Published : 25 Mar 2020 10:16 AM
Last Updated : 25 Mar 2020 10:16 AM

 தீயசக்தியை விரட்டும் வாராஹி;  வீட்டில் இருந்தே வழிபடும் எளிய முறைகள்! 

‘ஸ்ரீவாராஹி அம்மன் ஆதிபராசக்தியின் படைத் தலைவி. இந்த ஒட்டுமொத்த பூமிக்கும் சொந்தக்காரி. ஸ்ரீவாராஹி அம்மனைத் தொடர்ந்து வழிபட்டு வருவோர் பில்லி, சூனிய பிரச்சினைகள் மற்றும் எதிரிகள் தொல்லையில் இருந்து விடுபடுவார்கள். வீட்டிலேயே இவளின் திருவுருவப் படத்தை வைத்து வழிபாடு செய்யலாம்.


வாராஹி அம்மனை வழிபட்டு ஸித்தியை அடைய வேண்டும் என்றால், ஒரு குரு அவசியம் தேவை. குருவின் உதவியாலேயே இந்த அம்மனின் திருவுருவம் மற்றும் யந்திரத்தை வைத்து வழிபட வேண்டும். மற்றபடி, சாதாரண முறையில் வாராஹி அம்மன் படத்தை வைத்தும் வழிபடலாம். ஸ்ரீவாராஹி அம்மனை உபாசனை செய்ய வேண்டும் என்றால், முன்ஜென்ம விதி இருக்க வேண்டும்‘’ என்கிறாது ஸாக்த வழிபாடு செய்யும் ஆச்சார்யர்கள்.

‘மகாவிஷ்ணுவின் ஸ்ரீவராக அவதாரத்தின் அம்சமாக அவதரித்தவளே ஸ்ரீவாராஹி. வராக (பன்றி) முகமும், நான்கு கரங்களும் உடையவள். இவளை வழிபட்டால், எதிரிகளை வெற்றி கொள்ளலாம். ஸ்ரீவாராஹி அம்மனை செவ்வாய், வெள்ளி என்றில்லாமல் தினமும் அஷ்டோத்திரம் சொல்லி, குங்கும அர்ச்சனை செய்து வழிபடுவது கூடுதல் சக்தியைக் கொடுக்கவல்லது. மேலும், அஷ்டோத்திரத்தில் உள்ள அந்த அம்மனின் நாமாக்களைச் சொல்லியும் வழிபடலாம். தினமும் காய்ச்சிய பாலில் சர்க்கரை கலந்து நைவேத்தியம் செய்யலாம்.

பஞ்சமி, வெள்ளிக்கிழமை ஆகிய நாட்களில் தேங்காய்ப் பூரணம், சர்க்கரைப் பொங்கல், கேசரி ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை நைவேத்தியம் செய்யலாம். அதோடு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, வெள்ளரிக்காய் ஆகியவற்றையும் நைவேத்தியம் செய்து வழிபடலாம்.


கஷ்டம், கடன், பிரச்சினைகளில் இருந்து விடுபட, ஒரு தேங்காயை உடைத்து, இரண்டு மூடிகளிலும் நெய்விட்டு, பஞ்சு திரி போட்டு, குங்குமம் இட்டு தீபம் ஏற்றி, அந்த தீபம் தானாகவே மலையேற விடவேண்டும். பிரச்சினைகள் எதுவும் இல்லாவிட்டாலும்கூட பஞ்சமி திதி அன்று இவ்வாறு விளக்கேற்றி வழிபடலாம்.

‘பிராம்மி, மகேஸ்வரி, வைஷ்ணவி, வாராஹி, கௌமாரி, இந்திராணி, சாமுண்டி ஆகியோரே சப்த கன்னியர். மேலும், யோகேஸ்வரி என்ற தெய்வத்தையும் சேர்த்து அஷ்டமாதர் என்றும் சொல்வதுண்டு.

சப்த மாதர்களான ஏழு கன்னியரின் உருவங்களை ஒரே கல்லில் வடித்திருப்பார்கள். பழைமை வாய்ந்த சிவாலயங்களில் இது ஒரு பரிவார சந்நிதி. பெரும்பாலும் ஆலயத்தின் தெற்குப் பிராகாரத்தில் வடக்கு நோக்கியவாறு சப்த மாதர்களை பிரதிஷ்டை செய்திருப்பார்கள். முற்காலத்தில் இவர்களைப் புடைப்புச் சிற்பங்களாக வடித்துப் பிரதிஷ்டை செய்திருந்தார்கள். நாளடைவில் தனித்தனி திருமேனிகளாக வடிக்கத் தொடங்கினார்கள். இவர்களுக்குக் காவலாக வீரபத்திரர் மற்றும் விநாயகரின் திருமேனிகளைப் பிரதிஷ்டை செய்திருப்பதை தரிசிக்கலாம்.


வளர்பிறை பஞ்சமி திதியில், வாராஹிதேவியை மனதார வழிபடுங்கள். வீட்டில் குடும்பமாக அமர்ந்து விளக்கேற்றி மனமுருக பிரார்த்தனை செய்யுங்கள். தீய சக்திகள் அனைத்தையும் விரட்டி, காத்தருள்வாள் வாராஹி தேவி!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x