Published : 09 Jul 2015 11:51 AM
Last Updated : 09 Jul 2015 11:51 AM
திருவையாற்றில் உள்ள ஈஸ்வரனைப் பற்றித் துதிக்கிறபோது, அவருக்கு ஹரியைத் தவிர வேறு பத்தினி இல்லையென்று அப்பர் சுவாமிகள் சொல்கிறார்.
‘அரியலால் தேவியில்லை ஐயன் ஐயாறனார்க்கே'
அம்பாளும் மகாவிஷ்ணுவும் ஒன்றேதான் என்கிற தத்துவத்தையே புராண ரீதியில் சொல்கிறபோது அவளை நாராயண சகோதரி என்கிறோம்.
திருமங்கையாழ்வார் பெருமாளைப் பற்றிப் பாடுகிறபோது,
‘பிறை தங்கு சடையானை வலத்தே வைத்து' என்கிறார். பெருமாள் தமக்கு வலப்பாதியில் ஈசுவரனை வைத்துக்கொண்டிருக்கிறார் என்றால், ஈசுவரனின் இடபாகத்தில் பெருமாள் இருக்கிறார் என்றுதான் அர்த்தம்.
இதைப் பௌராணிகமாகச் சொல்கிறபோது, அவளை ஈஸ்வரனுக்குப் பத்தினி என்றும், மகாவிஷ்ணுவுக்குத் தங்கை என்றும் பார்க்கிறோம். அம்பாளை ‘சிவ சக்தி ஐக்ய ரூபிணி' என்று சொல்லி முடிக்கிற லலிதா சகஸ்ரநாமத்தில் இன்னோர் இடத்தில் ‘பத்மநாப ஸகோதரி' என்று கூறியிருக்கிறது. அம்பாளைத் தவிர வேறெந்த தேவதா பேதத்தையும் பாடாத ஸ்ரீ சியாமா சாஸ்திரிகள், தம் கீர்த்தனங்களிலெல்லாம் அவளை ‘சியாம கிருஷ்ண சஹோதரி' என்றே அழைத்து, இதையே தம் முத்திரையாக வைத்திருக்கிறார்.
கிருஷ்ணாஷ்டமியின்போதே யசோதைக்குப் பெண்ணாகப் பிறந்த விஷ்ணு மாயை அவள்தான். ஸ்ரீராம நவமியின்போதோ அவள் ஞானாம்பிகையாக அவதரித்த வசந்த நவராத்திரி நிகழ்கிறது. விஷ்ணு அவதரித்தபோதே இவளும் அவதரித்தாள் என்றால் இரண்டும் ஒன்று அல்லது உடன்பிறப்புகள்தானே.
ஆண்டாள் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவைக் கல்யாணம் செய்துகொள்வதாக சொப்பனம் கண்டு, அதைப் பாசுரமாகப் பாடியிருக்கிறாள். அதிலே வைதிக பிராம்மண சம்பிரதாயப்படி, தனக்கு நாத்தனார் கூரைப் புடவை கட்டி மாலை போட்டு முகூர்த்தப் பந்தலுக்கு அழைத்துவந்ததாகச் சொல்கிறபோது, கிருஷ்ணனின் சகோதரியான அம்பாளே இப்படி நாத்தனார் ஸ்தானம் வகித்ததாக ஆண்டாள் பாடியிருக்கிறாள்.
‘மந்திரக் கோடி உடுத்தி மணமாலை
அந்தரி சூட்டக் கனாக் கண்டேன் தோழிநான்!'
(அந்தரி என்றால் அம்பாள்)
இப்படி அம்பாளை ஒரு பக்கம் ஈசுவரனோடு அபேதமாகவும், இன்னொரு பக்கம் ஸ்ரீ மகா விஷ்ணுவோடு அபேதமாகவும், ஒருத்தருக்குப் பத்தினி, இன்னொருத்தருக்கு சகோதரி என்று பாவித்துப் பழகிவிட்டால், அப்புறம் ஈஸ்வரனுக்கும் பெருமாளுக்குமிடையே உசத்தி, தாழ்த்தி செலுத்தவே மாட்டோம். சைவ, வைஷ்ணவப் பிணக்கு அறுந்தே போகும்.
புருஷ சம்பந்தமில்லாமல் தனியாக இருக்கிற அம்பாளான துர்க்கையம்மன் எப்படியிருக்கிறாள்? நீலமேக சியாமளமாக இருக்கிறாள். கையிலே சங்கும் சக்கரமும் வைத்திருக்கிறாள். மகிஷாசுரன் போன்ற பல ராக்ஷதர்களை சம்கரித்திருப்பவள் இவள்தான். இதையெல்லாம் பார்த்தால் ஸ்ரீமகாவிஷ்ணுவே இவளுடைய சகோதரர் என்று சொல்லாமலே புரியும். இதே வர்ணம், இதேமாதிரி சங்கு சக்கரம், அசுரர்களை சம்கரிப்பதற்காக என்ற திரும்பத் திரும்ப அவதாரங்கள் எல்லாம் மகாவிஷ்ணுவிடமே காணப்படுகின்றன.
பரம கருணையினால் இருவரும் இப்படி துஷ்ட நிக்ரகம் செய்கிறார்கள். இந்த மாயப் பிரபஞ்சத்தை லீலா விநோதமாக நடத்துவது இந்த இருவரும்தான். மாயோன், மாயோன் என்றே அவரைச் சொல்வார்கள். இது சங்க காலத்திலிருந்து தமிழ்நாட்டில் உள்ள பெயர். அவளையோ மகாமாயை என்றே சொல்கிறோம். மற்ற சகோதர ஜோடிகளைவிட இந்த இரண்டு பேரும் ரொம்பவும் நெருக்கமாக இருக்கிறார்கள். ஒன்று என்றே சொல்லிவிடலாம்போல். மேலே நான் சொன்ன துர்க்கைக்கு ‘விஷ்ணு துர்க்கை' என்றே பேர் இருக்கிறது.
மாயம் செய்வதை முக்கியமாக பெண்பாலாகவே கருதுவது மரபு. மகாவிஷ்ணுவிடத்தில் இந்த அம்சம் தூக்கலாக இருக்கிறது. அதனால்தான் அவர் அமிருதத்தைப் பங்கீடு பண்ணினபோது மோகினியாக அவதாரம் பண்ணினார். இவர் அம்பாளின் இன்னொரு ரூபம் என்பதற்கு ரொம்பவும் பொருத்தமாக மோகினியைப் பரமேசுவரனே கல்யாணம் செய்துகொண்டிருக்கிறார்.
அம்பாளும், மகாவிஷ்ணுவும், பரமேசுவரனும் மூன்று ரத்தினங்கள். “ரத்ன த்ரய பரீக்ஷா” என்றே ஸ்ரீ அப்பைய தீக்ஷிதர் ஒரு கிரந்தம் செய்திருக்கிறார். இந்த மூன்றும் ஒரே பரம சக்தியின் மூன்று ரூப பேதங்கள்தான். அம்பாள் மற்ற இரண்டு பேரோடும் பிரிக்க முடியாமல் சம்பந்தப்பட்டிருக்கிறாள். ஒருத்தருக்குப் பத்தினியாகவும் இன்னொருத்தருக்கு சகோதரியாகவும் இருக்கிறாள்.
இந்த மூன்று மூர்த்திகளிடமும் உயர்வு தாழ்வு கற்பிக்காத பக்தி வேண்டும். எல்லாவற்றுக்கும் அடிப்படையாக இருக்கிற சத்தியம் (Truth) சிவம் என்றும், அதுவே பலவாகத் தெரிகிறதற்குக் காரணமான சக்தி (Energy) அம்பாள் அல்லது விஷ்ணு என்றும் புரிந்துகொண்டு பக்தி செலுத்த வேண்டும். அம்பாளுக்கும் மகாவிஷ்ணுவுக்கும் பேதமில்லை என்பதைத் தத்துவ ரீதியில் சொன்னேன்.
தெய்வத்தின் குரல் (முதல் பாகம்)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT