Published : 01 Apr 2020 04:20 PM
Last Updated : 01 Apr 2020 04:20 PM
சுகப்பிரசவம் நிகழ்வதற்கு, மலைக்கோட்டை தாயுமானவ சுவாமியை வேண்டிக்கொள்ளுங்கள். சிவனருளால், சுகப்பிரசவம் நிகழும் என்கிறார்கள் சிவாச்சார்யர்கள்.
மலைக்கோட்டை நகரம் திருச்சியில் உள்ளது உச்சிப்பிள்ளையார் கோயில். இங்கே உள்ள மூலவர் ஸ்ரீதாயுமானவ ஸ்வாமி. தன் பக்தையான செட்டிப் பெண்ணுக்கு தாயுமாகி வந்து, பிரசவம் பார்த்தார் சிவபெருமான் என்கிறது கோயிலின் ஸ்தல புராணம்!
காவிரிபூம்பட்டினத்தில் வசித்து வந்த வணிகர் ரத்தின குப்தன். இவரின் மகள் ரத்னாவதி, சதாசர்வ காலமும் சதாசிவத்தையே நினைத்து பூஜித்து வந்தாள். இவரை சீராப்பள்ளி என்று அழைக்கப்பட்ட திருச்சிராப்பள்ளி அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த தனகுப்தன் என்பவருக்கு திருமணம் செய்து வைத்தார்கள்.
மலையில் உள்ள ஸ்ரீமட்டுவார்குழலம்மையையும் ஸ்ரீசெவ்வந்தி நாதரையும் தினமும் வழிபட்டு வந்தாள். சிவபார்வதியின் அருளால், கருவுற்றாள் ரத்னாவதி. பிரசவகாலம் நெருங்கிக் கொண்டிருந்தது. நிறைமாத கர்ப்பிணியாக உள்ள மகளைப் பார்க்க பூம்புகாரில் இருந்து புறப்பட்டாள் அம்மா. திருச்சியை நெருங்கினாள்.
அந்த நேரம் பார்த்து, காவிரியில் திடீரென வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இந்தக் கரையில் இருந்து அந்தக் கரைக்குச் செல்லமுடியவில்லை.
ஒருபக்கம் சிவ தரிசனம் செய்யமுடியவில்லையே என்று கலங்கிய ரத்னாவதி, இன்னொரு பக்கம் பிரசவ நேரத்தில் அம்மா அருகில் இல்லையே என வருந்தினாள். அப்போது, ரத்னாவதியின் அம்மா வீட்டுக்குள் நுழைந்தார். மகிழ்ந்து நெகிழ்ந்தாள் மகள்.
வெள்ளம் சூழ்ந்திருக்கும் வேளையில், ஆற்றை எப்படிக் கடந்தாள் அம்மா. எப்படி வந்தாள்?
வந்தது அம்மா அல்ல. அம்மாவின் வடிவில் சிவபெருமானே வந்தார்.
பிரசவ வலி அதிகரித்தது. தாயின் ஸ்தானத்தில் இருந்து அம்மையும் அப்பனுமான சிவபெருமானே பக்தைக்கு பிரசவம் பார்த்தார். அழகிய குழந்தையை ஈன்றாள் ரத்னாவதி. அவளுக்கு எல்லாப் பணிவிடைகளையும் செய்தார் சிவபெருமான்!
காவிரியில் வெள்ளம் வடிந்தது. ரத்னாவதியின் அன்னை, கரையைக் கடந்தாள். மகளின் வீட்டுக்கு வந்தாள். குழந்தை பிறந்ததைக் கண்டு மகிழ்ந்தார். தான் அருகில் இல்லாமல் போய்விட்டேனே என வருந்தினாள். அப்படியெனில், இத்தனை நாட்கள் என்னுடன் இருந்து, பணிவிடை செய்தது யார் என்று தாயும் மகளும் ஆச்சரியப்பட்டு குழம்பினார்கள். அப்போது அவர்களுக்கு சிவனார் திருக்காட்சி தந்தருளினார்.
சிவனார், தாயாக வந்து பிரசவம் பார்த்ததால், ஸ்ரீதாயுமானவ ஸ்வாமி எனும் திருநாமம் பெற்றார்.
சித்திரை மாதத்தில், ஐந்தாம் நாளில் பக்தைக்குப் பிரசவம் பார்த்த விழா விமரிசையாக நடைபெறுகிறது. கர்ப்பிணிப் பெண்கள், மனம் ஒருமித்து, வீட்டில் விளக்கேற்றி, சிவனாரை ஆத்மார்த்தமாக வேண்டிக் கொண்டால், பிள்ளை வரமும் நிச்சயம்; சுகப்பிரசவம் நிகழ்வதும் உறுதி என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
எடைக்கு எடை வாழைத்தார் காணிக்கை செலுத்துகிறேன் என்று வேண்டிக்கொள்ளும் வழக்கமும் தாயுமானவ சுவாமி கோயிலில் உள்ளது.
வாழைத்தார் நேர்த்திக்கடனை வேண்டிக் கொள்ளுங்கள். வாழையடி வாழையாக உங்கள் சந்ததியை வாழச் செய்வார் தாயுமானவ சுவாமி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT