Published : 23 Jul 2015 12:53 PM
Last Updated : 23 Jul 2015 12:53 PM
தமிழர்கள் வாழும் இடமெல்லாம் ஆடி மாதம், விழாக்களின் மாதமாகவே திகழும். பண்டைய பாண்டிய நாட்டின் தலைநகரான மதுரையில் உள்ள அம்மன் ஆலயங்களில் பிரதானமானது தெப்பக்குளம் மாரியம்மன் கோயில். ஆடி மாதத்தில் வரும் வெள்ளி, செவ்வாய், ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு அலங்காரமும், அபிஷேக ஆராதனைகளும் நடைபெறுகின்றன.
ஆலய சிறப்பு
சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு மதுரையை ஆண்ட கூன்பாண்டியனால், வைகையின் தெற்குக் கரையில் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஆலயம் இது. மதுரையின் கிழக்கு காவல் தெய்வமாகத் திகழும் இந்த மாரியம்மன், துர்க்கையைப் போல எருமைத்தலை (மகிஷாசுரன்) மீது கால் வைத்தபடி அருள்பாலிப்பது சிறப்பு. பிற அம்மன் கோயில்களில் இல்லாத விதமாக இங்கு வலக்காலை இடக்காலின் மீது மடக்கி வைத்து அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார் அம்மன்.
இந்த ஆலயத்தின் மற்றுமோர் சிறப்பு அருகில் உள்ள பிரமாண்டமான தெப்பக்குளம். திருமலை நாயக்கர் ஆட்சிக் காலத்தில், மகால் கட்டுவதற்காக மண் எடுக்கப்பட்ட பள்ளத்தில் உருவாக்கப்பட்டதே இந்தத் தெப்பக்குளம். இந்தக் கோயில் மீனாட்சியம்மன் கோயிலின் உபகோயில்களில் ஒன்றாக நிர்வகிக்கப்படுகிறது.
புறப்பாடும் கொடிப்பட்டமும்
திருவிழாக்கள் குறித்து தக்கார் பிரபு கூறுகையில், “ஆண்டுதோறும் பங்குனி பிரமோத்சவ திருவிழா 10 நாட்கள் நடைபெறும். இங்கிருந்து மாரியம்மன் புறப்படாகி, மீனாட்சி அம்மன் கோயிலில் கொடிப்பட்டம் பெற்றுத் திரும்புவார். எனவே, மற்ற கோயில்களைப் போல அல்லாது இங்கு மட்டும் இரவு 11 மணிக்குத்தான் விழா கொடியேற்றத்துடன் தொடங்கும். அதைத் தொடர்ந்து தினமும் தெப்பக்குளத்தை வெளிச்சுற்றாகச் சுற்றி அம்மன் வலம் வருவார். பங்குனி மாதம் நடைபெறும் பூச்சொரிதல் விழாவின்போதும் மாரியம்மன் மீனாட்சியம்மன் கோயிலுக்கு எழுந்தருள்வது வழக்கம்” என்றார்.
இதேபோல தைப்பூசத்தன்று மீனாட்சியம்மன் இங்குள்ள தெப்பக்குளத்தில் எழுந்தருளி, தெப்பத்தில் மைய மண்டபத்தைச் சுற்றி வருவார். வசந்த மண்டபத்தில் வைத்து அவருக்குச் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்படும். அன்றைய தினம் மீனாட்சியம்மன் கோயில் நடைசாத்தப்படும் என்பதால், தென்மாவட்டத்திலேயே மிகப்பெரிய தெப்பத் திருவிழாவாக இது கருதப்படுகிறது.
ஆடி மாத அலங்காரங்கள்
ஆடி மாதத்தைப் பொறுத்தவரையில் முதல் வெள்ளியன்று காலையில் ஐந்து தலை நாகத்துடன் சந்தனக்காப்பு அலங்காரத்திலும், மாலையில் சமயபுரம் மாரியம்மன் அலங்காரத்திலும் அம்மன் அருள்பாலிக்கிறார். இரண்டாம் வெள்ளியன்று காலையில் பண்ணாரி மாரியம்மன் அலங்காரத்திலும், மாலையில் வேப்பிலைச்சேலை அலங்காரத்திலும் காட்சி தருவார்.
மூன்றாம் வெள்ளியன்று நாகர்குடை சொர்ணலட்சுமி அலங்காரத்திலும், மாலையில் குங்குமக்காப்பு அலங்காரத்திலும் அருள்பாலிக்கிறார். நான்காம் வெள்ளியன்று காலையில் சரஸ்வதி அலங்காரம், மாலையில் விபூதிக்காப்பு அலங்காரம் நடைபெறும். கடைசி வெள்ளியன்று காலையில் அன்னபூரணி அலங்காரத்துடனும், மாலையில் பூச்சேலை அலங்காரத்துடனும் மாரியம்மன் அருள்பாலிப்பார்.
தீர்த்தத்தின் மகத்துவம்
தலச்சிறப்பு பற்றி அர்ச்சகர் வடிவேல் என்ற சண்முகம் கூறியபோது, “இங்கே மாரியம்மனே பிரதான தெய்வமாக உள்ளதால், பரிவாரத் தெய்வங்கள் கிடையாது. பேச்சியம்மனும், விநாயகரும் மட்டுமே உள்ளனர். இது நேர்த்திக்கடன் தலமாகவும், தீர்த்தத் தலமாகவும் திகழ்கிறது. அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்படுகிற தீர்த்தத்தைப் பெரிய பாத்திரத்தில் எடுத்து வைப்போம். அம்மை பாதிப்பு, கண் மற்றும் தோல் வியாதிகள் உள்ளவர்கள் தீர்த்தத்தை வாங்கிப் பருகினால் குணமேற்படும் என்ற நம்பிக்கை உள்ளது.” என்கிறார்.
இந்த ஆலயத்தில் தினமும் உச்சிகால பூஜை மட்டுமே நடைபெறும். மார்கழி மாதத்தில் மட்டும் காலை ஐந்து மணிக்கு பூஜை நடத்தப்படும். பகலில் நடை சாத்தப்படாத ஆலயம் இது. காலை ஆறு மணி முதல் இரவு ஒன்பது மணி வரை ஆலயம் திறந்திருக்கும். வெள்ளிக்கிழமைகளில் இரவு 10 மணி வரை ஆலயம் திறந்திருக்கும். ஆடி மாதம் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.
நேர்த்திக்கடன்கள்
இந்த ஆலயத்தில் எது வேண்டிக் கொண்டாலும் அது நிறைவேறும் என்ற நம்பிக்கை உள்ளதால் வெளிநாட்டில் வேலைபார்க்கும் தம் வாரிசுகளுக்கு மனச்சஞ்சலம் ஏற்படாமல் இருக்க நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்களும் உண்டு. மதுரைக்கரசி மீனாட்சியாக இருந்தபோதிலும் தெப்பக்குளத்தைச் சுற்றி எந்த வைபவம் நடந்தாலும், மாரியம்மனின் உத்தரவு பெற்றுத்தான் நடத்துவார்கள். பிணி, பயம், திருமணத்தடை, தொழில் பிரச்சினைகள் நீங்கவும், குழந்தைப்பேறு கிடைக்கவும் இங்கே மக்கள் நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். மாவிளக்கு போடுதல், பொங்கல் வைத்தல், தீபம் ஏற்றுதல், உப்பு கொட்டுதல் ஆகிய நேர்த்திக்கடன்களை பக்தர்கள் முறைப்படி செலுத்துகின்றனர்.
படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT