Published : 13 Oct 2019 09:54 AM
Last Updated : 13 Oct 2019 09:54 AM
வி.ராம்ஜி
ருத்ராட்சம் அணிந்தால், மனமும், உடலும் தூய்மை அடையும். நல்வழி நடக்கவும் நற்கதி அடையவும் வழி கிடைக்கும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
எப்படி மருந்துக்குப் பத்தியம் அவசியமோ அதுபோல ருத்ராட்சம் அணிபவர்களும் மது அருந்துதல், புகை பிடித்தல், புலால் உண்ணுதல் போன்றவற்றை படிப்படியாக விட்டுவிட முயற்சிக்க வேண்டும். (முக்கியமாக மாடு, பன்றி மாமிசம் சாப்பிடவேக்கூடாது). ருத்ராட்சம் அணிந்தது முதல் முழுவதுமாக விட்டுவிட வேண்டும். சுத்த சைவ உணவிற்கு மாறிவிட வேண்டும் அதுவே உத்தமமானது.
ருத்ராட்சத்தில் முகமா? அப்படியென்றால் என்ன?
ருத்ராட்சத்தின் குறுக்கே அழுத்தமான கோடுகளைக் காணலாம், இந்தக் கோடுகளுக்குத்தான் முகங்கள் என்று பெயர். ஐந்து கோடுகள் இருந்தால் ஐந்து முகம். ஆறு கோடுகள் இருந்தால் ஆறு முகம் என்று கணக்கிட வேண்டும். . எத்தனை முகம் என்பதைக் கண்டுபிடிக்க எவ்வித முன் அனுபவமும் தேவையில்லை. கண்ணால் சாதாரணமாகப் பார்த்தாலே தெரியும்.
அதுமட்டுமல்ல. எல்லா இடங்களிலும் எளிதாக, மிகமிக சகாயமான விலையில் ருத்திராட்சம் கிடைக்கிறது. எல்லோரும் அணிந்து கொள்ளலாம்.
பகவான் சிவபெருமான் திருமுகம் ஐந்து, நமசிவாய ஐந்தெழுத்து, பஞ்சபூதங்கள் ஐந்து (நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம்), நமது கையில், காலில் உள்ள விரல்கள் தலா ஐந்து. புலன்கள் ஐந்து. இப்படி ஐந்தை வரிசைப்படுத்திக் கொண்டே செல்லலாம் ஐந்திற்கும் இவ்வுலகிற்கும் அதிகமான சம்பந்தம் உண்டு மற்றும் சிவபெருமான் புரியும் கரும (தொழில்) காரியங்கள் ஐந்து. படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்.
ஐந்து முக ருத்ராட்சம் அணிவதே மிகச் சிறப்பு. இதை ஆண், பெண், குழந்தைகள் என சகலமானவர்களும் அணியலாம். ஐந்து முக ருத்ராட்சத்திலேயே மற்ற எல்லா முக ருத்ராட்சங்களினால் கிடைக்கின்ற பலன்களும் அடங்கிவிடும்.
பெண்கள் ருத்ராட்சம் அணியக்கூடாது என சிலர் சொல்கிறார்களே?
பெண்களின் பெருந்தெய்வமாக விளங்குபவள் ஆதிபராசக்தி. அவள் ருத்ராட்சம் அணிந்திருப்பதை, கொந்தளகம் சடை பிடித்து விரித்து பொன்தோள் குழை கழுத்தில் கண்டிகையின் குப்பை பூட்டி என்று விவரிக்கிறது (அருணாசலபுராணம். பழி, பாவம் முதலியவற்றை முழுவதுமாகத் தீர்க்கிற திருநீறையும், ருத்ராட்சத்தையும் தனது திருமேனி முழுவதிலும் அகிலாண்டேஸ்வரி அணிந்து கொண்டாளாம். பராசத்திக்கு ஏது பழியும், பாவமும்? நமக்கு வழி காட்டுவதற்காகத்தானே அம்பிகையே ருத்ராட்சம் அணிந்து கொள்கிறாள்.
ருத்ராட்சம் அணிந்தால்தான் மனமும், உடலும் தூய்மை அடையும். நல்வழி நற்கதி முக்திக்கு வழிநடத்தும். எனவே ருத்ராட்சம் அணிந்து கொள்ளுங்கள். ஆனந்தமாக வாழலாம்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment