Published : 23 Jul 2015 12:46 PM
Last Updated : 23 Jul 2015 12:46 PM
ஒருகாலத்தில் கார்த்தவீர்யன் என்ற அரசன் ஜமதக்னி முனிவர் மேல் பகையுணர்வு கொண்டிருந்தான். இவனது மகன்கள் இருவர் ஒன்று சேர்ந்து, முனிவரைக் கொன்றுவிட்டனர். அவரது மனைவி ரேணுகா தேவி கணவன் மறைந்த செய்தி கேட்டுத் துக்கம் தாங்கமுடியாமல் தீயை உண்டாக்கி விழுந்துவிட்டாள்.
இக்காட்சியைக் கண்டு மனம் வருந்திய இந்திரன், வருண பகவானை அழைத்து மழையைப் பெய்விக்கும்படி அறிவுறுத்தினான். தீயை மூட்டி அதில் விழுந்த ரேணுகாதேவியை மழை வந்து நனைத்துவிட, வேப்ப மரத்தின் கிளைகளை எடுத்து தன் உடலை மூடிக்கொண்டாள் ரேணுகா தேவி.
பசி எடுத்தபோது அருகில் இருந்த கிராம மக்களிடம் உணவு வேண்டுமெனக் கேட்டாள். அந்த நேரத்தில் அவர்கள், தவசீலரான ஜமதக்னி முனிவரின் மனைவியென்பதால் தனியாகச் சமைத்து உண்ண வேண்டும் என்று சொல்லி வரகு, வெல்லம், பச்சரிசி மாவு, பானகம், இளநீர், காய்கனிகளைக் கொடுத்தனர். அவற்றைத் திரட்டிச் சமைத்துக் கூழாக உண்டாள் ரேணுகா தேவி.
அந்த நேரத்தில் சிவபெருமான் அவள் முன் தோன்றி, “சக்தி தேவியின் அம்சமாக இப்பூமியில் அவதாரம் செய்தவள் நீ! பூமியில் வளரும் பாவங்களைக் களைந்து மனிதர்களுக்கு ஏற்படுகிற வெப்ப நோய்களைக் கட்டுப்படுத்துவாயாக!
அம்மைக் கொப்புளங்கள் உன் பக்தர்களுக்கு வருகிற சமயத்தில் உடனே நீங்கிவிட உனது வேப்பிலையே கைகண்ட மருந்தாக வரும். பச்சரிசி மாவு, பானகம், வெல்லம், இளநீர், கூழ் படைக்கும்போது நீ மாரி சக்தியாக அருள் கொடுத்து அவர்களுக்கு வந்துவிட்ட நோய்களை நீக்குவாயாக!” என்று ஆசி வழங்கினார். இதன் பொருட்டே ஆடியில் அம்மனுக்குக் கூழ் படைக்கும் வழக்கம் வந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT