Last Updated : 23 Jul, 2015 11:56 AM

 

Published : 23 Jul 2015 11:56 AM
Last Updated : 23 Jul 2015 11:56 AM

கருடாழ்வாரின் அற்புதங்கள்

ஸ்ரீ கருட ஜெயந்தி ஜூலை 24

எம் பெருமானுடைய அந்தரங்க தாசராய் நின்று சகல கைங்கரியங்களையும் செய்யும் ஸ்ரீ கருட பகவானின் பெருமைகள் எண்ணிலடங்காதவை. வானத்தில் கருட பகவானைப் பார்ப்பதும், அவரது குரல் கேட்பதும் மிகவும் விசேஷமானதாகும்.

ஸ்ரீ கருட பகவான் ஆடி மாதம், சுக்ல பட்சம், சுவாதி நட்சத்திரத்தில் அவதரித்தவர். ஸ்ரீ கருட பகவானுடைய அம்சமாகிய பெரியாழ்வாரும் சுவாதி நட்சத்திரத்தில்தான் அவதரித்தார். ஸ்ரீ நரசிம்மர் அவதரித்ததும் இப்புனித சுவாதி நட்சத்திரத்தில்தான். பொதுவாக சுவாதி நட்சத்திரத்தில் பிறந்த பெண் குழந்தை செல்லும் வீடு லட்சுமி கடாட்சமாக இருக்கும் என்பது மகான்களின் அருள் வாக்கு.

எம்பெருமானுடைய வெற்றியைக் காட்டும் கொடியில் பட்டொளி வீசிப் பறக்கின்றவரும் இக்கருட பகவானே. பக்தர்களுக்கு அறம், பொருள், இன்பம், வீடு எனும் நால்வகை பலனையும் ஒரு சேர அருள்பாலிப்பவரும் கருட பகவானே. நாம் நினைத்த பலனை அற்புதமான வகையில் சாதித்துக் காட்டுபவரும் இவரே.

கருடாழ்வாரின் மகிமைகள்

திருவகிந்தபுரம் சுவாமி வேதாந்த தேசிகருக்கு ஹயக்கிரிவ மூர்த்தியை அருளியது மட்டுமல்லாமல் பல்வேறு வடிவங்களை எடுத்துக்கொண்டு எம்பெருமானுக்குப் பல்வகைத் தொண்டுகளைப் புரிபவரும் கருடாழ்வாரே.

ஆபத்துக் காலங்களில் விரைந்து எழுந்தருளி நம் துன்பங்களைப் போக்குவது மட்டுமல்லாமல், விபத்தால் வரும் மரண பயத்தைப் போக்குபவராகவும் விளங்குகிறார்.

தன்னைத் துதிப்பவர்களுக்கு ஞானம், சக்தி, பலம், ஐஸ்வர்யம், வீரியம், தேஜஸ் போன்றவற்றை வாரி வழங்குபவராய் மட்டுமல்லாமல் நாள் பட்ட கர்ம வினைகளுக்கு அருமருந்தாகவும் விளங்குகிறார்.

எம்பெருமானின் திருமேனிக்கு ஏற்றவாறு இதமான காற்றைத் தரும் சாமரமாகக் கருடன் உள்ளார் என வேதாந்த தேசிகர் கூறியுள்ளார்.

தடைபட்ட திருமணம், புத்திர தோஷம், தீராத வியாதி, வியாபாரத்தில் தொடர் தோல்விகள், சிக்கலான வழக்குகள், தொடர் கடன், அமைதியற்ற இல்லறம், ஏவல் போன்ற பல பிரச்சனைகளுக்கு அருமருந்தாக விளங்குகிறது ஸ்ரீ கருட பகவானின் மந்திரம்.

கண்ணபிரான் இல்லாத போது துவாரகையைக் காத்தருளியவரும் கருடாழ்வாரே.

திருமாலை எழுந்தருளச் செய்தவர்

கருட பகவான் திருப்பதியில் ஸ்ரீ வைகுண்டத்தில் எட்டு விமானங்களில் ஒன்றான கிரிடாஜலத்தைக் கொணர்ந்து அதில் திருமாலை எழுந்தருளச் செய்தார். இதுவே திருமலை திருப்பதியில் பெருமாள் எழுந்தருளியுள்ள ஸ்ரீ ஆனந்த நிலைய விமானமாகும்.

திருப்பதியில் உள்ள சப்த கிரிகளில் ஒன்றுக்குக் கருடாசலம் என்று பெயர்.

கருடன் அருளால் நல்ல ஞாபக சக்தி, வேதாந்த ஞானம், பேச்சு சாதுரியம் உண்டாகும் என ஈஸ்வரர் சம்ஹிதை கூறுகிறது. இவரது நிழல் பட்ட வயல்களில் அமோக விளைச்சல் உண்டாகும் என்பது ஐதீகம்.

பெரும்பாலும் கடவுளின் வாகனங்களுக்கு வாகனம் கிடையாது. ஆனால் இவருக்கு வாகனம் வாயு தேவன்.

இத்தகைய சிறப்புடைய கருட பகவானுக்கு ஆறு விதமான கல்யாண குணங்கள் உண்டு என்பர். இவர் ஒரு பறவையாக இருக்கையில், வானத்தில் கம்பீரமாக அகன்ற பார்வையுடன் அதன் சிறகுகளை அசைக்காமல் ஒரே நிலையில் பறப்பது இராஜ லட்சணம் ஆகும். இந்நிலையில் இதனைத் தரிசிப்பது கோபுர தரிசனதிற்கு ஈடாகும்.

மகாபாரதப் போரின் இறுதியில் பாண்டவர்களுக்கு கருட வியூகத்தில்தான் வெற்றி கிட்டியது.

எல்லா ஆலயங்களிலும் கும்பாபிஷேகத்தின்போது ஸ்ரீ கருட பகவானின் தரிசனத்தை எதிர்பார்ப்பார்கள்.

நேபாளத்தில் ‘கருட நாக யுத்தம்’ என்பது ஒரு பண்டிகை. அப்போது கருடன் திருவுருவத்தில் வேர்வை ஏற்படும். அந்த வேர்வையைத் துணியால் ஒத்தி, பட்டாச்சாரியார் அரசனுக்கு அனுப்புவார். அந்தத் துணியின் நூலிழையைக் கொண்டு பாம்பு கடித்த இடத்தில் வைத்துச் சுற்றினால் உடனே விஷம் இறங்கிவிடும் என்பது அவ்வூர் ஐதீகம்.

ஸ்ரீ கருடன் தன்னுடைய தாயார் ‘வினயதா’ மீது அளவில்லாப் பாசம் கொண்டதால், பெண்களின் வேண்டுதலை உடனடியாக நிறைவேற்றுகிறார்.

கார்கோடன் என்னும் பெரிய நாகத்தின் பெயரைச் சொன்னால் ஏழரை ஆண்டு பீடை போகும் என்பர். அந்தக் கார்கோடனே ஸ்ரீ கருட பகவானுக்கு அடக்கம். ஆகையால் இவரைத் துதிப்பவருக்கு ஏழரை சனியின் கொடுமை தணியும் என்பதும் ஐதீகம்.

இந்தக் கருட பகவானின் குலதெய்வம் பிரகஸ்பதி குரு பகவான் ஆவார். பொதுவாகத் திருமணத்திற்குக் குரு பார்வை வேண்டும் என்பர். ஸ்ரீ கருட பகவானின் அருட்பார்வை வாய்க்கப்பட்டாலே நல்ல இடத்தில் சிரமமின்றி நினைத்தபடி திருமணம் நடந்தேறும் என்றும் பக்தர்களிடையே ஆழ்ந்த நம்பிக்கை நிலவுகிறது.

இவ்வளவு சிறப்புடைய ஸ்ரீ கருட பகவான் ஜெயந்தி, கருட ஸ்தலமான கடலூர் - திருப்பாதிரிப்புலியூரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் மன்மத ஆண்டு ஆடி மாதம் 8 ஆம் நாள் (24.07.15 வெள்ளிக்கிழமை) சுவாதி நட்சத்திரத்தன்று நடைபெறவுள்ளது.

அன்று காலை 7.00 மணிக்கு விசேஷமான வேத மந்திரத்துடன் கூடிய கருட ஹோமத்துடன் மகாதிருமஞ்சனமும், இரவு 7.00 மணிக்கு நறுமண புஷ்பங்களுடன் கூடிய புஷ்ப யாகமும் சுவாமி புறப்பாடும் நடைபெறும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x