Published : 23 Jul 2019 10:13 AM
Last Updated : 23 Jul 2019 10:13 AM

புட்லூரில் கர்ப்பிணியாய் அங்காளம்மன்;  பிள்ளை வரம் தரும் பிள்ளைத்தாய்ச்சி! 

வி.ராம்ஜி
குழந்தை பாக்கியம் வேண்டி, அன்னையை, பராசக்தியை, அம்மனை, மகாசக்தியை தரிசிப்போம்.  அந்த அம்மன், மகாசக்தி, பிரசவகாலத்தில் உள்ள பெண்ணைப் போலவே இருக்கும் காட்சியைத் தரிசித்திருக்கிறீர்களா? புட்லூர் அம்மன் அப்படித்தான் திருக்காட்சி தருகிறாள். 
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ளது புட்லூர். இந்த ஊருக்கு ராமாபுரம் என்றும் பெயர் உண்டு. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து திருவள்ளூர் செல்லும் வழியில், புட்லூர் ரயில்வே ஸ்டேஷன் உள்ளது. இங்கிருந்து சுமார் ஒரு கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது புட்லூர் அங்காளம்மன் திருக்கோயில்.
இங்கே உள்ள அம்மனுக்கு, பூங்காவனத்தம்மன் என்றும் பெயர் உண்டு. ஒருகாலத்தில், பூங்காவனமாகத் திகழ்ந்த பகுதி என்பதால், அங்கே குடிகொண்ட அம்மனுக்கு, பூங்காவனத்தம்மன் என்றே பெயர் அமைந்ததாகச் சொல்கிறது ஸ்தல வரலாறு. 
கருவறையில், நின்ற திருக்கோலத்திலோ அமர்ந்த திருக்கோலத்திலோ அம்மன் இருப்பது வழக்கம். ஆனால் இங்கே, ஓர் பிரசவப் பெண்ணைப் போல, மல்லாந்து படுத்த நிலையில், வயிறு நிறைமாதக் கர்ப்பிணி போல் இருக்க, வாய் பிளந்தபடி அருட்காட்சி தருகிறாள். 
பொதுவாகவே, செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், அம்மனைத் தரிசிக்க ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அதிலும் அம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில், தினமும் பல்லாயிரக்கணக்கான பெண்கள், தங்கள் குறைகளைச் சொல்லி, தீர்வு கேட்டு கண்ணீருடன் வந்தவண்ணம் இருக்கின்றனர். 
ஆடி மாதத்தில், செவ்வாய், வெள்ளி என்றில்லாமல் எல்லாநாளும் பெண்கள் கூட்டம் தேர்க்கூட்டம் திருவிழாக்கூட்டம் என்றிருக்கிறது. கருவறைச் சந்நிதியில், கர்ப்பிணியென படுத்திருக்கும் அம்மனைப் பார்த்தால், உடலும் மனமும் சிலிர்த்துப் போக நின்றுவிடுவோம். அப்படியொரு சாந்நித்தியம் அங்கே வியாபித்திருக்கிறது.
கர்ப்பிணி போல் சந்நிதி கொண்டிருக்கும் பூங்காவனத்தம்மனை, அங்காளம்மனை தரிசித்தாலே, பிள்ளை பாக்கியம் உறுதி என்கிறார்கள் பெண்கள்.
அவளின் திருவடியில் எலுமிச்சையை வைத்துவிட்டு, அருகில் புடவை முந்தானையை விரித்துப் பிடித்துக் கொண்டிருக்க, அந்த எலுமிச்சை உருண்டோடி, முந்தானைக்குள் வந்துவிழுந்தால், குழந்தை வரம் கிடைப்பது உறுதி. கல்யாண வரம் உறுதி என்பது ஐதீகம். 
மேலும் குடும்பத்தில் எப்போதும் பிரச்சினைகள் என்று சிக்கித்தவிப்பவர்கள், நிம்மதியில்லாமல் கலங்குபவர்கள் விரைவில் குடும்பத்தில் குதூகலத்தை அடைவார்கள். நிம்மதியும் சந்தோஷமுமாக இருப்பார்கள் என்கிறார்கள் பெண்கள். 
கருவறையில் கர்ப்பிணியாய் பூங்காவனத்தம்மன். அருகில், விநாயகரும் தாண்டவராயன் எனும் திருநாமத்துடன் நடராஜ பெருமானும் காட்சி தருகிறார்கள். 
ஆலயத்தில், வேம்பு உள்ளது. இந்த வேப்பமரம் ரொம்பவே விசேஷம். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், இங்கு வந்து தங்களது புடவையின் ஓரத்தைக் கிழித்து, அதைத் தொட்டிலாக்கி கட்டுகிறார்கள். ‘கல்யாணமாகி பல வருஷமாச்சு. ஆனா ஒரு குழந்தை பாக்கியம் இன்னும் கிடைக்கல தாயே’ என்று கண்ணீர் மல்க பிரார்த்திக்கிறார்கள். அவர்களின் அத்தனை வேண்டுதல்களையும் நிறைவேற்றித் தருகிறாள் அன்னை. 
வீட்டில் தம்பதி இடையே ஒற்றுமை இல்லையா? சின்னச்சின்ன சச்சரவுகளால் வீட்டில் நிம்மதியே இல்லையா? கடன் தொல்லையில் இருந்து மீள முடியாமல் தவிக்கிறீர்களா? கல்யாணமாகவே இல்லையே என்றும் கல்யாணமாகி பல வருஷமாகியும் குழந்தை பாக்கியம் இன்னும் வாய்க்கலியே என்றும் வருந்துகிறீர்களா? ஒருமுறை... ஒரேயொரு முறை... புட்லூர் பூங்காவனத்தம்மனிடம் வந்து நில்லுங்கள். உங்கள் கண்ணீரை அவளுக்குக் காணிக்கையாக்கிவிட்டு, மனதார வேண்டிக்கொள்ளுங்கள். உங்களின் குறைகளையெல்லாம் போக்கியருள்வாள் அன்னை. 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x