Published : 22 May 2014 03:50 PM
Last Updated : 22 May 2014 03:50 PM
பாவங்களில் மாட்டுவது மனித இயல்பு. உடனே பாவத்திற்காக வருந்தித் திருந்துவது சிறப்புத் தன்மையாகும். பாவத்திலேயே மூழ்கி வாழ்ந்துகொண்டிருப்பது மடத்தன்மை.
“ஆதமுடைய மக்கள் அனைவரும் பாவம் செய்யக்கூடியவர்களே. தவறு செய்பவரில் சிறந்தவர், செய்த பாவங்களுக்கு மன்னிப்பு தேடுகிறவர்தாம்”. அல்லாஹ்வால் ஒப்புக்கொள்ளப்படும் வணக்கங்களில் முதன்மையானது (தவ்பா) பாவமன்னிப்புத்தான். ‘யானைக்கும் அடி சறுக்கும்’ என்பதற்கொப்ப மனிதனுக்கு மறதி, அறியாமை, ஆத்திரம் முதலியவற்றால் பல தவறுகள் ஏற்படும். அவை தவறு என்று தெரிந்த பின்னும் திருந்திடாமலிருந்தால் பாவம் தலையளவு மூழ்கியபின் சாண் போனால் என்ன? முழம் போனால் என்ன? என்ற கதையாகிவிடும். எத்தனையோ பாவங்களைச் செய்துவிட்டோம், நமக்கு இனி கதியே இல்லை என்று விரக்தியடைந்து, நம்பிக்கையிழந்து, விட்டில் பூச்சி விளக்கைச் சுற்றிச் சுற்றி வந்து தன் உயிரையே மாய்த்துக்கொள்வதைப்போல அப்பாவங்களிலேயே மூழ்கிப் பரிதவிப்போருக்குப் பாவமன்னிப்பு கோரல் சிறந்த மருந்தாகும்.
“நபியே! நான் கூறியதாக நீர் கூறும்! என் அடியார்களே! உங்களில் எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கு இழைத்துக்கொண்ட போதிலும் அல்லாஹ்வின் அருளைப் பற்றி நீங்கள் நம்பிக்கையிழந்துவிட வேண்டாம். நீங்கள் பாவத்திலிருந்து விலகி மனம் வருந்தி மன்னிப்புக் கோரினால் நிச்சயமாக அல்லாஹ், உங்களுடைய பாவங்கள் யாவையும் மன்னித்து விடுவான். ஏனென்றால், அவன் மிக்க மன்னிப்போனும், கிருபையுடை யோனுமாக இருக்கிறான்.”(39:53)
எனவே மனிதர்களாகிய நாம் விழித்தெழுவோம். மானக்கேடான கேவலமான பாவங்களை நினைத்து வருந்தி, இனி இந்த இழிசெயல்களில் ஈடுபடமாட்டேன் என உறுதியான இறுதி முடிவு செய்திடுவோம். நெஞ்சம் உருகிக் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடச் செய்து பாவமன்னிப்பு கேட்போமாக. அவ்வுணர்வு மூலம் பாவமன்னிப்பு கிடைக்கும். நம் தற்பெருமையை ஒழிப்பதன் மூலம் நற்செயலை அல்லாஹ் ஒப்புக்கொள்வான். நாம் புனிதராவோம்.
மறதியால், அறியாமையால் செய்யும் பாவங்களுக்கு மன்னிப்பு உண்டு. எத்தனை தடவைகள் பாவங்கள் செய்தாலும் மன்னிப்புத்தான் உண்டே என்ற மெத்தனத் தன்மைக்குப் போக வேண்டாம். அவ்வாறு எண்ணிவிட்டால் மீண்டும் மீள முடியாது.
மறதியால், அறியாமையால் செய்யும் பாவங்களுக்கு மன்னிப்பு உண்டு. எத்தனை தடவைகள் பாவங்கள் செய்தாலும் மன்னிப்புத்தான் உண்டே என்ற மெத்தனத் தன்மைக்குப் போக வேண்டாம். அவ்வாறு எண்ணிவிட்டால் மீண்டும் மீள முடியாது.
முறைப்படி பாவமன்னிப்பு தேடியவன் அல்லாஹ்வின் நல்ல டியானாகிவிடுகிறான். ஆண், பெண் எல்லோரும் அடிக்கடி அல்லாஹ்வினிடம் பாவமன்னிப்பு (தவ்பா) கேட்டுக்கொண்டே இருப்போம். அல்லாஹ் ஏற்றுக்கொள்வானாக! ஆமீன்.
பாவமன்னிப்புக் கோர சில விதிமுறைகள்:
தான் செய்த பாவங்களை நினைத்து மனம் வருந்துதல்.
இனி அப்பாவங்களைச் செய்யேன் என்று உறுதிகொள்ளுதல்.
கடன் வாங்கிய (அ) அநீதியாக எடுக்கப்பட்ட பொருள்களை உரியவரிடம் கொடுத்துவிடல். அப்பொருளைச் செலவு செய்திருந்தால் (அ) சீரழித்திருந்தால் எப்பொழுது வசதி வருகிறதோ அப்பொழுது உடனே கொடுத்துவிட வேண்டும்.
“அல்லாஹ்வே நான் செய்த பாவங்களை மன்னித்தருள் புரிவாயாக” என கண்ணீர் மல்க, கெஞ்சி இறைஞ்சி வேண்டுதல்.
உள்ளத்தில் பாவமன்னிப்புத் தேட வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டதும் உடனே பாவமன்னிப்புக் கேட்டு மனம் திருந்திட வேண்டும்.
பாவமன்னிப்புக் கேட்டு முடிந்த பின் பாவங்களைச் செய்ய வெட்கப்பட வேண்டும்.
பாவமன்னிப்பைக் கூட்டாகவும் கேட்கலாம். தனியாகவும் கேட்கலாம். தனியாகக் கேட்பது சிறந்ததாகும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT