Published : 13 Aug 2015 12:10 PM
Last Updated : 13 Aug 2015 12:10 PM
இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் மூன்றாவது ஜனாதிபதி உமர், தனது மாளிகை உப்பரிகையில் நண்பர்களுடன் அமர்ந்திருந்தார். அப்போது யாரோ ஒருவரின் இறுதி ஊர்வலம் சென்று கொண்டிருந்தது. அதைப் பார்த்த உமர் “இவர் ஒரு சொர்க்கவாதி” என்றார்.
அடுத்து வந்த இறுதி ஊர்வலத்தைப் பார்த்ததும், “இவர் ஒரு நரகவாதி” என்றார். பக்கத்தில் இருந்த தோழர் கேட்டார்.
“இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! இருந்த இடத்திலிருந்தே இவ்வளவு உறுதியாக இவர் சொர்க்கவாதி, இவர் நரகவாதி என்று எப்படிச் சொல்லுகிறீர்கள்?”
“அந்த ஊர்வலத்தில் செல்லும் மக்களின் உணர்வுகளைப் பார்த்துத்தான் சொன்னேன்” என்றார் உமர்.
அவர்தான், அரபு உலகத்தின் எளிமைக்கு இலக்கணமாக திகழ்ந்து, மக்களுக்காகவே வாழ்ந்து காட்டிய நேர்வழி பெற்ற ஜனாதிபதி என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
ஆம், மரணம் ஒரு மனிதனுக்கு முற்றுப்புள்ளியல்ல. மனிதநேயம் கொண்டவர்களின் மரணம், வாழும் மக்களுக்கும், இனி வாழ வேண்டிய இளைய தலைமுறைக்கும், வருங்கால சந்ததிகளுக்கும் சரித்திரம்.
“மரணத்திற்குப்பின் மனிதனோடு வருவது அவன் செய்த நல்ல செயல்களே. அச்செயல்களே அவனை இறைவனின் சிறப்பு விருந்தாளியாக மறுமையில் சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லும்” என்கிறது குர்ஆன்.
“அவனே (இறைவனே) மரணத்தையும் வாழ்வையும் உண்டாக்கினான்;
உங்களில் யார் மிகச் சிறந்த செயல் செய்கிறார்கள் என்பதைச் சோதிப்பதற்காகவே” (67:2).
அப்படியெனில் சோதனைக்குப் பின் மற்றொரு உலகம் உள்ளது; அதுவே மறுமையெனும் இறை சந்திப்பு. அதற்காக உனது இறைவன் அளித்துள்ள இந்த வாழ்க்கையை புண்ணியமிக்கச் செயல்களால் அழகாக்கிக் கொள் என்பது தானே இதன் பொருள்.
இறைவன் மீதுள்ள நேசத்தின் காரணமாகத் தமக்கு விருப்பமான பொருளை உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், வறியவர்களுக்கும், வழிப்போக்கர்களூக்கும், யாசிப்போருக்கும், (கடனில்) அடிமையானவர்களை மீட்பதற்கும் வழங்க வேண்டும். மேலும், தொழுகையை நிலை நாட்டி, ஏழைகளுக்கான ஸகாத் எனும் தானத்தைக் கொடுக்க வேண்டும் - இவையே புண்ணியச் செயல்களாகும்.
வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்
மேலும் வாக்குறுதி அளித்தால் அதை நிறைவேற்ற வேண்டும். வறுமையிலும் துன்பத்திலும், சத்தியத்திற்கும் அசத்தியத்திற்கும் இடையே நடக்கும் போராட்டத்தின்போதும் பொறுமையுடன் நிலைத்து நிற்க வேண்டும். இப்படிச் செய்பவர்களே புண்ணியவான்கள்! இவர்களே உண்மையாளர்கள்; இவர்களே இறையச்சம் உடையவர்கள்” (2:177) என்ற ஓர் அற்புத விளக்கத்தைத் தருகிறது குர்ஆன்.
இப்படிப்பட்ட புண்ணிய வாழ்வை வாழ்ந்து மறைந்தவர் மரணத்திற்காக உலகமே கண்ணீர் விடும். அவர்கள் வாழும்போதும் அமைதி நிலவும். மறைந்த பின்னும் அமைதி நிலவும். வெறும் கையோடு வந்த அவர்கள் வெறும் கையோடு இவ்வுலகை விட்டு மறைவார்கள்.
ஆனால் மக்கள் அவர்களை மண்ணறையோடு மறந்து விடமாட்டார்கள். வாழும் காலமெல்லாம் தங்கள் இதய சிம்மாசனத்தில் வைத்து அவர்களின் வாழ்க்கைப்படி வாழ முயலுவார்கள். இவர்கள் தான் அமரர்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT