Published : 18 Jun 2015 11:34 AM
Last Updated : 18 Jun 2015 11:34 AM
நாம் அனைவரும் பிச்சைக்காரர்களே. நாம் எதைச் செய்தாலும் பிரதிபலனை எதிர்பார்க்கிறோம். நாம் அனைவரும் வியாபாரிகள். வாழ்க்கையில் நாம் வியாபாரிகள், தர்மத்தில் நாம் வியாபாரிகள், மதத்தில் நாம் வியாபாரிகள், அந்தோ! அன்பிலும் நாம் வியாபாரிகளே.
நீ வியாபாரம் செய்ய வந்திருக்கிறாயானால், அது கொடுக்கலும் வாங்கலும் பற்றியதானால், விற்பதும் வாங்குவதும்தான் உனது ஒரே எண்ணமானால் வியாபார விதிகளைப் பின்பற்று. வியாபாரத்தில் நல்ல காலம் உண்டு. கெட்ட காலமும் உண்டு. விலை உயர்வதும் தாழ்வதும் உண்டு. எப்போது வேண்டுமானாலும் நஷ்டங்கள் வரும்.
கண்ணாடியில் உன் முகத்தைப் பார்ப்பது போன்றது அது. அங்கு உன் முகமே பிரதிபலிக்கிறது. நீ முகத்தைக் கோணலாக்கிக்கொண்டால் கண்ணாடியிலும் கோணல் தெரியும், நீ சிரித்தால் அங்கும் சிரிப்பு. இதுதான் வாங்கலும் விற்றலும், கொடுப்பதும் கொள்வதும்.
நாம் சிக்கிக்கொள்கிறோம். எப்படி? கொடுப்பதால் அல்ல; கொடுத்ததற்காக எதையோ எதிர்பார்ப்பதால். நமது அன்பிற்குப் பிரதியாக துயரத்தைப் பெறுகிறோம். ஏன்? அன்பு செய்ததால் அல்ல, பிரதியாக அன்பை எதிர்பார்த்ததால்தான்.
தேவை தீர்ந்த இடத்தில் துயரம் இல்லை. ஆசை, தேவை இவையே எல்லா துயரங்களுக்கும் தந்தை. ஆசைகள், வெற்றி தோல்வி நியதிகளுக்குக் கட்டுப்பட்டவை. ஆசைகள் துயரத்தை விளைவித்தே தீரும்.
எதையும் வேண்டாதீர்கள். பிரதியாக எதையும் விரும்பாதீர்கள். நீங்கள் கொடுக்க வேண்டியதைக் கொடுத்துவிடுங்கள். சேமிப்பதற்காக நீங்கள் வாழ்க்கையில் புகுந்தீர்கள்.
கைகளை இறுக மூடிக்கொண்டே எடுக்க விரும்புகிறீர்கள். ஆனால் இயற்கை உங்கள் தொண்டையைக் கையால் அழுத்தி, உங்கள் கைகளை விரியச் செய்கிறது. விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் நீங்கள் கொடுத்தேயாக வேண்டும்.
`நான் கொடுக்க மாட்டேன்’ என்று நீங்கள் சொல்லும் அந்தக் கணமே அடி விழுகிறது. நீங்கள் காயம் அடைகிறீர்கள். கதிரவன், கடலிலிருந்து நீரை முகர்ந்துகொள்வது, அதனை மழையாகத் திரும்ப அளிப்பதற்கே. கொள்வதற்கும் கொடுப்பதற்கும் ஆனதோர் எந்திரம் மட்டுமே நீங்கள். கொள்வது கொடுப்பதற்கே.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT