Published : 20 Feb 2020 02:38 PM
Last Updated : 20 Feb 2020 02:38 PM
மகா சிவராத்திரி நாளில், விரதம் மேற்கொண்டு சிவ வழிபாடு செய்ய வேண்டும் என அறிவுறுத்துகிறார்கள் ஆச்சார்யர்கள்.
மகா சிவராத்திரி அன்று விரதம் இருப்பவர்கள், சிவராத்திரிக்கு முதல் நாள் ஒருவேளை மட்டுமே உணவு உட்கொள்ள வேண்டும். சிவராத்திரி அன்று அதிகாலையிலேயே எழுந்து குளித்து, வீட்டில் உள்ள சிவபெருமானின் உருவப்படத்திற்கு தீப தூப ஆராதனை செய்து வழிபட வேண்டும்.
இதைத்தொடர்ந்து, சிவன் கோயிலுக்கு சென்று முறையே தரிசனம் செய்ய வேண்டும். மாலையில் மீண்டும் குளித்து சிவபூஜை செய்ய வேண்டும். வீட்டிலேயே இதை மேற்கொள்ளலாம். அருகில் உள்ள சிவன் கோயில்களில் இரவில் நடைபெறும் சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்டும் வழிபடலாம்.
பூஜையின் போது சிவாய நம என்ற மந்திரத்தை உச்சரிப்பது மனதில் நல்ல அதிர்வுகளை உண்டுபண்ணும். பூஜையின் போது, சிவனுக்கு உகந்த வில்வ இலைகளைக் கொண்டு அர்ச்சனை செய்வது இன்னும் வீரியமாக்கும். நல்ல நல்ல பலன்களையெல்லாம் வழங்கும்.
அன்றைய தினம் இரவில் உறங்காமல், தூங்காமல் நான்கு வேளையும் பூஜை செய்து, wஆன்கு வேளை பூஜைகளையும் கண்ணாரத் தரிசித்து, மறுநாள் விடிந்ததும் நீராடி, சிவனாரை வழிபட்டு, சர்க்கரைப் பொங்கல், பால் பாயசம், தயிர்சாதம் என ஏதேனும் ஒன்றை நைவேத்தியம் செய்து, ஏழை-எளியவர்களுக்கு தங்களால் முடிந்த அன்னதானத்தை வழங்கி, விரதத்தை நிறைவு செய்யலாம்.
சிவராத்திரி முழுவதும் விரதம் இருக்க முடியாதவர்கள், ஒவ்வொரு ஜாம பூஜை முடித்த பிறகும் தண்ணீர், பால், பழங்களை உண்ணலாம். பூமிதானம், தங்க தானம், கோடிக்கணக்கான பசுக்கள் தானம் என செய்யச் சொல்கிறது சாஸ்திரம். நம்மால் முடிந்த தானங்களைச் செய்வோம்; சிவனருளைப் பெறுவோம்!
வாழ்வில், ஒருமுறையேனும் மகாசிவராத்திரி விரதம் மேற்கொள்வதும் சிவாலயத்துக்குச் சென்று விசேஷ பூஜையில் தரிசிப்பதும் இந்த நம் ஜென்மத்தின் அனைத்துப் பாவங்களையும் போக்கிவிடும். புண்ணியங்களை பெருக்கித் தரும் என்பது உறுதி!
21.02.2020 வெள்ளிக்கிழமை மகா சிவராத்திரி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT