Published : 16 Jul 2015 01:10 PM
Last Updated : 16 Jul 2015 01:10 PM
“மோனம்கை வந்தோர்க்கு முத்தியும் கைகூடும்
மோனம்கை வந்தோர்க்குச் சித்தியும் முன்னிற்கும்
மோனம்கை வந்தூமை யாம்மொழி முற்றும் காண்
மோனம்கை வந்தைங் கருமமும் முன்னுமே.”
மவுனம் என்பதுவும் ஒருவகையான யோகப் பயிற்சிதான். இந்தப் பயிற்சி கைவந்தவர்களுக்கு முத்தியும் கைகூடும். மௌனம் கைகூடியவர்க்கு அட்டமா சித்திகளும் கைகூடும். அவை அவரது ஆணைகளுக்குக் கட்டுப்பட்டு முன்நிற்கும். மவுனம் கைகூடியவருக்கு எழுத்தில்லாத மொழி என்று கூறப்படும் ஊமை மொழியான பிரணவமே அவரது மொழியாக நிற்கும்
. அதாவது அ+உ+ம் என்பதன் கூட்டுத் தொகையாகிய ‘ஒம்’ என்ற பிரணவம் அவரை இயக்கும். இவை அனைத்தும் கைகூடினால் அவர் இறைத்தன்மையை அடைகிறார். அப்போது அவருக்கு இறைவனுக்கொப்பான ஐந்தொழில்களையும் செய்யும் ஆற்றல் வந்து நிற்கும் என்று திருமூலர் கூறுகிறார்.
“ஓங்கார வட்டம் உடலாச்சு பின்னும்
ஊமை எழுத்தே உயிராச்சு
ரீங்காரம் ஸ்ரீ ங்கார மான வகையதை
நீதான் அறிவாய் ஆனந்தப் பெண்ணே”.
என்ற சங்கிலிச் சித்தர் பாடலை இங்கு நினைவு கூர்வோம்.
அதனால்தானோ என்னவோ மகான்களும், ஞானிகளும் சித்தர்களும் மௌனத்தையே தமது மொழியாகத் கொண்டிருப்பதை நாம் அறிவோம். அப்படிப்பட்ட சித்தர்களில் ஒருவர் தான் மௌனகுரு என்று அழைக்கப்பட்ட தவத்திரு முத்துச்சாமி சுவாமிகள் ஆவார்.
தேடியது கிடைத்தது
ம.ரெட்டியபட்டியைப் பூர்வீகமாகக் கொண்ட முத்துச்சாமி சுவாமிகள் பொற்கொல்லர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். தமது குலத்தொழிலான பொன் ஆபரணங்கள் செய்யும் தொழிலைச் செய்துவந்த இவர், ஒருகட்டத்தில் தொழிலைத் தமது மகன்களிடம் ஒப்படைத்துவிட்டுத் துறவறம் பூண்டார். தன்னை அறிந்து கொள்வதற்காகத் தீவிரமான தேடலில் ஈடுபட்டார் .யோகப் பயிற்சிகளை மேற்கொண்டார். அவர் தேடியது கிடைத்தது.
எம்.ரெட்டியபட்டியில் உள்ள கண்மாய்க்கரையில் ஓரு ஆலமரத்தினடியில் எப்போதும் தியானத்தில் ஆழ்ந்திருப்பாராம். சுவாமிகள் தவம் மேற்கொண்ட இடத்திற்கு அருகிலுள்ள தோட்டத்தின் உரிமையாளரான ஓரு மூதாட்டி, தமது தோட்டத்தில் ஒருபங்கு இடத்தைச் சுவாமிகளுக்குத் தானமாகக் கொடுத்தார். ஊர்மக்கள் அந்த இடத்தில் சுவாமிகளுக்கு ஓரு குடிசை அமைத்துக் கொடுத்தனர்.
பஞ்சாட்சரமே அருமருந்து
ஊர்மக்கள் அவரைத் தரிசித்துத் திருநீறு பெற்றுச் செல்வது வழக்கமாக இருந்துள்ளது. இவர் அளிக்கும் பஞ்சாட்சரமே பல வியாதிகளைக் குணப்படுத்தும் அருமருந்தாக இருந்திருக்கிறது. பல சித்துக்களைச் செய்த சுவாமிகள்இ தமது சரீரத்தை விட்டு நீங்கும் காலம் வந்துவிட்டதை அறிந்து, அதனைப் பொதுமக்களுக்கு அறிவித்தார். தமக்கென்று ஓரு சமாதிக் குழியும் தோண்டச் செய்தார்.
சுவாமிகள் அறிவித்தபடி, 1938-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23-ம் நாள்(புரட்டாசி, 7) வெள்ளிக்கிழமை, கிருஷ்ணணபட்ச அமாவாசை அன்று உத்திர நட்சத்திரத்தில் ஊர்மக்கள் திரண்டிருக்க சமாதிநிலையை அடைந்தார். ஊர்ப்பொதுவில் சமாதிப் பீடம் அமைத்து சிவலிங்கப் பிரதிஷ்டை செய்யப்பட்டது. பின்னர் 48 நாட்கள் மண்டல பூஜையும் செய்யப்பட்டது.
இப்போதும் சுவாமிகளின் ஜீவசமாதியில் சுவாமிகளின் அருளாட்சி நிறைந்திருக்கிறது. ஆலயம் முழுவதும் உணர்வுமயமான அதிர்வுகளைக் கொண்டிருக்கிறது . சுவாமிகளின் ஜீவசமாதியைத் தரிசனம் செய்யவரும் ஆன்மிக அன்பர்களின் உணர்வுகளிலும் இந்த அதிர்வு பல அனுபவங்களை ஏற்படுத்தும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
ஜீவசமாதியைத் தரிசிக்க
அருப்புக்கோட்டையிலிருந்து எம்.ரெட்டியபட்டி செல்லும் பேருந்தில் சென்று எம்.ரெட்டியபட்டி பஜார் நிறுத்தத்தில் இறங்கி கண்மாய்கரை வழியாகச் சென்றால் சுவாமிகளின் ஜீவசமாதி ஆலயத்தை அடையலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT