Published : 29 May 2014 04:11 PM
Last Updated : 29 May 2014 04:11 PM
பக்தனைக் காக்க சிவன் செய்யும் லீலைகள் ஆச்சரியகரமானவை. திருமாணிக்க வாசகரின் வரலாற்றில் நிகழ்ந்த ஒரு லீலை இதற்குச் சரியான உதாரணம்.
மதுரைக்கு அருகே அமைந்துள்ள திருவாதவூர் என்ற ஊரில் வசித்துவந்த சம்புபாதசிருதர் சிவஞானவதி தம்பதியர் தங்கள் மகனுக்குத் திருவாதவூரார் எனப் பெயரிட்டனர். இந்தக் குழந்தைக்கு இளம் வயதிலேயே சகல வித கலைகளும் கை வரப் பெற்றன. திறமை மிக்க திருவாதவூரார் குறித்து கேள்விப்பட்ட மதுரை மன்னன் வரகுணபாண்டியன் தன் அமைச்சரவையில் பதவி அளித்தான். அவரது திறமைகளைக் கண்ட மன்னன், தென்னவன் பிரம்மராயன் என்னும் பட்டத்தை அவருக்கு அளித்து முதன்மை அமைச்சராகப் பதவி உயர்வும் அளித்தான். நிதி நிர்வாகமும் இவரே செய்துவந்ததால், தன் படைக்குத் தேவையான புதிய அரேபியக் குதிரைகளை வாங்க இவரையே பணித்தான் பாண்டியன்.
படை வீரர்கள் பலருடன் புறப்பட்ட அவர் திருப்பெருந்துறை என்ற இடத்திற்கு வந்தார். படை வீரர்கள் சிறிது ஓய்வு எடுத்த பின் செல்லலாம் என்று கூறினார். அப்போது குரு ஒருவர் மரத்தடியில் அமர்ந்திருக்க அவரைச் சுற்றிலும் மாணாக்கர்கள் அமர்ந்து ஞான பாட விளக்கம் கேட்டுக்கொண்டு இருந்ததைப் பார்த்தார்.
பிறக்கும்போதே சிவ பக்தி அதிகம் கொண்ட இவருக்குச் சூழ்நிலையும் அப்பக்தியை உரமிட்டு வளர்த்தது. இந்த நிலையில் குரு, சிஷ்யர்களைக் கண்ட அவர் மனம் புரியவொண்ணா சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தது. தான் வந்த வேலையை மறந்தார். அப்பெருமானை நோக்கி வேகமாகச் சென்றார். அருகில் வந்து வணங்கிய திருவாதவூராரின் தலையில் கை வைத்து ஆசிர்வதித்த அவர், இப்பொழுது கைக்கொண்ட கடமைகளை முடித்துவிட்டுத் தில்லைக்கு வந்து தன்னைச் சந்திக்குமாறு கூறினார். சிவனே அந்த குருவின் உருவாய் வந்தார் என்கிறது திருவிளையாடல் புராணம்.
நல்ல குதிரைகள் வருவதற்குக் கால தாமதம் ஆனதால், படை வீரர்களை மீண்டும் தலைநகருக்கு அனுப்பிவிட்டார் அமைச்சர். தாம் மட்டும் அங்கேயே இருந்தார். நெஞ்சிலோ கரை புரண்ட சிவ பக்தி. கையிலோ மித மிஞ்சிய காசு பணம். செல்வத்தைத் திருப்பணிகளுக்கு வாரி வாரி வழங்கினார். அடியார்களை அரவணைத்தார். செல்வமெல்லாம் விரைவில் கரைந்து காணாமல் போய்விட்டது. ஒற்றன் மூலம் செய்தி அறிந்தான் மன்னன். அமைச்சரை அழைத்துவரச் செய்தான். அப்போதுதான் தன் நிலை உணர்ந்த அவர், இறைவனிடம் முறையிட்டார். காத்தருளுமாறு வேண்டினார்.
சிவனோ குதிரைகள் வந்து சேருமென மன்னனிடம் தெரிவிக்குமாறு அசரீரியாகப் பணித்தார். வாதவூராரும் அவ்வாறே கூற, ஏற்கெனவே நிகழ்ந்த அனைத்தையும் ஒற்றர் மூலம் அறிந்திருந்த மன்னன், இவர் சொல்லை நம்பாமல் சிறையில் அடைத்தான். சிறையில் துன்பங்கள் பலவற்றை அனுபவித்த திருவாதவூராரைக் காக்க சிவன் திருவுளம் கொண்டார்.
காட்டில் உள்ள நரிகளை எல்லாம் பரிகளாக அதாவது குதிரைகளாக மாற்றிய சிவன், தானே அப்படைக்குத் தலைவனார். பூத கணங்களைப் படை வீரர்களாக்கினார். அரசவைக்கு வந்தார். குதிரைகள் கம்பீரமாகவும், பிடரி சிலிர்த்தும் நின்றிருந்தன. அவை படைக்கு உரிய அத்தனை அங்க லட்சணங்களையும் கொண்டிருந்தன. மனம் மயங்கிய மன்னன் அவற்றைப் பெற்றுக்கொண்டு திருவாதவூரரை விடுதலை செய்தான்.
அதே நாள் இரவு வந்ததும் குதிரை லாயத்தில் கட்டப்பட்டிருந்த பரிகள் அனைத்தும் நரிகளாக மாறி ஊளையிட்டன. படை வீரர்களாக இருந்த பூத கணங்கள் மாயமாய் மறைந்தன. இதைக் கேள்விப்பட்ட மன்னன் திருவாதவூரரை மீண்டும் கைது செய்து வைகை ஆற்றங்கரையில் சுட்டுப் பொசுக்கும் மணலில் நிற்க வைத்துக் கட்டியதோடு தலையில் பெரிய பாறாங்கற்களையும் வைத்துச் சுமை தூக்கச் செய்தான். சூடு பொறுக்காமல் காலை மாற்றி மாற்றி வைத்துப் பரிதவித்த வாதவூரின் காலடி மண் சூடு தணியப் பெரும் மழையை வரவழைத்தார் சிவபெருமான்.
சில நொடிகளிலேயே வெள்ளம் பெருக்கெடுத்து ஓடத் தொடங்கியது. வைகை உடைப்பெடுத்துக்கொண்டு வெள்ளம் ஊருக்குள் பாயத் தொடங்கியது. உடைப்பைத் தடுக்கப் படை வீரர்கள் போதாது என்பதால் வீட்டுக்கு ஒருவர் வீதம் வந்து உடைப்படைக்கக் கட்டளையிட்டான் மன்னன். ஊர் முழுவதும் முழு வீச்சில் வேலையில் இறங்கியது. அப்போது புட்டு விற்கும் வயதான பெண்மணி ஒருவரின் இல்லத்து ஆண்கள் அனைவரும் வெளியூர் சென்றிருக்க, உதவிக்கு ஆள் இன்றித் தவித்தாள். அப்போது சிவன் அவள் முன் திடகாத்திரமான இளைஞன் போல் தோன்றி, தான் உதவுவதாக வாக்களித்தார். அதற்குக் கூலியாகப் புட்டு ஒரு வட்டில் வழங்க வேண்டும் என்று வாய்மொழி ஒப்பந்தமும் செய்துகொண்டார். அப்பெண்ணும் கவலை தீர, கூடைப் புட்டினை வியாபாரம் செய்வதற்காகச் சென்றுவிட்டாள்.
இங்கோ அந்த இளைஞன் படுத்துத் தூங்கிவிட்டான். அவன் பகுதி இடம் மட்டும் அடைபடாததால், வெள்ளம் ஊருக்குள் தொடர்ந்து வந்தது. காரணம் அறிய வந்த மன்னன் இளைஞனை எழுப்பி, சவுக்கால் அடித்தான். ஈசனின் முதுகில் விழுந்த அந்த அடி அங்கிருந்த அனைவர் முதுகிலும் விழுந்தது. அவ்விளைஞன் ஒரு கூடை மண்ணெடுத்து விடுபட்ட இடத்தில் மட்டும் கொட்டினான். அணை முழுவதும் சீராகி வெள்ளமும் ஊருக்குள் வராமல் கடல் நோக்கி ஓடியது. இதனைக் கண்டு வியந்த அனைவரும் அந்த இளைஞன் இருந்த இடம் நோக்கித் திரும்பினார்கள். இளைஞனோ மாயமாக மறைந்துவிட்டான்.
“மன்னா நீ திரட்டிய செல்வமெல்லாம் உனது நல்ல எண்ணத்தினாலேயே வளர்ந்தது. அவை திருவாதவூரரின் நல்ல எண்ணத்தின் மூலம் நற்செயலுக்கே செலவிடப்பட்டது. அவர் மணி போன்ற சிறந்த சொற்களால் திருவாசகத்தைப் பாடியதால், மாணிக்க வாசகர் என்று இனி அழைக்கப்படுவார்” என்று அசிரீரியாக இறைவன் குரல் ஒலித்தது என்கிறது சிவபுராணம்.
சிவனாலேயே சிறப்புக் காரணப் பெயர் பெற்ற திருவாதவூரார் அது முதல் மாணிக்க வாசகர் என்று அழைக்கப்பட்டார். அவர் இயற்றிய திருவாசகம் படிப்போரை உருக வைக்கக்கூடியது. ‘திருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார்’ என்ற சொலவடை சிவ பக்தர்களிடையே இன்றும் மிகப் பிரபலம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT