Published : 18 Jun 2015 11:47 AM
Last Updated : 18 Jun 2015 11:47 AM
அந்தப் பெண் ஜென்துறவியின் பெயர் ரெங்கெட்சு. மிகச் சில பெண்கள் தான் உயர்ந்த ஜென் ஞானத்தை அடைந்தவர்கள். அவர்களில் ஒருவர் ரெங்கெட்சு.
ரெங்கெட்சு தனது யாத்திரையின் நடுவில் ஒரு கிராமம் வழியாகச் சென்று கொண்டிருந்த போது மாலை கவிழ்ந்தது. இரவில் அங்கேதான் தங்கவேண்டும் என்று முடிவு செய்த அவர், ஒவ்வொரு வீடாகச் சென்று தங்குவதற்கு இடம் கோரினார். அவர்கள் ஜென் பவுத்தத்துக்கு எதிரானவர்கள். அவர்கள் சம்பிரதாயவாதிகள். அவர்கள் அந்தப் பெண் துறவியைத் தங்கள் இல்லங்களில் தங்கவைக்க மறுத்தனர். ரெங்கெட்சுவின் பசியை ஆற்றும் வகையில் ஒரு கவளம் உணவைக் கூட அவர்கள் தர மறுத்துவிட்டன.
ரெங்கெட்சு கிராமத்துக்கு வெளியே நடந்து போனார். நடுங்கும் குளிரில் பசியோடு, வயல்களின் நடுவில் நின்றுகொண்டிருந்த தனி செர்ரி மரத்தின் அடியில் சென்று அமர்ந்தார். சில்லிடும் குளிரால் தூக்கம் வரவில்லை. கொடும் விலங்குகள் உலவும் இடம் வேறு.
நள்ளிரவில் தூங்கியும் தூங்காமல் கண்விழித்தார் ரெங்கெட்சு. இலையுதிர்காலத்து நீல இரவு வானத்தைப் பார்த்தார். அவர் அமர்ந்திருந்த செர்ரி மரத்தின் மொட்டுகள் பனியால் படர்ந்த நிலவைக் கண்டு சிரிப்பதைப் பார்த்தார் ரெங்கெட்சு. அவர் பார்த்த காட்சியின் அழகில் மெய்சிலிர்த்த ரெங்கெட்சு மிகுந்த நன்றியுணர்ச்சியோடு கிராமம் இருக்கும் திசை நோக்கி நடந்தார்.
“அவர்களது அன்பினால் எனக்குத் தங்க இடம் கொடுக்க மறுத்ததால், நான் பனிபடர்ந்த நிலவொளி வீசும் இரவில் பூமொட்டுகளைப் பார்க்க முடிந்தது” என்று தனக்குள கூறிக்கொண்டார் ரெங்கெட்சு.
அவர் நன்றியுணர்வால் தளும்பினார். கிராமத்தவர்கள் அவருக்கு இடம் தந்திருந்தால், அவர் ஒரு சாதாரணக் கூரையின் கீழ் தூங்கியிருப்பார். செர்ரிப்பூ இதழ்கள் நிலவோடு கிசுகிசுப்பதை அவரால் கேட்டிருக்கவே முடியாது. இந்த இரவின் ஆழ்ந்த அமைதியை அவர் உணர்ந்திருக்கவே முடியாது.
வாழ்க்கை எதையெல்லாம் கொண்டு வருகிறதோ அதையெல்லாம் நன்றியுடன் ஏற்கும்போதே ஒருவன் புத்தர் ஆகிறான்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT