Published : 25 Mar 2020 04:00 PM
Last Updated : 25 Mar 2020 04:00 PM
சந்தோஷிமாதா விரதம் வெகு பிரசித்தம். எளிமையான இந்த விரதம் தரும் பலமும் பலன்களும் ஏராளம். சந்தோஷிமாதா விரதம் அனைவருக்கும் உரியது என்றாலும் பெண்களுக்கு மிகவும் ஏற்ற விரதம். அந்த விரதத்தை மேற்கொண்டால், சகல மங்கலங்களும் கிடைக்கும். தடைகள் அனைத்தும் தவிடுபொடியாகும். இல்லத்தில் தரித்திரம் விலகும். ஐஸ்வரியம் பெருகும் என்பது ஐதீகம்! முக்கியமாக, தீய சக்திகளை விரட்டி, நோய்களை நீக்கி, ஆரோக்கியம் தந்தருள்வாள் சந்தோஷி மாதா!
சந்தோஷிமாதா விரதத்தை வெள்ளிக்கிழமை அன்று தொடங்க வேண்டும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள். அதுமுதல் ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் பூஜை செய்துவர வேண்டும். நினைத்த காரியம் விரைவிலேயே கைகூடும். பிறகு, வெள்ளியன்று பூஜையைப் பூர்த்தி செய்து விடலாம்.
இந்த விரதத்திற்கு மஞ்சள்பொடி, குங்குமம், வெற்றிலை பாக்கு, ஊதுபத்தி, சாம்பிராணி, கற்பூரம், சந்தனம், திரி நூல், நெய் அல்லது நல்லெண்ணெய், தேங்காய், மாவிலை, பூக்கள் ஆகியவை அவசியம். இவற்றை முன்னதாகவே சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
சந்தோஷிமாதாவுக்கு மிகவும் உகந்தது வறுத்த கடலை, வெல்லம். விரதத்தை வீட்டிற்குள், வீட்டுப் பூஜையறையில் வைத்து செய்வதே மிக மிக உத்தமமானது. வெளியே கூட்டாகவும் செய்யலாம். எங்கு செய்தாலும் செய்யுமிடம் மிகவும் அமைதியும், தூய்மையும் கொண்டதாக இருக்க வேண்டும்.
சிறிய மேடை போல் பலகை, மேஜை என ஒன்றை வைத்துக்கொள்ளுங்கள். அதன் மீது சந்தோஷிமாதா படத்தை வைத்துச் சக்திக்குத் தக்கவாறு பூக்களால் அலங்கரியுங்கள். முன்னதாக குத்துவிளக்கை ஏற்றி வையுங்கள்.
தீர்த்தம் நிறைந்த சொம்பு அதாவது செம்பை (கலசம்) வையுங்கள். அதை மஞ்சள், சந்தனம், குங்குமம் ஆகியவற்றால் அலங்கரியுங்கள். செம்பிற்குள் நாணயத்தை போடுங்கள். பின்னர் செம்பின் மீது மாவிலைகளை வைத்து அதன் மீது தேங்காய் ஒன்றை வைக்க வேண்டும். அதை சந்தனத்தாலும், பூக்களாலும் அலங்காரம் செய்ய வேண்டும். மஞ்சள் பொடியில் சிறிது தண்ணீர் சேர்த்துப் பிசைந்து மஞ்சளினால் பிள்ளையார் பிடித்துச் கலசத்திற்கு எதிரில் வைத்துக் கொள்ளுங்கள்.
அடுத்து, கிண்ணம் ஒன்றில் கொஞ்சம் வறுத்த கடலையையும் வெல்லத்தையும் வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் கையில் கொஞ்சம் வறுத்த கடலையும், வெல்லமும் எடுத்துக் கொண்டு, எண்ணிய காரியம் நிறைவேற வேண்டும், நோய் நொடியில்லாமல் வாழவேண்டும், வாழ்வில் உள்ள தடைகள் அனைத்தும் தகர்க்கப்படவேண்டும் என்று சங்கல்பம் செய்து, விநாயக பூஜையையும், சந்தோஷிமாதா பூஜையையும் செய்யுங்கள்.
பிறகு சந்தோஷி மாதாவின் சரிதத்தை பக்தி சிரத்தையோடு படிக்க வேண்டும். அல்லது பிறரைப் படிக்கச் சொல்லி கேட்க வேண்டும்.
இதையடுத்து, மாதாவைப் பற்றிய ஸ்தோத்திரப் பாடல்களைப் பாடி நைவேத்தியம் செய்யுங்கள். பிறகு ஆரத்தி எடுக்க வேண்டும். அதன் பிறகு, கலசத்தில் உள்ள நீரை, வீட்டில் உள்ளவர்களுக்கு தீர்த்தமாகக் கொடுக்கவும். அதேபோல், வீடு முழுவதும் அந்தத் தீர்த்தத்தைத் தெளிக்கவேண்டும். இதனால் துஷ்ட சக்திகள் நம்மையும் நம் இல்லத்தையும் அண்டாது என்பது ஐதீகம்!
தொடர்ந்து ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சந்தோஷி மாதா பூஜையைச் செய்து வாருங்கள். நினைத்த காரியம் கை கூடிய பிறகு விரதத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும். பூர்த்தி நாளில், பூரி, முந்திரிப் பாயசம், வறுத்தகடலை ஆகியவற்றைக் கொண்டு நைவேத்தியம் செய்யுங்கள்.
விரதம் தொடங்கி விரதம் பூர்த்தியாகிறவரை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் விரதம் இருப்பவர்கள் புளியோ, புளிப்புப் பதார்த்தங்களோ தயிர், மோர் உள்ளிட்டவையோ கண்டிப்பாகக் உணவில் சேர்க்கக் கூடாது.
கஷ்டங்களையும் துக்கங்களையும் நீக்கியருளும் சந்தோஷி மாதா விரதத்தை தொடர்ந்து மேற்கொள்ளுங்கள். எல்லா சந்தோஷங்களையும் தந்தருள்வள் சந்தோஷி மாதா!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT