேக நேரத்திலேதான் ஆலயத்தில் இந்தக் காட்சியைத் தெளிவாகப் பார்க்க முடியும் என்றார் தன் உரையில் சித்ரா.

அதையொட்டி ஒலித்தது,

“வந்தே பணிந்து நின்றார் பவங்கள்

வம்பே தொலைந்த வடிவேலா!

சென்றே இடங்கள் கந்தா எனும்போ

செஞ்சேவல் கொண்டு வர வேணும்”.

60 அடி பாம்புச் சிற்பம்

அருணகிரிநாதர் பல தலங்களுக்கும் சென்று முருகனைத் தரிசித்து விட்டு திருச்செங்கோடு வருகிறார். வெகு தொலைவில் ஆலயம் மலையின் மீது காட்சி தருகிறது. இரண்டு பாம்புகள் எதிர்த் திசைகளிலிருந்து வந்து இணைந்து தலைகளை உயர்த்தி இருப்பது போலக் காட்சி அளிக்கிறது. இந்தக் காட்சியை தரிசித்ததாலேயே அவர் தம் பாடல்களில் இந்த மலையை, அரவகிரி, சர்ப்பகிரி, நாககிரி, உரவகிரி, சர்ப்பப் பொற்றை, காளக்கிரி என்றெல்லாம் குறிப்பிடுகிறாராம். பாறைகளின் சரிவிலேயே ஏறக்குறைய 60 அடி நீளத்துக்கு பாம்பின் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளதைக் காணலாம்.

60-ம் படி மகிமை

ஆலயத்துக்குச் செல்லும் படிகளில் முக்கியமான இடம் அறுபதாம்படி. ஆண்டுகளைக் குறிக்கும் இப்படிகளில், கொடுக்கல், வாங்கலில் இருக்கும் பிரச்சினைகளைத் தீர்க்க, இந்தப் படியில் கற்பூரம் அணைத்துச் சத்யப் பிரமாணம் செய்வது இன்றைக்கும் வழக்கில் இருக்கிறதாம். படிகளின் இருபுறங்களிலும் எண்ணெய் விட்டு விளக்கேற்றுவதற்கு வசதியாகப் பள்ளங்கள் உள்ளன.

அங்கு குடிகொண்டிருக்கும் பாலசுப்ரமண்யரைத் தர்ம சாட்சியாகக் கொண்டு வழக்குகளைத் தீர்த்துக் கொள்வதால் இவை சத்யவாக்குப் படிகள் எனப்படுகின்றன. இதைத்தான் ஒரு பாடலில் அருணகிரிநாதரும், “தர்க்க சாத்திர தக்க மார்க சத்யவாக்யப் பெருமானே” என்று பாடுகிறாராம். அருணகிரிநாதருக்கு தெரிந்த இந்த உண்மை அன்றைய ஆங்கிலேய ஆட்சியாளராக இருந்த எஃப்.ஜே. ரிச்சர்ஸ் என்பவருக்கும் தெரிந்திருக்கிறது. அதனால்தான், “இப்படியில் செய்யப்படும் முடிவை ஏற்றுக்கொள்ள உயர் நீதிமன்றமும் கடமைப்பட்டுள்ளது” என தனது மாவட்ட அறிக்கையில் எழுதியிருப்பது ஆவணக் காப்பகத்தில் உள்ளதாம்.

இப்படி ஒவ்வொரு பாடலுக்குப் பின்னணியிலும் சுவாரசியமான ஒரு செய்தியுடன் பக்திரசத்தோடு நிறைவடைந்தது அந்த நிகழ்ச்சி.

திருப்புகழ் பாடல்களை அடுத்த தலைமுறைக்கும் கொண்டுசேர்க்கும் விதமாக பள்ளி மாணவர்களுக்கும் திருப்புகழ் பாடல்களை சொல்லித்தரும் இறைப் பணியையும் செய்துவருகிறார் சித்ரா மூர்த்தி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x