Published : 24 Mar 2020 02:03 PM
Last Updated : 24 Mar 2020 02:03 PM

மூலிகைக் காட்டில்... நோய் தீர்க்கும் சுருளி வேலப்பர்!

தேனி மாவட்டத்தில் உள்ளது சுருளிவேலப்பர் ஆலயம். போகரின் குரு காலாங்கி சித்தர் பன்னெடுங்காலம் தவம் செய்த பூமி இது.

இங்கே உள்ள மலையை சுருளி மலை என்பார்கள். இந்த சுருளி மலையில், 300க்கும் மேற்பட்ட சிறிய குகைகள் இருந்தன. அவற்றில் ரிஷிகள், தேவர்கள், சித்த புருஷர்கள் கடும் தவமிருந்து சுருளி வேலப்பரை வழிபட்டனர்.
தேனி மாவட்டம் கம்பம் அருகில், 10 கி.மீ. தொலைவில் உள்ளது சுருளி அருவி. பொதிகை மலையும் சதுரகிரி மலையும் இணைந்த மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் சுருளிவேலப்பர் கோயில் அமைந்துள்ளது. இங்கே சுருளி வேலப்பராக கோயில் கொண்டிருக்கிறார் முருகப்பெருமான்.

முப்பத்து முக்கோடி தேவர்களும், நாற்பத்து எட்டாயிரம் ரிஷிகளும், பதினெண் சித்தர்களும் தவம் புரிந்த புண்ணியத் தலம் இது. இவர்கள் அனைவரும் திருக்கயிலாயத்தில் சிவபார்வதிக்குத் திருமணம் நடைபெறும் வேளையில் ஒன்றுகூட, வடக்குப் பகுதி உயர்ந்தும் தெற்குப் பகுதி தாழ்ந்தும் போனதாம். அதை நேர்செய்ய அகத்திய முனிவரிடம் பணித்தார் ஈசனார்.

அதன்பேரில், அகத்தியர் முதலானோர் இங்கு வந்தார்கள். இந்த மலைப் பகுதியில் குகை ஒன்றில் சிவனாரை நோக்கிக் கடும் தவம் மேற்கொண்டனர். அதில் மகிழ்ந்த சிவனார், அவர்களுக்குத் திருமணக் கோலத்தில் காட்சி தந்தருளினார். அவர்கள் தவம் செய்த குகை, ‘கயிலாய குகை’ என்று போற்றப்படுகிறது.

கயிலாய குகையின் மேல் உள்ள சிறிய குன்றில், அழகுறக் கோயில் கொண்டு, அனைவருக்கும் அருள்பாலித்து வருகிறார் கந்தபிரான். இங்கே இவரின் திருநாமம் ஸ்ரீசுருளி வேலப்பர்.

இங்கே உள்ள உதக நீரான சுருளி தீர்த்தம், நோய் தீர்க்கும் மாமருந்தென அடையாளம் காட்டியுள்ளனர் சித்தர் பெருமக்கள். தென் மாவட்டங்களில் உள்ள எந்த ஆலயத்தில் கும்பாபிஷேகம் என்றாலும், இங்கு வந்து சுருளி தீர்த்தத்தை எடுத்துச் சென்று கும்பாபிஷேகத்தில் பயன்படுத்துவது இன்றைக்கும் நடைமுறையில் உள்ளன. .

போகரின் குரு காலாங்கி சித்தர் பன்னெடுங் காலம் தவம் செய்த பூமி இது. பின்னர் போகரும் இங்கு வந்து, குரு உண்டு பண்ணிய நவபாஷாணங்களைக் கொண்டு, பழநி தண்டாயுதபாணியின் மூல விக்கிரகத்தைத் தயாரித்ததாக ‘வாத காவியம்’ நூலில் கருவூரார் தெரிவித்துள்ளார்.

சுருளி மலையைச் சுற்றி சுமார் 225 குகைகள் உள்ளதாம். இவற்றில் ரிஷிகள், தேவர்கள், சித்த புருஷர்கள் ஆகியோர் தவமிருந்தனராம். விபூதி குகை, சர்ப்ப குகை, கிருஷ்ணன் குகை, கன்னிமார் குகை என்றிருக்கும் குகைகளைக் காண மக்கள் வந்து செல்கின்றனர்.

ஆடிப்பூரம், வைகாசி விசாகம், பங்குனி உத்திரம் என விழாக்கள் அதிகம் இருந்தாலும், தைப்பூசத் திருநாள் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. அந்த நாளில் காவடி எடுத்து, பால் குடம் ஏந்தி வழிபட்டால், நினைத்த காரியம் அனைத்தையும் நிறைவேற்றித் தருவார் சுருளி வேலப்பர் என்கின்றனர். குறிப்பாக, பங்குனி மாதம் முழுவதும் முருகப்பெருமானை வேண்டிக்கொள்வது சிறப்பு வாய்ந்த பலன்களைத் தரும் என்பது நம்பிக்கை.

நோய் தீர்க்கும் மூலிகைகள் சூழ அருள்பாலிக்கும் சுருளி வேலப்பரை நோய் தீர்க்கும் மருத்துவராகவே வணங்குகின்றனர் மக்கள். ஆரோக்கியக் குறைபாடு, உடல்நலமின்மை, தீராத நோய் என அவதிப்படுவோருக்கு, சுருளி வேலப்பரை மனதார வேண்டிக்கொண்டு, மஞ்சள் துணியில் காசு முடிந்துவைத்து வேண்டிக்கொள்ளும் பழக்கமும் பக்தர்களிடம் உண்டு.


நோய் தீர்க்கும் மருத்துவக்கடவுளான சுருளி வேலப்பரை மனதார வணங்கித் தொழுவோம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x