Published : 30 Jul 2015 12:39 PM
Last Updated : 30 Jul 2015 12:39 PM
இப்போதைய அரியலூர் மாவட்டத்திலுள்ள செந்துறை கிராமம், அப்போது சோழப் பேரரசுக்குக் கட்டுப்பட்ட குறுநில மன்னர் பழுவேட்டரையரின் ஆளுகையில் இருந்தது. வன்னி, இலுப்பை மரங்கள் நிறைந்த வனமாகத் திகழ்ந்த இந்தப் பகுதிக்கு நெய்வனம் என்று பெயர்.
நெய்வனத்தில் மகா சித்தர் என்ற மகான் அற்புதங்களை நிகழ்த்திக்கொண்டிருந்தார். இந்நிலையில், நீண்ட நாட்களாக பழுவேட்டரையர், குழந்தை பாக்கியம் இல்லாமல் அவதிப் பட்டார். அந்த வாட்டமே அவரது புத்தியையும் பேதலிக்க வைத்தது. அப்போதுதான், மன்னருக்கு மகா சித்தரின் மகிமை தெரியவந்தது. உடனே மகா சித்தரைச் சந்தித்த மன்னர், தனது மனக்குறையைக் கொட்டினார். அப்போது, சிவனுக்கு ஆலயம் ஒன்றை எழுப்பி வழிபாடு செய்யச் சொன்னார் சித்தர்.
தஞ்சை சென்று ராஜராஜ சோழனிடம் சிவனுக்குக் கோயில் கட்ட அனுமதி கேட்டதோடு, கோயிலைக் கட்டி முடிக்கும் வரை தனது ராஜ்ஜியத்திற்கு, வரிவிதிப்பிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றும் கேட்டார். கோயில் கட்ட அனுமதியளித்த ராஜராஜன், தமது தமக்கை குந்தவை நாச்சியாரின் அறிவுறுத்தல்படி வரி விலக்கும் அளிக்கிறார்.
மகாசித்தரின் நினைவாக
செந்துறையில் சிவனுக்கு திருக்கோயில் எழும்புகிறது. குடமுழுக்கு நடத்துவதற் குள்ளாகவே அரண்மனையில் ஆண்வாரிசு தவழ்ந்தது. மன்னருக்கும் மனச்சிக்கல் தெளிந்தது. கண்ணும் கருத்துமாய் கோயிலை கட்டி முடித்த மன்னர், அதனுள்ளே பிரதிஷ்டை செய்த சிவனுக்கு மகா சித்தரின் நினைவாக ’மஹா சிவன்’ என்று பெயர் சூட்டினார்.
சித்தர் வாக்கின் மகிமையைக் கேள்விப்பட்ட குந்தவை நாச்சியார் அவரை தரிசிப்பதற்காகச் செந்துறைக்கு வருகிறார். அப்போது மஹா சிவன் கோயிலுக்கும் வந்த நாச்சியார், சிவனை வழிபட்ட பிறகு, மன்னரின் மனக் குறையைத் தீர்த்துவைத்த அந்த சிவனுக்கு ‘தீர்க்கபுரீஸ்வரர்’ என்று பெயர்வைத்தார். அன்று முதல், மகா சிவன், தீர்க்கபுரீஸ்வரர் ஆனார். காலப் போக்கில் இந்தப் பெயரும் மருவி சிவதாண்டேஸ்வரர் என்றாகிவிட்டது.
இப்போது செந்துறையின் மையத்தில் இருக்கிறது சிவதாண்டேஸ்வரர் திருக்கோயில். இதன் அருகிலேயே மகா சித்தரின் ஜீவ சமாதியும் இருக்கிறது. ஆனால், மக்களுக்கு இதன் மகிமை தெரியாததால் கவனிப்பாரில்லாமல் இருக்கிறது ஜீவசமாதி. குருநில மன்னருக்குக் குழந்தைப் பேறு கொடுத்த சிவன், இப்போதும் தன்னிடத்தே குழந்தை வரம் கேட்டு வருபவர்களின் மனக்குறைக்கு மருந்தாய்த் திகழ்கிறார்.
பௌர்ணமி தோறும் ஆராதனைகள்
பவுணர்மி தோறும் இங்கே 63 நாயன்மார்களுக்குச் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுவதும் சித்திரையில் நான்கு நாட்கள், 60 சிவனடியார்கள் பெரியபுராணம் முற்றோதல் செய்வதும் இத்திருக்கோயில்ன் தனிச்சிறப்பு. கி.பி. 999-ல் எழுப்பப்பட்ட இத்திருக்கோயில் தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயத்திற்கு முந்தையது. நான்கு பிரகாரங்களைக் கொண்டு விளங்கிய இத்திருக்கோயிலில் இப்போது ஒரு பிரகாரம் மட்டுமே உள்ளது. ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது இத்திருக்கோயிலுக்கு ராஜகோபுரம் கட்டும் திருப்பணி தொடங்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT