Last Updated : 30 Jul, 2015 01:15 PM

 

Published : 30 Jul 2015 01:15 PM
Last Updated : 30 Jul 2015 01:15 PM

மன்னர் வழிபட்ட அரைக்காசு அம்மன்

ஆடி மாதம் என்றாலே சக்தி வழிபாடுதான். நடைபாதை அம்மன் என்றாலும், பெரும் கோயில்களில் உள்ள அம்மன் என்றாலும் கோலாகலமாகக் கொண்டாடப்படுவது இந்த ஆடி மாதத்தில்தான். இது பெண்களுக்கான மாதம்

என்றே சொல்லலாம். புற்றுள்ள அம்மன் கோயில்களில், பெண்கள் புற்றுக்குப் பால் வார்ப்பதும், அம்மனை ஆராதிக்கும் வண்ணம் குலவை இடுவதும் வழக்கம்.

வீதிதோறும் உள்ள அம்மன்களுக்குக் கூழ் காய்ச்சுதலும், நைவேத்தியத்திற்குப் பின் அவற்றை ஏழை, எளியோருக்கு வழங்குதலும் வாடிக்கை. இவ்விழாக்களில் வாண வேடிக்கையும் உண்டு. பிரமாதமான அலங்காரங்களில் வீதி உலா வரும் அம்மன், விடிய, விடிய ஊர்க்காவலில் இருப்பவள் என்கிறார்கள்.

சின்னஞ்சிறிய கிராமங்களில்கூட விநாயகர் சன்னிதியும், மாரியம்மன் கோயிலும் இருப்பது சர்வ சகஜம். அருகம்புல் விநாயகருக்கு உரியது என்றால், வேப்பம் தழை அம்மனுக்கு உரியது. அம்மை நோய் கண்டால் வேப்ப இலைகளையே அம்மனின் பிரசாதமாகக் கருதித் தலையில் சூட்டிக்கொள்வர். இல்லத்தின் வாயிலில் கட்டித் தொங்க விடுவதன் மூலம் மேலும் நோய்க் கிருமிகள் இல்லத்தில் அண்ட விடாமலும், வெளியே பரவி விடாமலும் காப்பது வழக்கம். இல்லத்தில் வேப்ப மரம் இருந்தால் ஆடி மாதத்தில் அதனையே தெய்வமாகப் பூஜிப்பதும் உண்டு.

அரைக்காசு அம்மன்

புதுக்கோட்டை மன்னர்களில் சிலர் திருக்கோகர்ணம் திருக்கோயிலில் உள்ள அன்னை பிரகதாம்பாளைக் குலதெய்வமாகவும், பலர் இஷ்ட தெய்வமாகவும் வணங்கிவந்தனர். அந்நாளில் இந்த அன்னைக்கு நவராத்திரி விழாவினை மன்னர்கள் விமரிசையாகக் கொண்டாடுவார்கள். அப்போது அன்றைய தினத்திற்கு மட்டுமல்லாமல் பல நாட்களுக்கும் அன்னம் கிடைக்க வேண்டும் என்பதற்காக அரிசி, வெல்லம் போன்ற பொருட்களையும், அம்மன் பொறிக்கப்பட்ட அக்காலத்தில் புழக்கத்தில் இருந்த அரைக்காசு ஒன்றையும் சேர்த்து மக்களுக்கு அவர்கள் தானம் செய்து வந்தனர்.

இந்த நிலையில்தான் மன்னர் ஒருவரின் முக்கியமான பொருள் ஒன்று தொலைந்துவிட்டது. எங்கு தேடியும் கிடைக்காத அந்தப் பொருள் கிடைக்க வேண்டும் என்று திருக்கோகர்ணம் பிரகதாம்பாளிடம் பிரார்த்தனை செய்தாராம் மன்னர். தான் வணங்கும் இந்த அரைக்காசு அம்மனே அதனை மீட்டுத் தர வேண்டும் என்று கூறி பிரார்த்தனையை தீவிரப்படுத்தினார். அவர் பிரார்த்தனை பலித்து, தேடிய பொருள் கைக்கு வந்தது என்பது நம்பிக்கை.

அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, வெல்லத்தைப் பிடித்து வைத்து பூஜை செய்துள்ளார். பின்னர் அந்த வெல்லப் பிரசாதத்தைத் தானும் உண்டு, பக்தர்களுக்கும் வழங்கினார். அதனால் அரைக்காசு அம்மனை வேண்டினால் தொலைந்த பொருள் கிடைக்கும் என்ற செய்தி நாடு முழுவதும் பரவியது. அந்த பழக்கம் இன்றும் நடைமுறையில் உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x