Published : 20 Aug 2015 12:10 PM
Last Updated : 20 Aug 2015 12:10 PM
மதுரையில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் பக்தர்கள், திருப்புவனத்தைக் கடக்கும் முன்பே தெரிந்துகொள்ளலாம். மடப்புரத்தில் விசேஷம் எனில் அப்பகுதியில் அவ்வளவு கூட்டம் படையெடுக்கும். மடப்புரம் பத்திரகாளியம்மன் கோயிலின் ஆடி மாதச் சிறப்பு அப்படி.
ஊருக்குள் நுழையும்போதே எலுமிச்சை மணம் தூக்கும். கடைகளில் எல்லாம் 25 அடிக்குக் குறையாத எலுமிச்சை மாலைகள் சரம்சரமாய்த் தொங்கும். அம்மனுக்கு உகந்த அரளிப்பூ மாலை முதல் சாதாரண கனகாம்பரம் வரையில் பல்வேறு பூக்களும் கட்டப்பட்டுப் பெரும் பந்துகளாகக் காத்திருக்கும். கோயில் வந்து திரும்புபவர்கள் உறவினர்களுக்குக் கொடுப்பதற்காக , பொரி கடலை பொட்டலங்கள் வாங்கிச் செல்ல இருபதுக்கும் மேற்பட்ட கடைகள் இருக்கும்.
எளிமையும் தெய்வீகம்
பெரிய மன்னர்களால் கட்டப்பட்டதோ, பாடல் பெற்ற திருத்தலமோ இல்லை. பத்திரகாளிக்கெனக் கற்சிலையோ, தனித் திருவிழாவோ, வீதி உலாவுக்கான உற்சவரோகூடக் கிடையாது. ஆனால், இங்கே வரும் பக்தர்களின் கூட்டமும், அவர்களின் முகமலர்ச்சியுமே அன்னையின் தெய்வீகத்தன்மையை விளக்கப் போதுமானவை.
அருள்மிகு அடைக்கலம் காத்த அய்யனார் மற்றும் பத்திரகாளியம்மன் திருக்கோயில் என்பதுதான் இக்கோயிலின் பெயர். கிழக்குப் பார்த்த முகமாக தனது வலக்கையில் திரிசூலத்தை கீழ்நோக்கிப் பற்றியபடி அநீதியை அழிக்கும் சம்ஹார தேவதையாக அருள்பாலிக்கிறாள் பத்திரகாளி. சுடர்விடும் அக்கினியையே தனது கிரீடமாகக் கொண்டு, உலகைக் காக்க உலாவரும் கோலத்தில் நின்று அருளாட்சி செய்கிறாள்.
அன்னையின் தலைக்கு மேல், அவளின் ஆற்றலை வெளிப்படுத்தும் சக்தி வடிவமான குதிரை, 13 முழம் உயரத்துடன் முன்னங் கால்களைத் தூக்கியபடி கம்பீரமாக நிற்கிறது.
மாதம் ஒரு அபிஷேகம்
கோயில் சிறப்பு பற்றி அறநிலையத் துறை உதவி ஆணையர் சுந்தரமூர்த்தி கூறியபோது, “தினமும் நாலு கால பூஜை நடைபெற்றாலும், வெள்ளி, செவ்வாய், ஞாயிற்றுக்கிழமைகள் பிரசித்தி பெற்றது. அதிலும் ஆடி, தை, சித்திரை மாத வெள்ளிக்கிழமைகளும், பௌர்ணமி மற்றும் அமாவாசை தினங்களும் விசேஷமானவை. பத்திரகாளியம்மன் சிலை செங்கல் சுதையால் ஆனது என்பதால், அபிஷேகங்கள் கிடையாது. மாதத்தில் ஒரு நாள் பௌர்ணமியன்று மட்டும் அன்னைக்கு பாலாபிஷேகம் நடத்தப்படும். பத்திரகாளிக்கு எலுமிச்சை மாலையே பிரதானமாகச் சாத்தப்படுகிறது.
உச்சிகாலப் பூஜையின்போது மாவிளக்கு, எலுமிச்சை விளக்கு, அகல் விளக்கு ஏற்றி அன்னையை வழிபட்டால் நினைத்தது நிறைவேறும் என்ற நம்பிக்கை உள்ளது. விவசாயிகள் தங்கள் செல்வம் பெருகுவதற்காக நெல் மூட்டைகளைக் காணிக்கையாக வழங்குகிறார்கள்.” என்றார்.
திருமண பாக்கியம்
செவ்வாய் தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் செவ்வாய் கிழமையன்று வழிபட்டுவர தோஷம் நீங்கும் என்ற நம்பிக்கையும் உள்ளது. ஞாயிற்றுக் கிழமையன்று உச்சிகால பூஜையில் பங்கேற்று வேண்டிக்கொள்பவர்களுக்கு, வெற்றிபெறவே முடியாது என்று கருதப்பட்ட நீதிமன்ற வழக்குகளில்கூட நியாயம் கிடைக்கும். அன்றைய தினம் குழந்தை வரம் கேட்டுத் தொட்டில் கட்டுதல், திருமண பாக்கியம் கேட்டு வேம்புக்குத் தாலி கட்டுதல் போன்ற நேர்த்திக் கடன்களும் இங்கே நிறைவேற்றப்படுகின்றன எனப் பல நம்பிக்கைகள் உண்டு.
பார்வதிக்கு இங்கே அடைக்கலம் கொடுத்ததே அய்யனார்தான். எனவேதான் எந்தப் பூஜையானாலும் முதலில் அய்யனாருக்குச் செய்யப்பட்ட பிறகே, பத்திரகாளிக்கு நடத்தப்படுகிறது.
படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT