Published : 27 Mar 2020 03:24 PM
Last Updated : 27 Mar 2020 03:24 PM
சதுர்த்தி திதியில் விநாயகருக்கு அருகம்புல் சார்த்தி, சிதறுகாய் அடித்து பிரார்த்தனை செய்யுங்கள். நமக்கு வந்த சங்கடங்கள் அனைத்தும் தீரும். நம் சந்தோஷங்கள் பெருகும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
சதுர்த்தி திதி என்பது விநாயகருக்கு உரிய அற்புதமான நாள். அதனால்தான் இந்த தினத்தை சங்கடஹர சதுர்த்தி என்று போற்றுகிறோம். இந்தநாளில், ஆலயங்களில் உள்ள விநாயகருக்கு, சிறப்பு வழிபாடுகளும் பூஜைகளும் நடைபெறும்.
இதேபோல், பிள்ளையாருக்கு வீட்டில் இருந்தபடியே பூஜைகள் செய்யலாம். நாளைய தினம் 28.03.2020 சனிக்கிழமை. சதுர்த்தி. பங்குனி மாதத்தின் வளர்பிறையில் வரும் சதுர்த்தி தினத்தை, சக்தி சதுர்த்தி என்பார்கள் இது ரொம்ப விசேஷமானது. மிகவும் சக்தி வாய்ந்த நன்னாளாகச் சொல்லப்படுகிறது.
நாளைய தினம், வீட்டில் உள்ள பிள்ளையார் சிலைக்கோ பிள்ளையார் புகைப்படத்துக்கோ அருகம்புல்லால் மாலையிடுவது மிகவும் நல்லது. முடிந்தால், கிடைத்தால், வெள்ளெருக்கு மாலை சார்த்துங்கள்.
பூஜையறையில் விளக்கேற்றுங்கள். குடும்பமாக அமர்ந்து விநாயக நாமாவளியைச் சொல்லி வழிபடுங்கள். விநாயகர்பெருமானின் மூலமந்ந்திரம் தெரிந்தால், 108 முறை உச்சரியுங்கள். மகாகணபதி மந்திரம், மிக சாந்நித்தியமான மந்திரம். இந்த மந்திரத்தை சொல்லச் சொல்ல, தீயசக்திகள் முழுவதுமாக அழிந்துவிடும் என்பது ஐதீகம்.
வீட்டில், காலையும் மாலையும் பிள்ளையாரப்பனை பூஜை செய்யுங்கள். சுண்டல், சர்க்கரைப் பொங்கல், பாயசம் என நைவேத்தியம் செய்து, சிதறுகாய் அடித்து, உலகுக்காக, உலக மக்களுக்காக, உலக நன்மைக்காக பிரார்த்தனை செய்யுங்கள்.
நம் சங்கடங்கள் அனைத்தையும் தீர்த்துவைப்பார் கணபதி. நமக்கு சந்தோஷங்களை அள்ளித் தருவார் கணபதி!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT