Published : 09 Oct 2019 04:10 PM
Last Updated : 09 Oct 2019 04:10 PM
வி.ராம்ஜி
ஒருவர் ஏழு ஜென்மங்கள் தொடர்ந்து புண்ணியம் செய்திருந்தால், அவர்களுக்கு ருத்ராட்சம் கழுத்தில் அணியும் பாக்கியம் கிடைக்கும்என்கின்றன சிவாகம நூல்கள். அதேபோல், இந்த ஜென்மத்தில் மஹா புண்ணியம் செய்திருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால், ருத்ராட்சம் அணிவதற்கு இறைவனின் அருட்பார்வை உண்டு என்கிறார்கள் சிவாச்சார்யர்கள்.
ருத்ராட்சத்தின் மகிமையை இன்று பலரும் உணர்ந்துள்ளனர். ருத்ராட்சம் தோன்றிய வரலாறு அறிந்து கொள்வது அவசியம். அது சுவாரஸ்யமானதும் கூட!
நாரத முனிவருக்கு பழம் ஒன்று கிடைத்தது. அந்தப் பழத்தை அவர் மகாவிஷ்ணுவிடம் காண்பித்து, இது என்ன பழம்? இந்தப் பழத்தை இதுவரை நான் பார்த்ததும் இல்லை; சாப்பிட்டதுமில்லை என்று கேட்டார்.
அதற்கு திருமால், ’திரிபுராசுரன் என்ற அரக்கன் இருந்தான். அவன் சர்வ வல்லமை படைத்தவன். பிரம்மாவின் வரம் பெற்றவன். அந்த கர்வத்தினால் தேவர்களையும் முனிவர்களையும் துன்புறுத்தினான். அப்போது, தேவர்கள் என்னிடம் வந்து அந்த அரக்கனை அழிக்கும்படி வேண்டினார்கள். நான் அவர்களை அழைத்துக்கொண்டு ஈசனிடம் சென்றேன். அவரிடம் முறையிட்டோம்.
சிவபெருமான், தேவர்களின் சக்தியை ஒரேசக்தியாக மாற்றினார். மிகப்பெரிய வல்லமை படைத்த ஆயுதம் ஒன்றை உண்டாக்கினார். அந்த ஆயுதத்தின் பெயர் அகோரம். தேவர்களைக் காக்கவேண்டுமெனில், திரிபுராசுரனை அழிக்கவேண்டும். கண்களை மூடாமல் அகோர அஸ்திர நிர்மாணத்திற்காக சிவபெருமான் கடும் தவமிருந்தார்.
அப்போது மூன்று கண்களையும் அவர் மூடும்போது, பல ஆண்டுகள் மூடாமல் இருந்து மூடுவதால் மூன்று கண்களில் இருந்தும் கண்ணீர் சிந்தியது. அந்தக் கண்ணீர் பூமியில் விழுந்து ருத்ராட்சமரமாக உண்டானது. அந்த ருத்ராட்சம் மரத்தில் இருந்து விழுந்த பழம்தான் இது, என்றார் மகாவிஷ்ணு.
ருத்ராட்சம் வந்த சரிதம் இதுதான் என்கிறது புராணம்.
பக்தி சிரத்தையாக, ருத்ராட்சம் அணிந்திருப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களையும் அவர்களின் குடும்பத்தாரையும் வாழையடி வாழையென சந்ததியினரையும் ஈசன் காத்தருள்வார் என்கிறார்கள் சிவனடியார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT