Published : 13 Mar 2020 10:23 AM
Last Updated : 13 Mar 2020 10:23 AM
மாசியின் கடைசி நாளான நாளைய தினமே பங்குனி பிறந்துவிடுகிறது. காரடையான் நோன்பு எனும் அற்புதநாளும் நாளைய தினம் 14.3.2020 வருகிறது. நாளைய தினமான சனிக்கிழமையில், பங்குனி மாத தர்ப்பணம் செய்து முன்னோரை வழிபடுங்கள்.
மாதந்தோறும் தமிழ் மாதப் பிறப்பில் தர்ப்பணம் செய்ய வலியுறுத்துகிறார்கள் ஆச்சார்யர்கள். அதேபோல், மாதந்தோறும் அமாவாசையிலும் கிரகண நாளிலும் தர்ப்பணம் செய்ய வேண்டும் என அறிவுறுத்துகிறது சாஸ்திரம்.
இந்த ஜென்மத்துக்கான, இந்த நம் பிறவிக்கான மிக முக்கியமான கடன்… கடமை… முன்னோர் ஆராதனை. பித்ருக்களை ஆராதிக்க ஆராதிக்க, அவர்களை வணங்கி வழிபட, பித்ருக்கள் சாபம் அனைத்தும் நீங்கிவிடும்; பித்ருக்களின் ஆசியும் பரிபூரணமாகக் கிடைக்கும் என்பது ஐதீகம்.
அதேபோல், நாமும் நம் சந்ததியும் சிறக்கவும் செழிக்கவும் வாழலாம். நம் குடும்பத்தில். அரணாக இருந்து நம்மையும் நம் வம்சத்தையும் பித்ருக்கள் வாழ அருளுவார்கள் என்பது சத்தியம்.
இதோ… நாளைய தினம் 14.3.2020 சனிக்கிழமை. தமிழ் வருடத்தின் கடைசி மாதம் இது. தெய்வத் திருமணங்கள் பலவும் நிகழ்ந்தது இந்த பங்குனி மாதத்தில்தான் என்கின்றன புராணங்கள்.
பங்குனி மாதப் பிறப்பில், முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யுங்கள். அவர்களின் புகைப்படங்களுக்கு பூ சார்த்தி, தீபதூபம் காட்டுங்கள். முடிந்தால், அவர்களுக்குப் பிடித்த உணவை நைவேத்தியம் செய்யுங்கள். பிறகு காகத்துக்கு வழங்குங்கள்.
முக்கியமாக, முன்னோரை நினைத்து நான்குபேருக்கேனும் உணவுப் பொட்டலம் வழங்குங்கள். நாம் செய்யும் இந்தச் செயல்களில், குளிர்ந்து போய், நம்மையும் நம் குடும்பத்தையும் நம் சந்ததியையும் சீரும்சிறப்புமாக வாழச் செய்வார்கள், பித்ருக்கள்!
வீட்டின் தரித்திர நிலை மாறும். சுபிட்சம் குடிகொள்ளும். ஐஸ்வரியம் நிறைந்திருக்கும். அமைதியும் ஆனந்தமுமாக நிம்மதியாக வாழலாம்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT