Last Updated : 18 Jul, 2019 09:09 AM

 

Published : 18 Jul 2019 09:09 AM
Last Updated : 18 Jul 2019 09:09 AM

நம் சோகம் தீர்க்க காத்திருக்கிறாள் அம்மன்! - ஆடி வெள்ளி மகிமை

வி.ராம்ஜி

நாளைய தினம் ஆடி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை. எனவே நம் சோகங்களையும் தீர்த்து வைத்து அருள்வதற்காகக் காத்திருக்கிறாள் அம்பிகை. எனவே, நாளைய தினம் வெள்ளிக்கிழமையில், மறக்காமல் அருகில் உள்ள அம்மன் கோயிலுக்குச் சென்று வழிபடுங்கள். 
ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் என்பார்கள். ஆடிக் கிருத்திகை, ஆடித்தபசு, ஆடி அமாவாசை, ஆடிப் பெருக்கு என ஆடியில் கொண்டாடுவதற்கும் வழிபடுவதற்கும் பலன் பெறுவதற்கும் ஏராளமான விசேஷங்களும் வைபவங்களும் இருக்கின்றன. 
இவற்றில் மிக மிக முக்கியமானது ஆடி வெள்ளி. பொதுவாகவே, எந்த மாதத்தின் வெள்ளிக்கிழமையாக இருந்தாலும் அம்மனுக்கு உகந்த நாள், அம்பிகைக்கு உகந்த நாள் என்று தரிசித்து மகிழ்வோம். அதிலும் அம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வருகிற வெள்ளிக்கிழமைகள் எல்லாமே மகத்துவம் வாய்ந்தவை. 
இந்த ஆடியிலும் வெள்ளிக்கிழமையிலும் இன்னும் இன்னுமெனக் கனிந்துருகி, நமக்கெல்லாம் அருள்வதற்காகக் காத்துக்கொண்டிருப்பாள் தேவி என்கிறார்கள் ஆச்சார்யர்கள். அதனால்தான் ஆடி வெள்ளி இன்னும் சக்தி மிக்க நாளாக, சங்கடங்கள் அனைத்தும் போக்குகிற தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது. 
ஆடி மாதம் பிறந்துவிட்டது. இதோ... நாளைய தினம் 19ம் தேதி வெள்ளிக்கிழமை. ஆடி வெள்ளி. ஆடி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை. எனவே, இன்றைய தினமான வியாழக்கிழமையில், வீட்டைச் சுத்தப்படுத்தி,கழுவுங்கள். பூஜை மாடத்தை சுத்தப்படுத்தி, விளக்குகளை எடுத்து நன்றாக அலம்பி, துடைத்து வையுங்கள். 
நாளை வெள்ளிக்கிழமை, அதிகாலை 4.30 முதல் 6 மணிக்குள் குளித்துவிட்டு, பூஜையறையில் விளக்கேற்றி நமஸ்கரியுங்கள். முடிந்தால், காலையிலும் மாலையிலும் வீட்டு வாசலில் விளக்கேற்றி வைப்பது இன்னும் நல்ல நல்ல பலன்களையெல்லாம் தரும். 
மேலும் அருகில் உள்ள அம்மன் கோயிலுக்குச் சென்று அம்மனுக்கு செவ்வரளி சார்த்தி வழிபடுங்கள். வெள்ளிக்கிழமை ராகுகாலம் என்பது காலை 10.30 முதல் 12 மணி வரை. எனவே அந்த நேரத்தில், கோயிலுக்குச் சென்று அம்மனை வழிபடுவதும், அந்த ராகுகால வேளையில், கோயிலின் கோஷ்டத்தில் அல்லது தனிச்சந்நிதியில் இருக்கிற துர்கைக்கு எலுமிச்சை தீபமேற்றி வணங்குங்கள். 
ஆடி மாதத்தில், இன்னும் கனிவும் கருணையுமாகக் காட்சி தருவதுடன் நம் சோகங்களையும் தீர்த்து வைக்கக் காத்துக்கொண்டிருக்கிறாள் தேவி என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். 
அதேபோல், ஒவ்வொரு ஆடி வெள்ளிக்கிழமையிலும், அம்மனுக்கு சர்க்கரைப் பொங்கல், கேசரி, கல்கண்டு சாதம், பால் பாயசம் என ஏதேனும் நைவேத்தியம் செய்து அம்பிகையை மனதார வேண்டிக்கொள்ளுங்கள். வீட்டில் தரித்திரம் விலகும்; சுபிட்சம் பெருகும். நிம்மதியும் ஆனந்தமும் இல்லத்தில் குடிகொள்ளும் என்பது உறுதி! 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
     
    x
    News Hub
    Icon