Published : 23 Jul 2015 12:03 PM
Last Updated : 23 Jul 2015 12:03 PM
நம் உயிருக்கு உயிரான ஒருவர் இறந்துவிட்டால் அந்த இழப்பின் வலி அத்தனை சீக்கிரம் நீங்கிவிடக் கூடியதா என்ன? மரணம் நிகழ்ந்த வீட்டினைப் போல் பெருந்துயர் கொண்ட ஒர் இடம் வேறு எதுவும் இருக்காது. இறந்தவரைத் தெரிந்தவர்களும், அவரோடு நெருங்கிப் பழகியவர்களும் அவரது சாவினைத் தாமதமாக அறிந்தவர்களும் துக்கம் விசாரிக்க வந்து போய்க்கொண்டே இருப்பார்கள்.
நேரடியாக இழப்பை சந்தித்தவர்களுக்கு இப்படி துக்கம் விசாரிக்க வருகிறவர்களால் கிடைக்கும் ஆறுதலைவிட மீண்டும் மீண்டும் துக்கம் நினைவூட்டப்படுவதில் மனமும் உடலும் பாறாங்கல்லைப் புரட்டி வைத்ததுபோல் கனக்கும். கண்ணீரும் வற்றிப்போகும். குரல் கம்மிப்போகும்.
மார்த்தாளும் மரியாளும் அப்படித்தான் இருந்தார்கள். காரணம் கண்ணுக்குள் கண்ணாக அவர்கள் பேணிக் காத்த அவர்களது தம்பி லாசரு இறந்துபோயிருந்தான். அந்த இழப்பை அவர்களால் ஜீரணிக்கவே முடியவில்லை. லாசரு இறந்து நான்கு நாட்கள் ஆகிவிட்டிருந்தன. இரங்கல் தெரிவிக்க ஆட்கள் வந்து போய்க்கொண்டிருந்தார்கள். அழுதுகொண்டிருந்த மார்த்தாளையும் மரியாளையும் பார்த்து “இறந்த லாசரு எழுந்தா வரப்போகிறான். மனதைத் திடப்படுத்திக்கொண்டு ஆக வேண்டியதைப் பாருங்கள்” என்றார்கள். ஆனால் மார்த்தாள் மரியாள் இருவரது உள்ளங்களும் இதுபோன்ற ஆறுதல்களால் சமாதனம் அடையவில்லை.
காரணம் தங்கள் குடும்பத்தின் மீது அன்பாயிருந்த இறைமகன் இயேசுவின் மீது அவர்கள் வைத்திருந்த நம்பிக்கை. அவர் மட்டும் ஊரில் இருந்திருந்தால் நோய்வாய்ப்பட்டிருந்த தங்கள் சகோதரன் இறந்திருக்க மாட்டான் என்று அவர்கள் நம்பினார்கள். அவன் நோயுற்றிருந்த தொடக்கத்திலேயே “ஆண்டவரே.. உங்கள் அன்புக்குரிய நண்பன் லாசரு நோயுற்றிருக்கிறான். விரைந்துவாரும்” என்று இயேசுவுக்கு செய்தியும் அனுப்பினார்கள். ஆனால் இப்போது என்ன செய்ய முடியும் லாசரு இறந்து நான்கு நாட்கள் ஆகிவிட்டன. அவனது உடலை அடக்கம் செய்தாகிவிட்டது. அவன் உடல் அழுகத் தொடங்கியிருக்கும்.
ஆனால் அந்த அற்புதம் நடந்தது. அது எப்படி நடந்தது என்பதை தெரிந்துகொள்ளும் முன் மார்தாள், மரியாள், லாசரு ஆகிய மூவரும் யார்? அவர்களின்பேரில் இயேசு அன்புசெலுத்தியது ஏன்? இந்தப் பின்னணியைக் காண விவிலியத்துக்கு ஒரு சிறு பயணம் போய்வரலாமா..
பெத்தானியா என்ற ஊர்
எருசலேமிலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் மலைச்சரிவில் அமைந்திருக்கும் ஊர் பெத்தானியா. யூதேயா தேசத்தில் அமைந்திருந்த இந்த மலையூரில் வாழ்ந்து வந்த நேர்மையான யூதக் குடும்பம் மார்த்தாளுடையது. பெற்றோரை இழந்த அந்தக் குடும்பத்தின் மூத்தபெண் மார்த்தாள். இளையவள் மரியாள். இவர்களது அன்பான தம்பி லாசரு.
“ஒரு ஏழைத் தச்சரின் மகன், தீர்க்கதரிசனமாக முன்னறிவிக்கப்பட்ட இறைமகனா!? இருக்கவே முடியாது. நமக்குக் கற்பிக்க இந்த நாசரேத் ஊர் இயேசுவுக்கு என்ன தைரியம்? நம்மை மனம்திருந்தும்படி சொல்ல இவர் யார்?” என்று யூதேயா முழுவதும் வாழ்ந்துவந்த யூதர்கள் இயேசுவை வெறுத்து வந்தனர். அப்படிப்பட்டவர்களுக்கு மத்தியில் மார்த்தாளும் மரியாளும் லாசரும் இயேசுவை இறைமகன் என்று நம்பினார்கள். மார்த்தாள் தனது விசுவாசத்தைப் பிரகடனமே செய்தாள்.
“ ஆண்டவரே, நீரே.. கடவுளுடைய மகனாகிய கிறிஸ்து; நீங்கள்தான் இந்த உலகத்திற்கு வர வேண்டியவர் என்று நம்புகிறேன் (யோவான் 11:27)” எனச் சொன்னவள். யாருக்கும் பயப்படமால் இயேசு பெத்தானியா வரும்போதெல்லாம் தங்கள் இல்லத்துக்கு அழைத்து அவருக்கு கவுரவம் செய்து அவரைத் தங்க வைத்தார்கள். அவரது போதனைகளைக் கேட்டு அவற்றைக் கடைபிடித்தார்கள். எதிர்ப்பாளர்களுக்கு மத்தியில் துணிவும் விசுவாசமும் கொண்ட அவர்கள் மீது இயேசு மிகவும் அன்பாயிருந்தார்.
யூதேயாவின் உப்புக்கடல் தொடங்கி மத்தியதரைக்கடலை ஒட்டிய பெனிக்கியோவின் சீதோன் வரை பல ஆயிரம் கிலோ மீட்டர்களுக்கு இயேசு நடந்து சென்று கற்பித்த காலம் அது. யூதர்களுக்கும் கற்பிக்க அவர் யூதேயாவுக்கு வரும்போதெல்லாம் பெத்தானியாவில் இருக்கும் லாசருவின் வீட்டில் தங்குவதை அவர் பாதுகாப்பாக உணர்ந்தார். ஆனால் லாசரு நோய்வாய்ப்பட்டிருந்தபோது இயேசு பெத்தானியாவுக்கு வெளியே போதித்துக்கொண்டிருந்தார்.
மரணமும் உயிர்ப்பும்
தமது நேசத்திற்குரிய நண்பனை இயேசு எப்படியும் காப்பாற்றிவிடுவார் என்று நம்பினார்கள். நிலைமை கைமீறிப் போவதற்கு முன்னால் அவர் வந்துவிடுவார் என மார்த்தாளும் மரியாளும்உறுதியாக நம்பினார்கள். ஆனால் அன்பான தம்பி மரித்துப்போனான். மனமில்லால் அவனை கல்லறையில் அடக்கம் செய்தார்கள். ஆனால் இயேசு வரவில்லை, அவரைப் பற்றி எந்தத் தகவலும் இல்லை. லாசரு இறந்து நான்கு நாட்கள் கழித்து, பெத்தானியாவுக்கு அருகே இயேசு வந்துகொண்டிருப்பதைப் பற்றிய செய்தி மார்த்தாளுக்குக் கிடைக்கிறது. துக்கம் மனதை அடைக்க ஓடோடிப் போய் இயேசுவை எதிர்கொண்டாள்.
இயேசுவைப் பார்த்த கையோடு தன் மனதிலும் மரியாளின் மனதிலும் தேங்கியிருந்த ஏக்கத்தைக் கொட்டுகிறாள். “ஆண்டவரே, நீங்கள் இங்கு இருந்திருந்தால் எங்கள் சகோதரன் இறந்திருக்க மாட்டான்” என்று சொல்கிறாள். மார்த்தாளுடைய நம்பிக்கையும் விசுவாசமும் இன்னும் மறைந்துவிடவில்லை.
எனவே, இயேசுவைப் பார்த்து, “நீர் கடவுளிடம் கேட்பதையெல்லாம் அவர் உங்களுக்குத் தருவாரென்று இப்போதும் நம்புகிறேன்” என்று சொன்னாள். அவளுடைய விசுவாசத்தை இன்னும் பலப்படுத்துவதற்காக இயேசு உடனடியாக அவளிடம், “உன் சகோதரன் எழுந்திருப்பான். கடவுளுடைய மகிமையைக் காண்பாய் (யோவா. 11:21)” என்று சொன்னார். இயேசுவை அவர்கள் லாசருவின் கல்லறைக்கு அழைத்துப்போனார்கள். அதற்குள் ஆயிரக்கணக்கான யூதர்கள் அங்கே திரண்டுவிட்டார்கள்.
கல்லறையை மூடியிருந்த கல்லை எடுத்துப் போடச் சொல்லி இயேசு கட்டளையிட்டார். ஆனால் மார்த்தாள் அதை ஆட்சேபிக்கிறாள். “லாசரு இறந்து நான்கு நாளாகிவிட்டது, நாறுமே” என்று சொல்கிறாள். அதற்கு இயேசு, “நீ நம்பிக்கை வைத்தால் கடவுளுடைய மகிமையைக் காண்பாய் என உனக்குச் சொன்னேன் அல்லவா?” என்று திரும்பவும் அவளுக்குச் சொல்கிறார். அவள் நம்புகிறாள், பரலோகத தந்தையின் மகிமையைப் பார்க்கிறாள். அங்கேயே... அப்போதே... லாசருவை உயிரோடு எழுப்பும் சக்தியை பரலோகத் தந்தை தம் மகனுக்குத் தருகிறார்!
அடுத்து அங்கே நிகழ்ந்த அற்புதம் மரணம்வரை மார்த்தாளுடைய மனதைவிட்டு மறையாமல் இருந்திருக்கும். “லாசருவே, வெளியே வா!” என்று இயேசு அதிகார தொனியில் அழைக்கிறார்; உடனே, உடல் முழுக்கச் சுற்றப்பட்டுள்ள துணியோடு கிடத்தப்பட்டிருந்த லாசருவின் உடல் எழுந்து அமர்கிறது. இப்போது உயிர்பெற்ற உடலோடு அந்தக் கல்லறைக் குகையின் வாசலை நோக்கி லாசரு நடந்து வருகிறார். “இவனுடைய கட்டுகளை அவிழ்த்துவிடுங்கள்” என்று இயேசு கட்டளையிடுகிறார்; அந்த கணம் மார்த்தாளும் மரியாளும் ஓடிப்போய் தங்கள் சகோதரனை நெஞ்சாரத் தழுவிக்கொண்டு ஆனந்தத்தில் அழுகிறார்கள்.
அந்தக் கல்லறையின் கல்லைப்போல அவர்களது மனதை அழுத்திக்கொண்டிருந்த பாரமெல்லாம் நீங்கிவிடுகிறது! மரணத்தை தழுவியவர்கள் உயிர்பெறுவர் என்பது ஏதோ கற்பனை அல்ல. அது நம் மனதைக் குளிர்விக்கும் விவிலிய போதனை. விசுவாசமுள்ளவர்களை ஆசீர்வதிக்க பரலோகத் தந்தையும் அவரது மகனும் எப்போதும் அவர்களோடு இருக்கிறார்கள் என்பதைக் காட்டும் வரலாற்றுப் பதிவு இது. மார்த்தாளுக்கும் மரியாளுக்கும் லாசருவுக்கும் பலன் அளித்த விசுவாசும் உங்களுக்கும் கண்டிப்பாகப் பலன் அளிக்கும். அதற்கு அவர்களைப்போல் நீங்களும் உறுதியான விசுவாசியாக இருக்கமுடியுமா பாருங்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT