Last Updated : 11 Jun, 2015 01:00 PM

 

Published : 11 Jun 2015 01:00 PM
Last Updated : 11 Jun 2015 01:00 PM

எது பெரிய யாகம்?

தத்துவ விசாரம்

பரபரப்புடன் வந்த அந்தக் கீரியை அனைவரும் அதிசயமாகப் பார்த்தார்கள். யாக சாலைக்குக் கீரி வருகிறதே என்னும் அதிசயமல்ல. அந்தக் கீரியின் உடலிலிருந்து வெளிப்பட்ட பிரகாசம் அவர்களை வியக்க வைத்தது. சற்றே கூர்ந்து பார்த்தபோது அந்தப் பிரகாசம் கீரியின் உடலின் ஒரு பாதியிலிருந்து மட்டுமே வெளிப்படுவதைக் காண முடிந்தது.

கீரியின் உடலில் ஒரு பாதி பொன்னிறமாக இருந்தது. அந்தப் பாதி தகதகவென ஜொலித்தது. அந்த ஜொலிப்பைக் கண்ட ஆச்சரியத்தில் அனைவரும் ஸ்தம்பித்து நின்றார்கள். எத்தனையோ அதிசயங்களைப் பார்த்த பாண்டவர்களால் இந்த அதிசயத்தை நம்ப முடியவில்லை.

அந்தக் கீரி, யாக சாலையில் ஆங்காங்கே சிதறிக் கிடந்த உணவுப் பொருள்கள் மீது விழுந்து புரண்டது. உணவுப் பொருள்களைத் தேடிச் சென்று புரண்டபடி இருந்தது. சிதறிக் கிடக்கும் உணவைச் சாப்பிட வந்திருக்கிறது என்று நினைத்த பாண்டவர்களுக்கு இதைக் கண்டு குழப்பம். ஆச்சரியம்.

அதைவிட ஆச்சரியமான ஒரு விஷயம் நடந்தது. அந்தக் கீரி சலிப்புடன் சிலிர்த்துக்கொண்டது. அதிருப்தியுடன் உதட்டைப் பிதுக்கியது. போதாக்குறைக்கு வாய்விட்டுப் பேசவும் செய்தது. “ஹும் இதெல்லாம் ஒரு யாகமா?” என்று சொல்லிவிட்டு ஓரமாகச் சென்று படுத்துக்கொண்டது.

பாண்டவர்களுக்கு வந்த கோபம்

பாதி உடலில் பொன்னிறம் கொண்ட அந்தக் கீரியைப் பார்த்துப் பாண்டவர்களுக்கு ஆச்சரியம். அது சொன்ன வார்த்தைகளைக் கேட்டுக் கோபம். இதெல்லாம் ஒரு யாகமா என்னும் வார்த்தை அவர்களைக் கோபப்படுத்தியது.

கோபம் வராமல் என்ன செய்யும்? சாதாரண யாகமா அது? மாபெரும் போர் முடிந்து எதிரிகள் அற்ற பூமியை ஆண்டுவந்த தருமனுக்கு வாழ்வின் வெறுமை உறைக்க ஆரம்பித்தது. நெருக்கடி நேரும்போதெல்லாம் வழிகாட்டும் வியாச மகரிஷி, குரு வம்சம் அழியாமல் காத்த தலைமகன், இப்போதும் உதவினார். அஸ்வமேத யாகம் நடத்து என்றார்.

மாபெரும் யாகம் தொடங்கியது. தொடர்ந்து பல நாட்கள் நடந்தது. ஆயிரக்கணக்கான மன்னர்கள் வந்தனர். நூற்றுக்கணக்கில் புரோகிதர்கள் யாகத்தை நடத்தினார்கள். யாகத்தின் முக்கிய அம்சமாக மாபெரும் அன்னதானம் நடைபெற்றது. ஒவ்வொரு நாளும் பல்லாயிரக் கணக்கில் மக்கள் சாப்பிட்டார்கள். பீமசேனனின் மேற் பார்வையில் அன்னதானம் நடந்தது. அந்த யாகத்தை ஒரு சிறிய கீரிப்பிள்ளை குறை சொன்னால் எப்படி இருக்கும்?

தருமன் அந்தக் கீரியை நெருங்கினான். பாதி உடலில் தங்க நிறம் கொண்ட அந்தக் கீரியைப் பார்த்து, “இந்த யாகத்தை ஏன் குறை சொல்கிறாய்? இதில் என்ன குறையைக் கண்டாய்?” என்று கேட்டான்.

கீரி சொன்ன கதை

கீரி பேசத் தொடங்கியது. ஏழைக் குடும்பம் ஒன்றின் கதையைச் சொல்லத் தொடங்கியது. அந்தக் குடும்பத்தின் தலைவருக்கு வருமானம் ஏதும் இல்லை. அவருக்கு வேலை எதுவும் கிடைக்கவில்லை. வீட்டில் வறுமை தாண்டவமாடியது. ஊரில் கடுமையான மழை வேறு. வெளியில் செல்லவும் முடியவில்லை. அவரும் மனைவியும் குழந்தைகளும் இரண்டு நாட்களாகப் பட்டினி.

கொட்டும் மழையில் எப்படியோ வெளியே போய் கொஞ்சம் மாவு சம்பாதித்துக்கொண்டு வந்தார். அதை நனையாமல் காப்பாற்றுவதற்கே பிரம்மப் பிரயத்தனம் செய்ய வேண்டியதாக இருந்தது. அந்த மாவை வைத்து மாவுருண்டை செய்து குடும்பத்தினர் சாப்பிட உட்கார்ந்தனர். ஆளுக்கு ஒரு உருண்டை கிடைத்தது. கடுமையான பசியுடன் உருண்டையைக் கையில் எடுத்தார்கள். அப்போது வாசலில் ஒரு குரல். “சாப்பிட ஏதாவது இருக்கிறதா?” யாரோ பிச்சை கேட்கிறார்கள். அதிதி தேவோ பவ என்னும் தர்மத்தைச் சிரமேற்கொண்டு கடைப்பிடிக்கும் குடும்பம் அது. சொல்லாமல் கொள்ளாமல் வருபவர்தான் அதிதி. அ-திதி, அதாவது நாள் குறிக்காமல் வரும் எதிர்பாரா விருந்தாளிகள்.

குடும்பத் தலைவர் தன்னுடைய பங்கு மாவுருண்டையை அவரிடம் தந்தார். அதிதி அதைச் சாப்பிட்டுவிட்டு “பசி இன்னும் தீரவில்லை” என்றார். மனைவி தன் பங்கு உருண்டையை எடுத்துக் கொடுத்துவிட்டார். அதையும் சாப்பிட்ட அதிதி, “இன்னும் கொஞ்சம் இருக்குமா? பசி உயிர் போகிறது” என்றார் பலவீனமான குரலில்.

இரண்டு குழந்தைகளில் பெரியவன் சிறிதும் தயங்காமல் தன் பங்கை எடுத்துக் கொடுத்தான். அதைச் சாப்பிட்ட பின்பும் அதிதியின் கண்களில் கோரிக்கை. அடுத்த குழந்தையும் தன் பங்கைக் கொடுத்துவிட்டது. இப்போது அதிதியின் முகத்தில் சிறு திருப்தி.

ஆனால் குழந்தைகள் இருவரும் பசி தாங்காமல் சுருண்டு விழுந்துவிட்டார்கள். பெற்றோர்கள் அதைக் கண்டு பதைத்தாலும் அதிதியைப் பார்த்து, “உங்கள் பசி ஆறியதா?” என்று கேட்டார்கள். அவர் பசி ஆறவில்லை என்று சொன்னால் மீண்டும் வெளியில் சென்று வேறு ஏதேனும் கொண்டுவரத் தயாராக இருந்தார் அந்தக் குடும்பத் தலைவர்.

வளம் கொழித்த வீடு

அதிதியின் முகத்தில் பெரும் திருப்தி. சுருண்டு விழுந்த குழந்தைகளை அவர் தடவிக் கொடுத்தார். இருவரும் எழுந்தார்கள். அந்தக் கணமே அதிதி மறைந்துபோனார். அடுத்த கணமே அந்த வீட்டில் வளம் கொழித்தது. பானையில் அரிசி நிரம்பியது. பிற தானியங்களும் பால் முதலான பொருட்களும் தாமாக நிரம்பின.

வந்தவர் தெய்வீக சக்தி படைத்தவர் என்பதையும் அவர் தங்களைச் சோதிக்க வந்தவர் என்பதையும் அந்தக் குடும்பம் உணர்ந்துகொண்டது.

அப்போது ஒரு கீரி அங்கே வந்தது. சிதறிக் கிடந்த மாவைச் சாப்பிட முயன்றது. மாவு அதன் உடலில் பட்ட இடம் பொன்னாக மாறியது. பார்த்துக்கொண்டிருந்த அவர்களுக்கு வியப்பு. கீரியால் தன் கண்ணை நம்ப முடியவில்லை. அப்போது ஒரு அசரீரி ஒலித்தது.

“இந்த ஏழைக் குடும்பம் செய்தது மகத்தான யாகம். தனக்கு ஒன்றுமே இல்லை என்னும் நிலையிலும் வீடு தேடி வந்த அதிதிக்கு உணவளித்தது யாகங்களுக்கெல்லாம் பெரிய யாகம். இதேபோன்ற யாகம் நடக்கும் இடத்தில் சிதறிக் கிடக்கும் உணவுப் பொருள்களின் மீது உருண்டு பார். உன் உடல் முழுவதும் தங்கமாகும்” என்றது அந்த அசரீரி.

கீரி கதையை முடித்தது. “நானும் அதன் பிறகு யாகம் நடக்கும் இடத்துக்கேல்லாம் போய்ப் பார்த்தேன். ஒன்றும் நடக்கவில்லை. தருமபுத்திர மகாராஜா நடத்தும் யாகத்தைப் பற்றிப் பெரிதாகச் சொன்னார்களே என்று இங்கே வந்தேன். இங்கும் எனக்கு வேண்டியது கிடைக்கவில்லை” என்று சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு அகன்றது.

யாக சாலையை விட்டு வெளியேறும் அந்தக் கீரியையே பார்த்துக்கொண்டிருந்த பாண்டவர்களுக்கு யாகத்தின் உண்மை யான பொருள் புரிந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x