Published : 02 Jul 2015 11:59 AM
Last Updated : 02 Jul 2015 11:59 AM

ஞானசம்பந்தர் கண்ட அதே காட்சிகள்!

ஆனித்தேரோட்டம்

சங்கநான் மறையவர் நிறைதர அரிவையர் ஆடல்பேணத்

திங்கள்நாள் விழமல்கு திருநெல்வேலியுறை செல்வர்தாமே

கி.பி. ஏழாம் நூற்றாண்டில் நெல்லையம்பதியில் கால்பதித்த ஞானசம்பந்தப்பெருமான் அங்கே தான் கண்ட காட்சிகளை இவ்வாறு பதிவு செய்திருக்கிறார். நான்கு வேதங்களைக் கற்ற அந்தணர் கூடி நின்று வேதம் ஓதிவரவும் சிவனடியார்கள் திருமுறை பாடிவரவும், பெண்கள் நாட்டியம் ஆடவும் நடக்கும் நாள் விழாக்களும், மாத விழாக்களும் பொருந்திய திருநெல்வேலி உறையும் செல்வர் என்று அவர் தெரிவிக்கிறார்.

சம்பந்தப் பெருமான் கண்ட அதே காட்சிகள் நூற்றாண்டுகள் ஆன பிறகும் நெல்லையம்பதியில் இன்றும் தொடர்ந்து கண்டுவருவது அவனருளேயன்றி வேறொன்றுமில்லை.

‘தென்றல் வந்துலவிய திருநெல்வேலியுறை செல்வர்தாமே’ என நகரில் உள்ள தட்பவெப்பத்தை அவர் பதிவு செய்கிறார். பொதுவாகவே நம் தமிழகத்தில் தை மாதம் அறுவடைக் காலம் முடிந்துவிடும். தொடர்ந்து வரும் கோடைக் காலத்தில் மக்களுக்குத் தொடர்ந்து உழவுப் பணிகள் இல்லாத ஓய்வுகாலமாதலால் அனைத்து தரப்பு மக்களுக்கும் வேலை கிடைக்க வழிவகை செய்யத் தேர்த் திருவிழாக்கள் சித்திரை மாதத்திலேயே நடைபெறும்.

தென்றல் உலவிவரும் ஆனி

நெல்லையப்பரோ, திருநெல்வேலியுறைச் செல்வர் அல்லவா. அவர் திருவிழா காண்பது திருக்குற்றாலத்துக்குத் தென்றல் உலவிவரும் ஆனி மாதத்தில்தான். லேசாக பொழியும் சாரல் பன்னீர் தூவிவர, இதமான தென்றல் உடலையும், மனத்தையும் இதமாக வருடி வர நெல்லையப்பர், காந்திமதி அம்மையுடன் கடந்த செவ்வாய்க் கிழமை தேரில் ஆடி அசைந்து வந்தார். எத்தனை ஆண்டுகள் பார்த்தாலும் இது கண்கொள்ளாக் காட்சியாகவே இருந்தது.

நெற்றியில் நீறுபூசிய அடியார் கூட்டமும், அவர் இசைக்கும் பஞ்சவாத்திய ஒலிகளும், தாகம் தீர்க்க நீர்மோர், தண்ணீர் அளிப்பது என அவர்தம் சிவத்தொண்டும் காண்பவர் கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருக்கும் காட்சி.

தேரோட்டத்தின் முதல் நாள் மாலை இளவெயிலில் கங்காள நாதராகப் பவனிவரும் இறைவனை எதிர்கொள்ள சன்னிதித் தெருக்களைத் தெளித்துத் தேர்கோலமிடும் மங்கையரின் கலைத்திறம் வியக்கவைக்கும். களைகட்டும் கடை வீதிகளில் குடும்பத்துடன் குதூகலமாய் ஆடவரும், மகளிரும், குழந்தைகளும் உற்சாகத் துள்ளலுடன், அண்ணாச்சி சொகந்தானா, யக்கா வாக்கா என்று கொஞ்சும் நெல்லைத் தமிழோடு வலம் வருவது இம்மண்ணுக்கு மட்டுமே சொந்தமானது.

திருவிழா கொண்டாட்டங்கள்

கண்ணைக் கவரும் பஞ்சுமிட்டாய்க்காரரின் பின்னால் வட்டமிடும் பட்டாம்பூச்சிகளாய் குழந்தைகளும், பலூன் கேட்டு அடம்பிடிக்கும் குழந்தைகளும் நம்மைக் குழந்தைப் பருவத்திற்கே அழைத்துச் செல்கின்றன. தேரில் இழுத்துக் கட்டப்பட்ட முரசின் ஒலியும். ‘சிவநேயச் செல்வர்களே வடத்தை பிடித்துக்கொள்ளுங்கள்’ என்ற அழைப்பும் ஒவ்வொரு அணுவிலும் உற்சாகத்தைத் தூண்டுகின்றன. இளைஞர் பட்டாளத்தின் உற்சாகக் குரல்கள் கேட்கின்றன. குறவன் குறத்தி விற்கும் பாசிமணி மாலைகளும், அவர்கள் கையில் வைக்கும் அச்சு மெகந்தியும் உள்ளத்தை அள்ளும் கொள்ளையழகு. சந்தையில் விற்கும் உறைவாளோடு உலாவரும் வீரபாண்டிய கட்டபொம்மன்களும், குஞ்சலம் கட்டிய சிறுமிகளும், ஆனந்தத்தின் எல்லைக்கே நம்மை அழைத்துச் செல்வது இனிமை.

ஈண்டுமா மாடங்கள் மாளிகை மீதெழு கொடிமதியும்

தீண்டிவந்துலவிய திருநெல்வேலியுறை செல்வர்தாமே

சந்திர மண்டலத்தைத் தீண்டும் கொடிகள் பறக்கும் மாடங்கள் நிறைந்தது திருநெல்வேலி என ஞானசம்பந்தப்பெருமான் பதிவு செய்த திருநெல்வேலி நகர வீதிகள் விழாக்கோலம் பூணுவதைக் காண அடுத்த ஆண்டு ஆனி மாதம் வரையில் காத்திருக்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x