Published : 30 Jul 2015 01:03 PM
Last Updated : 30 Jul 2015 01:03 PM
அசையாத சிவனும் அம்பாளால்தான் அசைந்து காரியத்தில் ஈடுபடுகிறார் என்று வருவதை சயன்ஸ்படி கொஞ்சம் விளக்கிப் பார்த்தால், 'மாட்டர்' என்று பதார்த்தத்தைச் சொல்கிறார்கள். அதன் சுபாவம் 'இனர்ஷியா' என்கிறார்கள் அதாவது சலனமில்லாமல் போட்டது போட்டபடிக் கிடப்பதுதான் என்கிறார்கள். அதனால் 'இனர்ட் மாட்டர்' என்றே சேர்த்துச் சொல்வதாக இருக்கிறது.
ஆனாலும் அப்படிப்பட்ட `இனர்ட் மாட்டர்` பல தினுசில் சலனப்பட்டு, பல தினுசில் ஒன்று சேர்ந்துதான் பிரபஞ்சம் உண்டாயிருக்கிறதென்று நன்றாகத் தெரிகிறது. அப்படியானால் ஏதோ ஒரு பவர், சக்திதானே சலனமில்லாத `மாட்டரை` சலனிக்கும்படியாகப் பண்ணியிருப்பதாக ஆகிறது? அந்தச் சலனமில்லாத `மாட்டரை` தான் சிவன் என்றும் அதைச் சலனிக்க வைக்கும் சக்தியைப் பாரசக்தி, அம்பாள் என்றும் சொல்லியிருக்கிறது.
நிச்சலனமான சிவனும், கிரக நட்சத்திரங்களில் ஆரம்பித்து அணுவுக்குள் உள்ள பரமாணுவரை எல்லாம் சதா சலனித்துக்கொண்டே இருப்பதற்குக் காரணமான சக்தியும் பிரிக்க முடியாமல் ஒன்று சேர்ந்திருக்கிறார்கள் என்பதை அவர் 'மாட்டர்', அவள் 'எனெர்ஜி' என்று சயன்ஸ் அடிப்படையில் விளக்கிச் சொல்லலாம். இணைபிரியாத இரண்டு பேர் என்றாலும் அவர்கள் அடிப்படையில் இரண்டுகூட இல்லை, ஒன்றேதான் என்பதையும் அடாமிக் சயன்சில் 'மாட்ட'ரே 'எனர்ஜி'யாவதாகச் சொல்லியிருப்பதைக் காட்டி உறுதிப்படுத்தலாம்.
ஆனால் ஒரு வித்தியாசம், பெரிய வித்தியாசம். என்னவென்றால், அங்கே ஒரு மாட்டரை எனர்ஜி ரூபமாக்கிய அப்புறம் மாட்டர் இல்லாமல் போய்விடும். இங்கேயோ சிவனும் சக்தியும் எப்போதுமே சாச்வத சத்யமாக இருக்கிறார்கள். சக்தியோக எனெர்ஜி வெளிப்பட்டுக்கொண்டே இருக்கும்போதும் சிவ `மாட்டர்` அழியாமலே இருந்துகொண்டிருக்கிறது.
ஆனால் ஒரு வித்தியாசம், பெரிய வித்தியாசம். என்னவென்றால், அங்கே ஒரு மாட்டரை எனர்ஜி ரூபமாக்கிய அப்புறம் மாட்டர் இல்லாமல் போய்விடும். இங்கேயோ சிவனும் சக்தியும் எப்போதுமே சாச்வத சத்யமாக இருக்கிறார்கள். சக்தியோக எனெர்ஜி வெளிப்பட்டுக்கொண்டே இருக்கும்போதும் சிவ `மாட்டர்` அழியாமலே இருந்துகொண்டிருக்கிறது.
ஏனென்றால் இங்கே 'மாட்டர்' என்பதே ஜடமாக இல்லாமல் உயிரான 'ஸ்பிரிட்'டாக இருக்கிறது. அழியாத, அழிக்க முடியாத ஆத்ம தத்துவமாக இருக்கிறது. சைதன்ய பூர்ணமாக இருக்கிறது. ஜடத்திலேயே ஆரம்பித்து ஜடத்திலேயே முடிந்துவிடும் சயன்ஸ்படியான மாட்டருங்கூட இந்த சைதன்யத்திலிருந்து வந்ததுதான். இப்போது மெள்ள மெள்ள ஐன்ஸ்டீன், சர் ஆலிவர் லாட்ஜ், எடிங்டன் போன்ற பெரிய சயன்ஸ் மேதைகள் அந்த சைதன்ய ஆதாரத்தின் பக்கமாக சயன்சைத் திருப்பி விட்டிருக்கிறார்கள்.
ஆனாலும் அதை லாபரடரியில் எக்ஸ்பெரிமென்ட் பண்ணி நிரூபிக்கவோ, அநுபவிக்கவோ முடியாது. மதாநுஷ்டானத்தினால்தான் அதன் நிரூபணமும், ப்ரத்யக்ஷ அநுபவமும் கிடைக்கும். சயன்சுக்கும் மதத்துக்கும் மாறுபாடுகள் இருந்தாலும் ஒப்புவமை காட்டும்படியும் அநேகம் இருக்கின்றன. ஐன்ஸ்டீனின் ரிலேடிவிடி தியரியிலிருந்து நடந்துள்ள அணு ஆராய்ச்சிக் கண்டுபிடிப்புகள் மத சாஸ்திரங்கள், குறிப்பாக அத்வைத வேதாந்தமும் சாக்த நூல்களும் சொல்வதற்குக் கிட்ட வந்துகொண்டிருக்கின்றன.
லோகத்தில் 'டைம்', 'ஸ்பேஸ்' என்பவை உள்பட எதுவுமே தன்னுடைய ஆதாரத்திலேயே சத்தியமாக இருப்பதல்ல, 'ரிலேடிவா'க இன்னொன்றைச் சார்ந்தே எல்லாமும் ஒரு ஓட்டத்தில் ஓடுகிறபோது அந்த ஓட்டத்தின் தொடர்ச்சியாலேயே அததுவும் சத்தியம் மாதிரி நடைமுறைக்கு இருக்கிறது என்பதுதான் நான் புரிந்துகொண்ட மட்டும் 'ரிலேடிவிடி தியரி'.
பிரம்மம்தான் ஒன்றேயான ஆதார சத்தியம். அதைச் சார்ந்திருப்பதாலேயே சத்தியம் மாதிரித் தோற்றம் அளிக்கும்படியாக மாயை கல்பித்துக் காட்டுகிறதுதான் இந்த லோகம் பூராவும் என்று அத்வைதம் சொல்கிறது. அந்த மாயையாகவே அம்பாளை சாக்த சாஸ்திரங்களும் குறிப்பிடுவதாகச் சொன்னேன். மாயா தத்துவம்தான் 'ரிலேடிவிடி' என்று கொள்வதற்கு நிறைய இடமிருக்கிறதல்லவா? இந்த ரிலேடிவிடிக்கு ஆதாரமான 'அப்சொல்யூட்' என்னவென்று சயன்ஸ் கண்டுபிடிக்கவில்லை.
மத நூல்களும் தத்துவ சாஸ்திரங்களும் அதைத்தான் பிரம்மம், சிவன் என்கின்றன. மதம் 'ரிலிஜன்', தத்துவ சாஸ்திரம் 'ஃபிலாஸஃபி' என்று ஒரு பாகுபாடு சொல்லப்பட்டாலும் நம்முடைய மதத்தில் இந்த இரண்டும் பிரிக்க முடியாமல் சிவ-சக்திகள் மாதிரி ஒன்று சேர்ந்துதான் இருக்கின்றன. புத்தகத்தில் சொன்னது மட்டுமில்லை, அந்த அப்சொல்யூட்டை மகான்கள் ஆத்ம ஸ்வரூபமாக அநுபவித்தும் இருக்கிறார்கள். அதுதான் உயிருக்கெல்லாம் உயிராக இருக்கும் ஒரே உண்மையான உயிர்.
அதாவது ஒன்று மத்தியிலிருப்பது, மற்றது சுற்றியிருப்பது என்பதற்குப் பதில் இரண்டும் பேர் பாதி என்று சொல்லியிருக்கிறது. அதுதான் அர்த்தநாரீச்வர ஸ்வரூபம் - வலது பக்கம் பாசிடிவ் ஸ்வாமி, இடது பக்கம் நெகடிவ் அம்பாள். இப்படிச் சொல்வதிலும் புஷ்டியான காரணம் தெரிகிறது. என்னவென்றால், இடது பக்கம்தானே இருதயம் இருக்கிறது?
தேகம் பூராவுக்குமே அதுதான் சக்தி தருகிறது. ஒரு தேகத்தில் இடது பக்கத்தை விடவும் வலது பக்கம்தான் ஜாஸ்தி பலத்தோடு, 'பவ'ரோடு காரியத்துக்கு உதவுவதாக இருக்கிறது. வாகாக வேலை செய்ய வலது பக்கம்தான் உகந்ததாக இருக்கிறது. வலது கையால் செய்ய முடிகிற மாதிரி இடதால் முடியாது.
வலது பக்க வியாபாரத்தை மூளையின் இடது பக்கம் கன்ட்ரோல் பண்ணுகிறது என்றும், இடது பக்க வியாபாரத்தை மூளையின் வலது பக்கம் கன்ட்ரோல் பண்ணுகிறது என்றும் தெரிகிறது. அதாவது ஜாஸ்தி சக்திகரமாகக் காரியம் பண்ணும் நம்முடைய சரீரத்தின் சிவ சைடுக்கு அப்படி சக்தி கொடுத்து கன்ட்ரோல் பண்ணுவது மூளையின் சக்தி சைடே என்றாகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT