Published : 02 Jul 2015 11:04 AM
Last Updated : 02 Jul 2015 11:04 AM
கணக்குப் பாட ஆசிரியர் காஜா மொய்தீன் வகுப்பு. அவர் எப்போதும் ஒரு கதை சொல்லி விட்டுத்தான் பாடத்திற்குள் நுழைவார். அதனால் அவர் வகுப்பு என்றால் மாணவர்களுக்குப் படுகுஷி.
“அன்பு மாணவர்களே! உங்கள் வகுப்பில் மாதாந்தரத் தேர்வு நடக்கப் போகிறது. தொடங்க இன்னும் 10 நிமிடமே உள்ளது. உங்கள் பக்கத்தில் உள்ள மாணவர் ஏழை. தேர்வுத் தாள் வாங்கக் கையில் காசு இல்லை. உன் கையில் பத்து ரூபாய் உள்ளது. ஒரு ரூபாயை அவனுக்குக் கொடுத்துத் தேர்வுத் தாள் வாங்க உதவுகிறாய். இப்போது உன் கையில் எவ்வளவு மீதம் இருக்கும்?” என்று ஆசிரியர் கேட்டார்.
“ஒன்பது ரூபாய்” என எல்லா மாணவர்களும் ஒரே குரலில் உற்சாகமாகப் பதில் தருகிறார்கள்.
“நீ கொடுத்த பணம், உன் கையில் இருக்கும் பணம் இரண்டும் சேர்ந்து எவ்வளவு” என்று கேட்கிறார் ஆசிரியர்.
“பத்து” என்று பதில் வருகிறது.
சரியான விடை எது?
“தவறு” என உறுதியான உரத்த குரலில் ஆசிரியர் சொல்ல, வகுப்பில் நிசப்தம். மாணவர்களின் கண்கள் ஆசிரியர் மீது குவிகின்றன. ஒரு புத்திசாலி மாணவன் மெதுவாக எழுந்து, “சார்! ஒன்பதும் ஒன்றும் சேர்ந்தால் பத்துதானே சார்?” என்றான்.
“சரியான விடை 709 ரூபாய்” என்றார் ஆசிரியர். ஒன்றும் புரியாது திகைத்த மாணவர்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டனர். ஆசிரியரே தொடர்ந்து பேசினார்:
“அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான், ‘அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது: ஒவ்வொரு கதிரிலும் 100 தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) பன்மடங்காக்குகின்றான்; இன்னும் அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன், யாவற்றையும் நன்கறிபவன் (2:261)’. அல்லாஹ்வின் பாதையிலே செலவு செய்பவர்களுக்கான நன்மை ஒன்றுக்கு எழுநூறு என்றால், உதவிசெய்வதற்காகச் செலவிட்ட ஒரு ரூபாய்க்கு எழுநூறு ரூபாய் மதிப்பு. மீதமுள்ள ஒன்பது ரூபாயைக் கூட்டினால் ரூபாய் 709தானே?” என ஆசிரியர் விளக்கம் தந்தார்.
அள்ளிக் கொடு வள்ளல் ஆகலாம்
‘கொடுத்தால் குறையும்’ என்று தப்புக் கணக்கு போடுகிறான் மனிதன். ‘அள்ளிக் கொடு, உன்னை வள்ளலாக்குவேன்’ என்று சொல்லும் இந்த அழகான திருக்குர்ஆனின் உவமையின் மூலம் பாறை நெஞ்சங்களிலும் ஈரத்தை சொட்ட வைக்கிறான் இறைவன்.
இதில் 71 இடங்களில், வாழ்க்கையின் அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாதவர்களுக்கு உங்கள் செல்வத்திலிருந்து வழங்குங்கள் என்று திரும்பத் திரும்ப அல்லாஹ் குறிப்பிடுகின்றான். இதில் வசதியுள்ளவன் கட்டாயமாக ஏழைகளுக்குக் கொடுக்க வேண்டிய செல்வத்தின் பங்கு ஜகாத், தன் விருப்பத்தின் பேரில் அல்லாஹ்வுக்காக வாரி வழங்கும் ஸதகா ஆகிய இரண்டும் இணைந்துள்ளன.
ஜகாத் எனும் அரபிச் சொல்லுக்குத் தூய்மை செய்தல் என்று பொருள். ஸதகா எனும் சொல்லும் உண்மை, தானம் என்ற பொருளில் ஒருவன் மனமுவந்து கொடுக்கும் செல்வத்தைக் குறிக்கிறது.
எவரொருவர் அளவாகச் சாப்பிட்டு, அதற்கேற்பத் தனக்காகவும் தன்னைச் சார்ந்தவர்களுக்காகவும் உடலை உழைப்பினால் உபயோகப்படுத்துகிறாரோ அவர் நோயற்ற பெருவாழ்வைப் பெறுகின்றார்.
‘தான தர்மங்கள் மனிதனைத் திடீர் இயற்கைச் சீற்றத்திலிருந்தும், அகால மரணத்திலிருந்தும் காப்பாற்றுகிறது’ என்று பல நபிமொழிகள் பதிவாகியுள்ளன. இதுதான் தர்மம் தலை காக்கும், தக்க சமயத்தில் உயிர் காக்கும் எனத் தமிழில் சுட்டிக்காட்டப்படுகிறது. செல்வத்தைச் சேமிக்கச் சிறந்த இடம் ஏழைகளின் வயிறுகள்தான்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT