Published : 13 Aug 2015 12:49 PM
Last Updated : 13 Aug 2015 12:49 PM
பூமி பிராட்டியின் அவதாரமாக ஸ்ரீ வில்லிபுத்தூரில் உள்ள வடபத்ரசாயி பெருமாளுக்கு புஷ்பக் கைங்கரியம் செய்து கொண்டிருந்த பெரியாழ்வாரின் தோட்டத்தில், திருஆடிப்பூர நாளில் துளசிச் செடியின் கீழ், சின்னஞ்சிறு பெண் குழந்தையாய் ஆண்டாள் தோன்றினாள். நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாய் பெரியாழ்வாரிடம் கண்ணன் கதைகளைக் கேட்டும், பக்த பிரபாவத்தில் மூழ்கியும் ஆண்டாள் வளர்ந்தாள். பேதைப் பருவப் பெண்ணான ஆண்டாள், ஸ்ரீ வில்லிபுத்தூரை பிருந்தாவனமாக நினைக்கத் துவங்கினாள்.
துவாபர யுகத்தில் வடமதுரையில் வாழ்ந்து லீலைகள் புரிந்த கண்ணனை, கலியுகத்தில் தென்மதுரைக்கு அருகில் வாழ்ந்த ஆண்டாள் தன் மனதில் வரித்தாள். தன்னைச் சிறிதுசிறிதாக, ஆய்ச்சியர் குலப் பெண்ணாகவே உணரத் துவங்கினாள். நடை, உடை, பாவனை எல்லாம் கண்ணனின் அணுக்கமான ஆயர் குலப்பெண்ணாகவே மாறியது. இதனாலேயே ஆண்டாள் தனது கேசத்தைக் கொண்டையாக முடிந்திருப்பாள். இன்றும் திருக்கோயில்களில் நாம் அதைக் காண முடியும்.
கண்ணனை மணவாளனாய் வரித்ததால், பெரியாழ்வார் தொடுத்த பூமாலையைத் தான் அணிந்து அழகு பார்த்து, சூடிக் கொடுத்த நாச்சியார் என்றும் புகழ் பெற்றாள். பெரியாழ்வார் அபச்சாரம் எனக் கருதி, வேறு மாலை தொடுத்து பெருமாளுக்கு அளித்தபோது, ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலையே தனக்கு விருப்பம் என்று பெருமான் தெரிவித்தார். ஆண்டாள் பூமாலை அணிந்ததோடு நில்லாமல், பக்தியால் பாமாலையும் சூட்டினாள்.
பாமாலையின் பெருமை
ஹிரண்யாக்ஷன் என்னும் அசுரன், சமுத்திரத்துக்குள் மறைத்து வைத்த பூமி பிராட்டியை வெளியே கொண்டு வர பெருமான் வராக அவதாரம் எடுத்தது போலவும், யது குலத்தைப் பெருமை கொள்ளச் செய்ய பெருமான் கண்ணனாக அவதரித்ததைப் போலவும், சம்சாரம் எனும் சாகரத்தில் மூழ்கியுள்ள நம்மைக் கைதூக்கிவிட ஆண்டாள் திருப்பாவையும், நாச்சியார் திருமொழியையும் அருளிச் செய்தாள்.
30 பாசுரங்களைக் கொண்ட திருப்பாவை மார்கழி மாதத்தில் பிரபலமாகப் பாடப்படுகிறது. கோதையின் உபநிடதம் என்றும் பெயர் பெற்றது.
கோதை தமிழ் ஐயைந்தும் ஐந்தும்
அறியாத மானிடரை
வையம் சுமப்பதும் வம்பு
என்று சொல்லக்கூடிய அளவுக்கு திருப்பாவையின் சிறப்பு, வைணவ உலகில் முக்கியத்துவம் வாய்ந்தது.
ஆறாம் திருமொழியான வாரணமாயிரம், என்று தொடங்கும் பதிகத்தில், மாயவன் தன்னைத் திருமணம் செய்துகொள்வதாகக் கண்ட கனவைத் தோழிக்கு உரைக்கிறாள். இன்றளவும் பல திருமணங்களில் இப்பாசுரங்கள் சீர்பாடல் என்ற நிகழ்ச்சியாக நிகழ்த்தப்படுகிறது.
வாரணம் ஆயிரம் சூழவ லம்செய்து
நாரன் நம்பி நடக்கின்றான் என்றெதிர்
பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்
தோரணம் நாட்டக் கனாக் கண்டேன் தோழி நான்
வீதிகள் முழுக்க தோரணங்கள் கட்டப்பட்டு விழாக் கோலம் பூண்டுள்ளது. ஆணழகனான நாரண நம்பி ஆயிரம் யானைகள் புடைசூழ கம்பீரமாக நகர் வலம் வருகிறான் என்று ஒவ்வொரு காட்சியாக விவரிக்கிறாள். ஒவ்வொரு பாசுரத்திலும் திருமண நிகழ்ச்சிகளை விவரித்துப் பின் அத்தனையும் கனவு என்று கூறுகிறாள்.
ஆயனுக்காகத் தான் கண்ட கனாவினை
வேயர் புகழ் வில்லி புத்தூர்க் கோன் கோதை சொல்
தூய தமிழ் மாலை ஈரைந்தும் வல்லவர்
வாயும் நன்மக்களைப் பெற்று மகிழ்வரே
என்று இந்தப் பத்துப் பாசுரங்களைப் படித்துணர்ந்து மனம் ஒன்றிப்போய் நிற்பவர்கள் நற்குணம் அமைந்த நன்மக்களைப் பெறுவார்கள் என்று சொல்லப்படுகிறது.
ஆண்டாளுக்கு அண்ணன் ஆனவர்
பிற்காலத்தில் அவதரித்த வைணவப் பெருந்தகையான இராமானுஜர் திருப்பாவையின் பெருமையினை அனுபவித்தார். ஒன்பதாம் திருமொழியில், திருமாலிருஞ்சோலை எம்பெருமானை வழிபட்டு,
நாறு நறும் பொழில்மா லிருஞ்சோலை நம்பிக்கு நான்
நூறு தடாவில் வெண்ணெய் வாய் நேர்ந்து பராவி வைத்தேன்
நூறு தடா நிறைந்த அக்கார அடிசில் சொன்னேன்
ஏறு திருவுடையான் இன்று வந்திவை கொள்ளுங்கொலோ?
என்று நாரணன் நம்பியை ஆண்டாள் ஆவலுடன் எதிர்பார்ப்பதாக அமைந்துள்ளது.
ஆண்டாள் சொல்லிச் சென்றதை வைபவமாக்க வேண்டும் என்று ஒரு எண்ணம் இராமானுஜர் மனதில், தோன்றியது. அதைச் செயலிலும் நிகழ்த்தினார். ஒரு பெண்ணின் எண்ணத்தை நிறைவேற்றி வைப்பது சகோதரனே அன்றி, வேறு யாராக இருக்க முடியும்? எனவே, ஸ்ரீ ராமானுஜர் ஆண்டாளுக்கு அண்ணனானார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT