Published : 25 Jun 2015 12:54 PM
Last Updated : 25 Jun 2015 12:54 PM

சமணம்: கள்ளகுளத்தூர் காணீரே

திருமுருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் காட்சியளிக்கும் மயிலம் கோயிலுக்கு அருகே நான்கு கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது கள்ளகுளத்தூர் கிராமம். இங்குதான் ஆதியாய் உலக இயல்பை அளித்த ஆதிநாதர் வீற்றிருக்கும் அழகிய ஜினாலயம் உள்ளது. இந்த ஆலயம் பழைமையானது.எழுபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் சீரமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆலயத்தில் கருவறை, அர்த்த மண்டபம், முகமண்டபம், குடவரை ஆகியவைகள் அமைந்துள்ளன. கோயிலின் உள்ளே மேடையில் இருபத்து நான்கு தீர்த்தங்கரர்கள், நான்முக பிம்பம், நவதேவதை, காவல் தெய்வங்களான பிரம்மதேவர், தருமதேவி, பத்மாவதி, சுவாலாமாலினி ஆகிய சிலைகள் இருக்கின்றன.

இக்கோயிலில் ஓரே கல்லால் உருவாக்கப்பட்ட மானஸ்தம்பம் எனும் மனத்தூய்மைக் கம்பம் மிக நேர்த்தியாகவும் அழகாகவும் காணப்படுகிறது.இது செய்யப்பட்டு பல ஆண்டுகளாகியும் புதியது போலவே இன்றும் பொலிவோடு திகழ்கிறது.

இதன் அடிப்பகுதியில் கிழக்கே வினைகளை வென்ற விருஷப தேவரும், தெற்கே பிறவிப் பெருங்கடலை நீந்த செய்யும் சந்திர பிரபரும் மேற்கே ஆன்ம வளம் வழங்கிய வாசுபூஜரும் வடக்குப்பகுதியில் எவ்வுயிர்க்குஞ் செந்தண்மை பூண்டொழுக என போதித்த சாந்திநாதரும் வடிக்கப்பட்டுள்ளனர். இதன் முன் அமைக்கப்பட்டுள்ள தடைநிவர்த்தி மேடை (பலி பீடம்)அழகாகக் கண் கவரும் வண்ணம் நிறுவப்பட்டுள்ளது. மேளம் வாசிக்கும் மண்டபம் தனியாகக் கட்டப்பட்டுள்ளது.

சமண மாமுனிவரின் திருப்பாதக் கமலங்கள்

ஸ்ரீபத்மாவதிதேவி தனிக் கருவறையில் எழுந்து அருள் தருகிறார். நவக்கிரகங்களும் நிறுவப்பட்டுள்ளன. ஆலயத்தின் குடவரை மதிற்சுவருடன் அமைக்கப்பட்டுள்ளது. உட்பிரகாரத்தில் வடகிழக்கில் ஒரு பெரிய மேடை அமைத்துள்ளனர். இந்த ஜினாலயத்திற்கு அருகில் கற்பாறையில் ஒரு சமண மாமுனிவரின் திருப்பாதக் கமலங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

பக்கத்தில் நூல்கள் வைத்துப் படிக்கும் சிக்குப் பலகை, பிட்சு எனப்படும் மயிற்தோகை, கமண்டலம் ஆகியவை செதுக்கப்பட்டுள்ளன.அவற்றின் அருகில் “நிர்வாண பரம ஜினதேவர்” என்று எழுதப்பட்ட கல்வெட்டு காணப்படுகிறது. இத்திருவடிகளை சமணர்கள் போற்றி வணங்கிவருகிறார்கள்.

இந்த பரமஜினர் பெயர், திருநறுங்கொண்டை எனும் சமணப் புண்ணியத் திருத்தலத்தின் கல்வெட்டில் காணப்படுகிறது. அவ்வூர் கோபுர அடிப்பகுதியை இம்மாமுனிவர்தான் கட்டுவித்தார் எனக் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x