Last Updated : 16 Jul, 2015 12:06 PM

 

Published : 16 Jul 2015 12:06 PM
Last Updated : 16 Jul 2015 12:06 PM

விவிலிய வழிகாட்டி: யோபு எனும் உயரிய உதாரணம்!

துயரத்தின் முகமறியாமல் பூமியில் ஒருவர் வாழ்ந்துவந்தார். அவருடைய அந்தஸ்து மலைக் குன்றைப்போல உயர்ந்து நின்றது. ஆஸ்தியோ காட்டருவிபோல் பெருக்கெடுத்துக் கொட்டியது. குறைவில்லா சந்தோஷத்தின் காரணமாக ஆரோக்கியம் அவரிடம் விளைக்கைப்போல் ஒளிவீசியது. ஆனந்தமே உருவாக அவரது குடும்பம் பாசத்தில் திளைத்தது.

மொத்தத்தில் ஊரும் உறவும் போற்ற அவர் சீரும் சிறப்புமாக வாழ்ந்துவந்தார். ஆனால், எதிர்பாராத விதமாக அவரது வாழ்வில் சோதனைகள் சூராவளியாகச் சூழ்ந்து தாக்கின.

ஒரே நாளில் தன் ஆஸ்திகள் அனைத்தையும் இழந்து வீதிக்கு வந்துவிட்டார். திடீரென்று வீசிய சூறாவளிக் காற்று. அவருடைய பிள்ளைகளின் உயிரைப் பறித்துவிட்டுப் போனது. ஆஸ்திகளை இழந்து அவற்றைவிடவும் உயர்ந்த செல்வம் என்று அவர் எண்ணிக்கொண்டிருந்த தன் பிள்ளைச் செல்வங்களை இழந்து மனம் வெந்து நடைபிணமாக இருந்த வேளையில் அவரை ஒரு கொடிய நோய் தாக்கியது.

அந்த நோயின் விளைவாக உச்சந்தலை முதல் உள்ளங்கால்வரை கொப்புளங்கள் பெருகின. அவை தந்த வலி அவரை சித்திரவதை செய்தது. நோயின் வேதனையைப் பொறுக்க முடியாமல் துடியாய்த் துடித்தார். அவர்தான் யோபு. விவிலியத்தில் உள்ள யோபு புத்தகத்தின் முதன்மை கதாபாத்திரம்.

புரட்டிப்போட்ட வாழ்க்கை

“கடந்துபோன மாதங்களில் எனக்கு உண்டாயிருந்த சீர் இப்பொழுது இருந்தால் நலமாயிருக்கும்” என்று (யோபு 3:3; 29:2) யோபு புலம்பினார். சோதனை தன்னை சூழ்ந்துகொண்டு சுழற்றியடிக்கும்போது, கவலையின்றி வாழ்ந்த கடந்த காலத்தை நினைத்துப் பார்ப்பது மனித இயல்புதானே? நேர்மையின் தலைசிறந்த உதாரணமாக யோபு வாழ்ந்தார். அப்படிப்பட்ட மனிதரை எந்தக் கஷ்டமும் அணுகாது என்றே அனைவரும் நினைத்தனர்.

அவரது நேர்மையைக் கண்டு வியந்த, செல்வாக்கும் அந்தஸ்தும் கொண்ட பலர் அவரிடம் அதிக மரியாதை வைத்திருந்தார்கள். அதனால் அவரிடம் ஆலோசனை கேட்டுக்கொள்ள அவரிடம் வந்தார்கள். யோபு செல்வந்தராக இருந்தபோதிலும் பணத்தின் மீது தன் நம்பிக்கை முழுவதையும் வைத்துவிடவில்லை. ஏழை விதவைகளுக்கும் அநாதைக் குழந்தைகளுக்கும் வாரி வழங்கினார். தன் மனைவிக்கு உண்மையுள்ள கணவனாக நடந்துகொண்டார்.

இந்த அளவுக்கு நேர்மை, ஒழுக்கம், இரக்கம் கொண்டவராக வாழ யோபுவை வழிநடத்திச் சென்றது எது? கடவுள்மீதான பக்தியும் அவருக்கு பயந்து வாழும் ஞானமும்தான். “உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாகிய அவனைப் போல பூமியில் ஒருவனும் இல்லை (யோபு 1:1- 8).” என்று யோபுவைக் குறித்து கடவுளாகிய பரலோகத் தந்தை பெருமையுடன் சொன்னார்.

நெறிமுறைகள் பிறழாமல் யோபு வாழ்ந்தபோதிலும், அவரைத் தாக்கிய படு பயங்கரமான சோதனைகள் அவருடைய வசதியான வாழ்க்கையை முற்றாகத் துடைத்துப்போட்டன. தாம் உழைத்து ஈட்டிய செல்வம் முழுவதையும் இழந்தார், குழந்தைகளை இழந்தார், நோயின் வேதனையோடு சேர்ந்துகொண்ட மன வேதனை விரக்தியின் விளிம்புக்கே அவரை அழைத்துச் சென்றது.

யோபுவின் உறுதி

இத்தனை சோதனைகளுக்கு நடுவிலும் கடவுள் மீதான நம்பிக்கையும் ஞானத்தையும் அவர் இழக்கவில்லை. மனைவி பேச்சைக் கேட்டு யோபு கடவுளைத் திட்டவில்லை. ஆனால் மனதளவில் அவர் உடைந்துபோயிருந்தார். “கெட்ட ஜனங்கள் என்னைவிட சந்தோஷமாக இருக்கிறார்களே (யோபு 21:7-9)” என்று ஏக்கமாகக் கூறினார்.

தனக்குச் சாவு வராதா என்றுகூட சில சமயங்களில் நினைத்தார். அதனால்தான், கடவுளை நோக்கி “ நீர் என்னைப் பாதாளத்தில் ஒளித்து, உமது கோபம் தீருமட்டும் என்னை மறைத்து வையும் (யோபு 14:13).” என்று அழுது புலம்பினார்.

தனது ஆட்சியின் மீது கேள்வி எழுப்பிய சாத்தானுக்குப் பாடம் கற்பிக்க, யோபுவை சாத்தான் சோதிக்க கடவுள் ஒப்புக்கொண்டார். ஆனால் யோபுவின் உறுதியால் சாத்தான் தோற்றுப்போனான் “உத்தமத்தில் உறுதியாய் நிற்கிறான்” என்று யோபு பற்றி பரலோகத் தந்தை கூறினார். யோபு ரொம்பவே நொந்துபோயிருந்தார்.

தான் கஷ்டப்படுவதற்கான காரணத்தையும் அவர் அறிந்திருக்கவில்லை. அப்படியிருந்தும், கடவுளிடம் உத்தமமாக இருக்க வேண்டும் என்பதில் அவர் தீர்மானமாக இருந்தார். சோதனை வந்தபோதும் அதை விட்டுக்கொடுக்க அவர் தயாராக இருக்கவில்லை. “என் ஆவி பிரியுமட்டும் என் உத்தமத்தை என்னைவிட்டு விலக்கேன்(யோபு 27:5).” என்று யோபு உறுதியாகக் கூறினார்

நம்மிடம் இருக்கிறதா?

சாவையும் வேதனைகளையும் துச்சமாக மதித்த யோபுவுக்கு இருந்த அதே மனவுறுதி நமக்கும் இருந்தால் எந்தச் சூழ்நிலையிலும் நாம் பரலோகத் தந்தைக்கு உத்தமமாயிருக்க அது உதவி செய்யும். சோதனைகளோ, எதிர்ப்புகளோ, கஷ்டங்களோ எது வந்தாலும் சரி, நம் உத்தமத்தை விட்டு வழுவாமல் இருக்க அது நிச்சயம் உதவி செய்யும்.

கடவுளின் கட்டுப்பாட்டில் இந்த உலகம் இருந்தாலும் சாத்தானின் சோதனைகளுக்குக் களமாகவும் இது இருக்கிறது. அதில் சிக்கி அவனது அடிமைப் பொறியில் மாட்டிக்கொண்டால் மீண்டும் வருதல் அபூர்வம். நம்முடைய சகிப்புத்தன்மையும் உத்தமத்தன்மையும் மட்டுமே சாத்தானை எதிர்த்துப்போரிடத் தகுந்த ஆயுதங்கள்.

சாத்தானால் நாம் சோதிக்கப்படும் காலங்களில் எல்லாம் கடவுளுக்கு உண்மையுள்ளவர்களாக இருக்கிறோம் என்பதை நாம் நிரூபிக்க வேண்டும், அது மட்டுமே முக்கியம். “நம்முடைய உபத்திரவம் அதிசீக்கிரத்தில் நீங்கும்” என்று திருத்தூதர் பவுல் கூறியிருப்பதை இந்த இடத்தில் நோக்குங்கள்.

சில சமயங்களில் கஷ்டங்களும் சோதனைகளும் நம்மை ஓட ஓட விரட்டுவதுபோல் தோன்றலாம், இனிமேலும் நம்மால் பொறுக்க முடியாததுபோல் தோன்றலாம். அப்படிப்பட்ட சூழ்நிலையில் சகித்திருப்பதற்கு யோபுவின் வாழ்க்கை நமக்கு உயரிய உதாரணம். யோபுவின் உறுதியும் சகிப்புத்தன்மையும் உத்தமத்தன்மையும் இறுதியில் அவரை மீட்டன. யோபுவின் தன்மைகள் உங்களிடமும் இருக்கின்றனவா என்று சிந்தித்துப் பாருங்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x