Published : 25 Jun 2015 12:11 PM
Last Updated : 25 Jun 2015 12:11 PM
உண்மையாக, இயல்பாக இறைவனைத் தேடுவதே பக்தி யோகம். இந்தத் தேடல் அன்பில் தொடங்கி, அன்பில் தொடர்ந்து, அன்பிலேயே நிறைவுறுகிறது. இறைவனிடம் தீவிர அன்பு வெறி நம்மிடம் கணப்பொழுது தோன்றினால் போதும்.
அது அழிவற்ற முக்தியைத் தந்துவிடும். நாரதர் தமது பக்தி சூத்திரங்களில், `இறைவனிடம் நாம் பூணும் ஆழ்ந்த அன்பே பக்தி’ என்கிறார். `அதைப் பெறுகின்ற ஒருவன் அனைவரையும் நேசிக்கிறான். யாரையும் வெறுப்பதில்லை.
என்றென்றைக்குமாகத் திருப்தியுற்றுவிடுகிறான்’ `உலகப் பொருட்களை அடைவதற்குரிய ஒரு சாதனமாக இந்த அன்பைப் பயன்படுத்தக் கூடாது’. ஏனெனில் ஆசைகள் இருக்கும்வரை இத்தகைய அன்பு வராது.
பக்தி நமது ரிஷிகளின் முக்கியக் கருத்தாக இருந்துவந்துள்ளது. பக்தி ஆச்சாரியர்களான சாண்டில்யர், நாரதர் போன்றோர் மட்டுமன்றி, ஞானத்தையே சிறப்பித்துப் பேசுபவர்களும், வியாச சூத்திரங்களின் உரையாசிரியர்களுமான ஆச்சாரியர்களும் பக்தியைச் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இறைவனை அடைவதற்குரிய நெறிகளில் பக்தி எளிமையானதும் மனித இயல்புக்கு ஏற்றதுமான நெறியாகும். இது பக்தி நெறியினால் வருகின்ற பெரியதொரு நன்மை.
இறைவனை மன ஏக்கத்துடன் நாடும்போதுதான் உண்மையான பக்தி உண்டாகிறது. உண்மையான பக்தி அது யாரிடம் உள்ளது? இதுதான் கேள்வி. இறைவனின் தேவையை உணர வேண்டும்.
அந்த ஆசை உன்னிடம் எழும்வரை, உன் அறிவாலோ, உனது சாஸ்திரங்களாலோ, உருவங்களாலோ, நீ எவ்வளவுதான் பாடுபட்டாலும் ஆன்மிகத்தைப் பெற முடியாது.
அந்தத் தாகம் உன்னிடம் எழும்வரை, நீ நாத்திகனைவிட மேலானவன் அல்ல. நாத்திகன் நேர்மையாகவாவது இருக்கிறான். உன்னிடம் அதுவும் இல்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT