Published : 13 Aug 2015 12:37 PM
Last Updated : 13 Aug 2015 12:37 PM

சமணத் திருத்தலங்கள்: ஆர்பாக்கம் ஆதிபட்டாரகர்

தமிழ் இலக்கியத்தில் அந்தாதி வகையில் சிறந்த திருக்கலம்பகம் நூலகளில் நன்று ஆகும். இக்கலம்பகத்தால் அன்னைத் தமிழுக்கு மேலும் வளமை கூடியது. இந்நூல் உதீசி தேவர் என்கிற சமண முனிவரால் இயற்றப்பட்டது. இவர் கோயில் நகரமான காஞ்சிபுரத்திலிருந்து பதினைந்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஆர்பாக்கம் என்னும் கிராமத்தைச் சார்ந்தவர். இவ்வூர் தோத்திர நூல்களில் ‘பாகை’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆரியப் பெரும்பாக்கம் என்பது முற்காலப் பெயராகும். இந்தத் தலத்தில் ஒரு பழமை வாய்ந்த அருகர் ஆலயம் உள்ளது.

இந்த ஆலயம் கி.பி. பத்தாம் நூற்றாண்டைச் சார்ந்தது. கோயிலுக்கு குடவரையும் மதில் சுவரும் உள்ளது. பள்ளிச்சந்தம் எனப்படும் அரசு மான்ய நிலங்களும் பொற்காசுகளும் இக்கோயிலுக்கு அளிக்கப்பட்டதைக் கல்வெட்டுகள் அறிவிக்கின்றன. மூலவராக ஆதிபகவன் அமர்ந்துள்ளார். இவர் ஆதிபட்டாரகர் என்று சமணர்களால் போற்றப்படுகிறார்.

மேலும் கோயிலில் அறுபத்திநான்கு தீர்த்தங்கரர்களின் உருவச் சிலைகள் இடம் பெற்றுள்ளன. யட்சன், யட்சிகள் சிலைகளாக பக்தர்களுக்கு அருள் மழை பொழிகிறார்கள். இத்தலத்தில் தருமதேவி யட்சிக்கு அடிக்கடி சிறப்புப் பூசைகள் நடைபெறுகின்றன. மண்டபத் தூண்களிலும் அருக பரமேட்டிகள் உருவங்கள் சிறப்பாக அமைந்துள்ளன. உயரமான முகமண்டபத்திற்கு படிகள் கட்டப்பட்டுள்ளன. மண்டபத்தின் முகப்பு மீது அருக பகவானின் அழகிய திருவுருவச் சிலை உள்ளது. கோயிலின் முன்பாகக் கொடி மரம் அமைந்துள்ளது.

ஆதிபட்டாரகர் மீது சமணர்கள் அதிக பக்தியும் நம்பிக்கையும் கொண்டுள்ளனர். எனவே இக்கோயிலில் ஆதிபட்டாரகரை வேண்டிக்கொண்டு பலர் தங்கள் குழந்தைகளுக்கு முடி இறக்கி, காதணி விழாவை நடத்தி நேர்த்திக் கடன் செய்கின்றனர்.

விருஷப தேவரும் நவக்கிரகத் தீர்த்தங்கரர்களில் ஒருவரான முக்குடை மாதவன் முனிசுவிரதர் பகவான் சிலை கோயிலில் அமைந்துள்ளது. அச்சிலை எம்.டி. ராஜேந்திரன் என்பரால் ஆலயத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. சனியின் ஆட்சியில் உள்ளவர்கள், தீர்த்தங்கரர் முனிசுவிரதரைத் தொழுதால் நற்பலன்கள் உண்டென நம்பித் தொழுதுவருகின்றனர்.

ஆதிபகவனான வெள்ளி மலை விருஷப தேவருக்கும், சிவபெருமானுக்கும் ஒற்றுமைகள் உண்டு. அவற்றில் ஒன்று மகா சிவராத்திரி நாளாகும்.

அந்த நன்னாள் ஆதிபகவனுக்கும் முக்கியமானதாகும். அன்றுதான் பகவான் விருஷப தேவர் கைலாய மலையில் வீடுபேறு அடைந்த நாள். அந்நாளில் ஆர்பாக்கம் கோயிலில் வெகு சிறப்பாக விழா எடுக்கின்றனர். ஊரே அன்று விழாக்கோலம் பூண்டுவிடுகிறது. அருகிலுள்ள ஊர்களின் எல்லா மதத்தினரும் ஒன்று கூடி, “ஒற்றுமை வேற்றுமை ஒன்றிலே காண்கெனா சொற்றவா! பாகைவாழ் சோதியே! ஆதியே! செற்றமும் பற்றுமே சீர்கெடச் செய்திடும் அற்றமே நோக்கிலேன் ஆதி பட்டாரகா!” என்று போற்றிப் பாடி மகிழ்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x